Search This Blog

Monday, January 6, 2014

Idly Maavu

#இட்லிமாவு : தமிழர்களையும் இட்லியையும் பிரிக்க முடியுமா?!! முடியாதல்லவா??!!..  #இட்லி மாவு எப்படி தயாரிப்பது என கற்றுக் கொள்வதுதான் தமிழ் சமையலின் மிக மிக முக்கியமானதாகும். வழி வழியாக இந்த உணவு தயாரிக்கும் முறை கற்று கொடுக்கப்பட்டு வருகிறது. அதே வழியில் நானும் என் அம்மாவிடமிருந்து இட்லி மாவரைப்பது  எப்படி என்று கற்றுக் கொண்டேன். முன்பு தினமும் பெரும்பாலான வீடுகளில் மாலை நேரத்தில் மாவு அரைப்பதுதான் முக்கிய வேலை. இப்போது போல மின்சாரத்தில் இயங்கும் மாவு அரைக்கும் இயந்திரம் வீடுகளில் கிடையாது. ஆட்டுக்கல்லில்தான் அரைக்க வேண்டும். ஒருவர் அரைக்க, மற்றொருவர் எதிரில் உட்கார்ந்து தள்ளி விட, மாவு அரைப்பதே ஒரு கலையாக திகழ்ந்தது.
உடனே ஆட்டுக்கல்லில் அரைத்த இட்லி போல் இப்போது இல்லை என்று சொல்பவர்களும் உண்டு. ஆனால் அப்படி சொல்லமுடியாது. கையால் ஆட்டுக்கல்லில் அரைப்பதை விட மிக மிக நன்றாக கிரைண்டேரில் மாவு அரைத்து எடுக்கலாம்.
நாங்கள் அடிக்கடி மாறுதலாகி வெவ்வேறு இடங்களில் வசிப்பவர்கள்.
வேறு ஊருக்கு மாறுதலாகி செல்லும் பொது முதலில் இட்லிக்கு அரைக்க தேவையான அரிசி எங்கு கிடைக்கும் என்று தேடுவதுதான் முதல் வேலை.
இட்லிக்கு புழுங்கரிசி தேவை. எல்லா புழுங்கரிசியும் இட்லிக்கு ஏற்றது அல்ல.

நாங்கள் தமிழகத்தில் இருந்த வரை IR 20 அரிசி வகையின் புழுங்கரிசியைதான் இட்லிக்கு பயன் படுத்தி வந்தேன். ஒரு சிக்கலும் இல்லாமல் இட்லி அருமையாக வந்து கொண்டிருந்தது. அம்மாவின் இட்லி போல் இல்லையென்றாலும் நான் செய்யும் இட்லியின் ருசியில் குறையொன்றும் இல்லை.
பிறகு பெங்களூருக்கு மாற்றலாகி சென்றவுடன் வெவ்வேறு அரிசி கொண்டு இட்லி செய்து பார்த்து மிளகி என்ற வகையின் புழுங்கரிசியில் இட்லி செய்தால் நன்றாக வரும் என அறிந்து கொண்டோம். சில கடைகளில் அங்கு அதை சேலம் அரிசி என்றும் கூறுவார்கள். ஆனாலும் சில சமயம் அரிசி அரைக்கும் பொது மிகவும் கொழ கொழப்பாகி கிரைண்டரே சுத்த முடியாமல் சுற்றும். கொழகொழப்புத் தன்மையை குறைக்க சிறிது பச்சரிசியை சேர்த்து, புழுங்கரிசியின் அளவை சற்றே குறைத்து செய்து பார்த்தேன். பின்பு இட்லி நன்றாக செய்ய முடிந்தது.
இது போல ஒவ்வொரு ஊருக்குப் போகும் போதும் சரியான பதத்தில்  இட்லி செய்ய மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் ஆகி விடும்.
கேரள மாநில தலைநகரில் வசித்த போது இட்லிக்கு சரியான அரிசி கிடைக்காமல் சிரமப் பட்டோம். பக்கத்தில் நாகர்கோயில் சென்று அரிசி வாங்கி வந்து கொண்டிருந்தோம்.
சென்னையில் கடைகளில் இட்லிக்கு உபயோகிக்கும் அரிசி பேர் என்னவென்று கேட்டால் நாம் என்னவோ கேட்க கூடாததை கேட்டது போல ஒரு பார்வை பார்ப்பார்கள். 24 ரூபாய் அரிசியா? 26 ரூபாய் அரிசியா ? என்பார்கள் கடை காரர்கள்!!
இப்போது இங்கு மத்திய இந்தியாவில் இட்லி அரிசியை கண்டு பிடித்து விட்டோம். இங்கு சுற்றி இருக்கும் மற்ற மாநிலத்தவர்கள் என்னிடம் கேட்கும் ஒரு கேள்வி எப்படி உங்களுடைய இட்லி மட்டும் மிகவும் மிருதுவாக இருக்கிறது. எங்களுக்கு அவ்வாறு வருவதில்லை என்பதுதான்.

இட்லி ஒழுங்காக வருவதற்கு அரிசி மற்றும் உளுந்தின் அளவு மிக மிக முக்கியம்.
அடுத்து அரைக்கும் முறையில் கவனம் தேவை.
இது எல்லாவற்றையும் விட புளிக்க வைப்பது மிக மிக முக்கியமாகும்.

தேவையான பொருட்கள் :


4 கப்  குவித்து                        இட்லி அரிசி ( Boiled Rice )
1 கப்  தலை தட்டி                 உளுத்தம் பருப்பு
1/2 Tsp                                          வெந்தயம்
4 Tsp                                             உப்பு

செய்முறை :
அரிசியை ஒரு பாத்திரத்தில் எடுத்து 2 அல்லது 3 முறை நன்றாக கழுவி
தேவையான அளவு தண்ணீர் விட்டு 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

ஒரு சிறிய கிண்ணத்தில் வெந்தயத்தை கழுவி ஊற வைக்கவும்.

பெரும்பாலும் தோல் நீக்கிய உடைத்த பருப்பை உபயோகிப்பதால் அரைப்பதற்கு அரை மணி நேரம் முன்பு ஊறவைத்தால் போதும்.

முழு தோல் நீக்கிய உருண்டை உளுந்தாக இருந்தால் அரிசி ஊற வைக்கும் போதே ஊற வைத்து விடவும்.


இப்போது கிரைண்டரை கழுவி அரிசியை போட்டு தேவையான தண்ணீர் விட்டு அரைக்கவும்.

மாவு ரவா போல கொர கொர என்று அரைத்ததும் ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். பாத்திரம் பெரியதாக இருப்பது மிக அவசியம். மாவு மேலே பொங்கி வருவதற்கு இடம் இருக்க வேண்டும்.
அரிசி மாவு சிறிது கெட்டியாக இருக்க வேண்டும்.


பிறகு உளுத்தம் பருப்பையும் வெந்தயத்தையும் சேர்த்து போட்டு அரைக்கவும்.
சரியான தண்ணீர் விட்டு நல்ல பந்து போல் வரும் வரை அரைக்கவும்.
சிறிதளவு அரைத்த உளுந்தை தண்ணீரில் போட்டால் மிதக்க வேண்டும்.


அரைத்த உளுந்து மாவையும் அரைத்த அரிசி மாவு உள்ள பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
சிறிது தண்ணீர் விட்டு கிரைண்டரில் ஒட்டி இருக்கும் மாவை கழுவி அரைத்த மாவுடன் சேர்க்கவும்.
உப்பு சேர்த்து நன்கு கலக்கி விடவும்.

இட்லி மாவு

ஆறிலிருந்து எட்டு மணி நேரம் மாவை புளிக்க விட வேண்டும்.
மாவு நன்றாக பொங்கி வர வேண்டும்.
அப்போதுதான் இட்லி மெத்தென்று இருக்கும்.

மாவு 6 அல்லது 8 மணி நேரத்திற்கு பிறகு இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேக வைத்து சூடான இட்லியை தயாரிக்கலாம்.
மீதமுள்ள மாவை குளிர் சாதனப் பெட்டியில் பத்திர படுத்தவும்.

குறிப்பு :
[ 23.08.2020 அன்று திருத்தியது, #சித்தரஞ்சன், மேற்கு வங்காளம்  ]
நாங்கள் பெரும்பாலும் இந்தியாவின் பிற மாநிலங்களில் வசிப்பவர்களாக இருக்கிறோம். அதனால் இட்லி அரிசி என்று குறிப்பிட்டு வாங்க முடியாது. ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல கடைகளில் விற்கப்படும் புழுங்கரிசியை கொண்டுதான் இட்லி தயாரிக்க முடியும். முதலில் பச்சரிசி மற்றும் புழுங்கரிசி இரண்டையும் வெவ்வேறு விகிதங்களில் ஊறவைத்து அரைத்து இட்லி தயாரித்துக் கொண்டிருந்தேன்.

இப்போது ஒரு புதிய முறையை கையாள்கிறேன்.
கிரைண்டரில் அரிசி மாவு அரைக்கத் தொடங்கும் போது, ஒரு டேபிள் ஸ்பூன் கெட்டி அவல் நன்றாகக் குவித்து அளந்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும். ஒரு முறை கழுவிய பிறகு சிறிது தண்ணீர் விட்டு ஊறவைக்க வேண்டும். அரிசி அரைத்து மாவை வழிக்கும் முன்னர் ஊறவைத்த அவலை போட்டு அரை நிமிடம் அரைத்து பின்னர் வழித்தெடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் இப்போது இட்லி மிக மிக மென்மையாக தயாரிக்க முடிகிறது.
--------------------------------------------------------------------------------------------------------------------

குறிப்பு : கொடுக்கப்பட்டுள்ள அளவு கிரைண்டரில் அரைப்பவர்களுக்கு மட்டுமே.
மிக்சியில் அரைப்பதானால் விகிதங்கள் மாறு படும்.
அவை :
3 கப் குவித்து                         இட்லி அரிசி
1 கப் தலை தட்டி                   உளுத்தம் பருப்பு
1/2 Tsp                                         வெந்தயம்
3 Tsp                                            உப்பு

இட்லி ரவா கொண்டு செய்யும் போது
1 கப்                                          இட்லி ரவா
1/2 கப்                                       உளுத்தம் பருப்பு
1/4 Tsp                                        வெந்தயம்
1 Tsp                                           உப்பு

உளுத்தம் பருப்பையும் வெந்தயத்தையும் அரைத்து இட்லி ரவாவுடன் உப்பு சேர்த்து கலந்து புளிக்க வைத்து இட்லி செய்யவும்.




மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க

குதிரைவாலி இட்லி இட்லி சுடும் முறை பொடி இட்லி
இட்லி உப்புமா சோள இட்லி காஞ்சிபுரம் இட்லிி


தொட்டுக்கொண்டு சாப்பிட

தொட்டுக்க

மற்ற பலகாரங்களுக்கு

டிபன் வகைகள்

இந்த சமையல் செய்முறை விளக்கம்  மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.



4 comments:

  1. உபயோகரமான தகவல்... இது போல உளுந்தையும் அரிசி யை யும் தனி தனி மாவு பவுடராக அரைத்து வச்சிகிட்டு அப்பப்ப மிக்ஸ் பன்னி இட்லி சுட்டால் சரியாக வருமா மேடம்

    ReplyDelete
  2. அருமை அருமை அம்மணி -^- நன்றி

    ReplyDelete
  3. மிகவும் அருமை மிக்க நன்றி

    ReplyDelete
  4. குழந்தைகளுக்கு காலையில் விரைவாக செய்யும் உணவு வகைகள் மற்றும் சட்டென்று செய்யும் தீனி வகைகள் சொல்லுங்கள் ப்ளீஸ்

    ReplyDelete