Search This Blog

Tuesday, July 29, 2014

Broken Wheat Coriander Pongal

#கோதுமைரவா #கொத்தமல்லி #பொங்கல் : கொத்தமல்லி ஒரு பெரிய கட்டு மார்கட்டிலிருந்து வாங்கி வந்து விட்டேன். சட்னி மற்றும் துவையல் அரைத்த பின்னரும் மீதி இருந்தது. என்ன செய்யலாம் என யோசித்த போது,....  காலை உணவிற்கு பொங்கலுடன் கொத்தமல்லியையும் சேர்த்து செய்யலாமே என முடிவு செய்தேன்.
இனி எப்படி என பார்க்கலாம்.



தேவையான பொருட்கள் :
3/4 கப்                                         கோதுமை ரவா
1/4 கப்                                         பயத்தம் பருப்பு
2                                                   பச்சை மிளகாய், கீறி வைக்கவும்
5 - 6 பற்கள்                              பூண்டு, பொடியாக நறுக்கவும்
1/2 அங்குல                              இஞ்சித்துண்டு, நசுக்கிகொள்ளவும்
1 Tsp                                            சீரகம்
1 Tsp                                            மிளகு
1 1/2 Tsp                                      உப்பு [ அட்ஜஸ்ட் ]

தாளிக்க :
1 Tsp                                             சீரகம்
1 Tsp                                             மிளகு
10 - 15                                          கறுவேப்பிலை
2 Tsp                                             முந்திரி பருப்பு துண்டுகள்
1 Tsp                                              நெய்
1 Tsp                                              நல்லெண்ணெய்

அலங்கரிக்க கொத்தமல்லி தழை சிறிது.

செய்முறை :
குக்கரில் கோதுமை ரவாவையும் பருப்பையும் எடுத்துக்கொள்ளவும்.
இரு முறை நீர் விட்டு கழுவிக்கொள்ளவும்.
நீரை வடித்து விட்டு 4 கப் தண்ணீர் சேர்க்கவும்.
பின்னர் கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருட்களை சேர்த்து நன்கு கலக்கி விடவும்.


குக்கரை மூடி வெயிட் வைக்கவும்.
அடுப்பில் அதிக தீயில் 3 விசில் வரும் வரை வேக விடவும்.
பின்னர் தீயை குறைத்து 5 நிமிடங்கள் வேக விடவும்.
ஆவி அடங்கிய பின்னர் திறக்கவும்.


ஆவி அடங்குவதற்குள் மற்றொரு அடுப்பில் எண்ணெய் சட்டியை வைத்து எண்ணெய் மற்றும் நெய்யை ஊற்றி சூடாக்கவும்.
சீரகத்தை வெடிக்க விட்ட பின்னர் மிளகு சேர்த்து பொரிந்தவுடன் கறுவேப்பிலை சேர்க்கவும். கறுவேப்பிலை பட படவென பொரிந்து அடங்கிய பின்னர் பொங்கலின் மேல் கொட்டவும்.
அதே வாணலியில் முந்திரியையும் சிவக்க வறுத்து சேர்க்கவும்.
நன்கு கரண்டியால் கிளறி விடவும்.
உப்பு சரி பார்க்கவும்.தேவையானால் சிறிது சேர்த்து கிளறவும்.

சூடாக இருக்கும் போதே பரிமாறும் தட்டில் இட்டு கொத்தமல்லி சட்னி அல்லது தேங்காய் சட்னி அல்லது பொங்கல் துவையலுடன் சுவைக்கவும்.






Sunday, July 27, 2014

Noodles in Tomato Sauce

#நூடுல்ஸ் தக்காளி சட்னியுடன் : சில நாட்களுக்கு முன் குளிர் சாதனப்பெட்டியில் காலையில் இட்லிக்கு செய்த தக்காளி சட்னி பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இரவு உணவிற்காக யோசித்துக் கொண்டிருந்த போது ஒரு அருமையான யோசனை தோன்றியது.

நூடுல்ஸை வேக வைத்து அதன் மேல் இந்த தக்காளி சட்னியை ஊற்றி சாப்பிட்டால் என்ன என்று. இது ஒரு வகையில் Fox Traveller டிவியில் காண்பிக்கப்படும் சமையல் நிகழ்ச்சியினை தவறாமல் பார்ப்பதனால் கூட இருக்கலாம்!!

இந்த தக்காளி சட்னி நூடுல்ஸ் சுவை மிகவும் பிடித்து விட்டது. அதனால் இது டிபன் பட்டியலில் இடம் பெற்று விட்டது.

இப்போது இங்கே எப்படி செய்வது என பார்க்கலாம்.

நூடுல்ஸ் தக்காளி சட்னியுடன்


தேவையான பொருட்கள் :
200 கிராம்                                    நூடுல்ஸ்

தக்காளி சட்னிக்கு


3                                                      தக்காளி
1                                                      வெங்காயம், பொடியாக நறுக்கவும்
2 Tbsp                                             கொத்தமல்லி தழை
1 Tbsp                                             புதினா [ இருந்தால் ]
1 Tbsp                                             பச்சை பட்டாணி [ இருந்தால் ]
1/2                                                  குடைமிளகாய், துண்டுகளாக்கவும்.
10                                                    கறுவேப்பிலை
2                                                     பச்சை மிளகாய், நீள வாக்கில் கீறி வைக்கவும்.
1/4 Tsp                                            பெருங்காயதூள்
1/2 அங்குல                                 இஞ்சி துண்டு, நசுக்கி கொள்ளவும்

பொடிகள் :
1/4 Tsp                                           மிளகாய்த்தூள்
1 சிட்டிகை                                மஞ்சத்தூள்
1/4 Tsp                                           சீரகத்தூள்
1 Tsp                                              மல்லித்தூள்
1 Tsp                                              உப்பு [ அட்ஜஸ்ட் ]

தாளிக்க :
1 Tsp                                              சீரகம்
2 Tsp                                              எண்ணெய்

அலங்கரிக்க கொத்தமல்லி மற்றும் ஒரிகனோ சிறிதளவு.

செய்முறை :
தக்காளியை மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்து தனியே வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
சூடானதும் சீரகத்தை வெடிக்க விடவும்.
கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து சில மணித்துளிகள் வதக்கவும்.
மஞ்சத்தூள் மற்றும் மிளகாய்த்தூளை சேர்த்தவுடன் வெங்காயம் கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
அதனுடன் இஞ்சி மற்றும் புதின சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிறிது வதங்கிய பின்னர் மல்லித்தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.
பொடிகளின் பச்சை வாசனை போன பிறகு பச்சை பட்டாணி மற்றும் குடை மிளகாய் சேர்த்து இலேசாக வதக்கவும்.
தக்காளி சாறை சேர்த்து கிளறி விடவும்.


1/2 கப் தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க விடவும்.


5 முதல் 7 நிமிடம் வரை சிறிய தீயில் கொதிக்க விடவும்.

அடுப்பில் தக்காளி சட்னி கொதித்துக்கொண்டிருக்கும் போதே மற்றொரு அடுப்பில் வாயகன்ற பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் கொதிக்க விடவும்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் நூடுல்ஸ், தேவையான அளவு உப்பு மற்றும் 1 Tsp எண்ணெய்  சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிடவும்.

வெந்ததும் வடிகட்டி கஞ்சி போக சிறிது நல்ல தண்ணீரால் அலசவும்.
பின்னர் தனியே வைக்கவும்.

இதற்குள் தக்காளி சட்னி ஒன்று சேர்ந்தார்போல வந்திருக்கும். கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.


பரிமாறும் கிண்ணத்தில் நூடுல்ஸை எடுத்து அதன் மேல் தக்காளி சட்னியை ஊற்றி, கொத்தமல்லி மற்றும் ஒரிகனோ தூவி சுவைக்கவும்.

நூடுல்ஸ் தக்காளி சட்னியுடன்

சுவை மிக மிக அருமையாக இருக்கும்!!!
செய்து சுவைத்துதான் பாருங்களேன்!!




மேலும் சில சமையல் குறிப்புகள் செய்து சுவைக்க
  • படத்தின் மீது அம்புக்குறியை வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்துகொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் பதிவிற்கு செல்லலாம்.
அவல் உப்புமா எலுமிச்சை அவல் உப்புமா சேமியா உப்புமா சைவ ஆம்லட் சேமியா பாயசம்





இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.




Saturday, July 26, 2014

Pudhina Briyani

#புதினா #பிரியாணி : என்னுடைய தோட்டத்தில் புதினா செடிகள் நன்றாக வளர்ந்து ஒரு படுக்கை போல் அடர்ந்துள்ளது. அதனால் அன்றாட சமையலில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு புதினாவை உபயோகித்து வருகிறேன். அந்த வகையில் இங்கு புதினாவை உபயோகித்து செய்த பிரியாணி செய்முறையைக் காண்போம்.


தேவையான பொருட்கள் :


1/2 cup                                         பாசுமதி அரிசி
1 cup                                            புதினா இலைகள்
1/4 cup                                         கொத்தமல்லி தழை நறுக்கியது
1                                                  வெங்காயம் நீள வாக்கில் அறிந்து கொள்ளவும்
1                                                 தக்காளி, துண்டுகளாக்கவும்
1/4 cup                                         காலிப்ளவர் துண்டுகள்
1                                                  குடை மிளகாய், பொடியாக அறிந்துகொள்ளவும்
1                                                  காரட், துண்டுகளாக்கிகொள்ளவும்
1                                                  பச்சை மிளகாய், கீறி வைக்கவும்
8 cloves                                       பூண்டு
1 inch long piece                            இஞ்சி

4                                                  கிராம்பு
2                                                  ஏலக்காய்
2                                                  ப்ரிஞ்சி இலை
2                                                  அன்னாசி மொக்கு
1 inch long                                    இலவங்கப்பட்டை
1/2 Tsp                                         சீரகம்
1/2 Tsp                                        சோம்பு [ பெருஞ்சீரகம் ]

1/4 Tsp                                         மிளகாய் தூள்
1/2 Tsp                                         மல்லி தூள்
1/4 Tsp                                         சீரகத்தூள்

3 Tsp                                            எண்ணெய்

செய்முறை :
இஞ்சியையும் கொடுக்கப்பட்டுள்ள பூண்டில் பாதியையும்  மிக்ஸியில் விழுதாக அரைத்து தனியே எடுத்து வைக்கவும்.
கொடுக்கப்பட்டுள்ள புதினாவில் பாதியையும் கொத்தமல்லியில் சிறிது அலங்கரிக்க எடுத்து வைத்து விட்டு மற்றனைத்தையும் மிக்ஸியில் விழுதாக அரைத்து தனியே எடுத்து வைக்கவும்.
அரிசியை ஒரு முறை கழுவி விட்டு தண்ணீரில் ஊற வைக்கவும்.

மிதமான தீயில் குக்கரை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
முதலில் சீரகத்தையும் சோம்பையும் வெடிக்க விடவும்.

பின்னர் மற்ற வாசனை சாமான்களை போடவும்.

சில மனிதுளிகளுக்குப் பிறகு கீறி வைத்துள்ள பச்சை மிளகாயை சேர்த்து சிறிது வதக்கவும்.
இப்போது பூண்டை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
அதன் பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.


வெங்காயம் இலேசாக பொன்னிறமாகும் வரை வதங்கிய பின்னர் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

தக்காளி துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்.
கொடுக்கப்பட்டுள்ள பொடிகள் அனைத்தையும் சேர்த்து வதக்கவும்.

பின்னர் காரட், காலி ப்ளவர் ஆகியவற்றை போட்டு சிறிது வதக்கிய பின்னர் புதினா கொத்தமல்லி விழுதை சேர்க்கவும்.


ஒரு பிரட்டு பிரட்டி விட்டு அரிசியிலிருந்து தண்ணீரை வடித்து விட்டு சேர்க்கவும்.
அரிசி வெள்ளையாக நிறம் மாறும் வரை வதக்கவும்.


கடைசியாக புதினா இலைகள் மற்றும் உப்பு சேர்த்து சில மணி துளிகள் வதக்கவும்.


ஒரு கப் தண்ணீர் விட்டு குக்கரை மூடி வெயிட் வைக்கவும்.
அதிக தீயில் 3 விசில் வரும் வரை வேக விடவும்.
3 விசிலுக்கு பின்னர் தீயை குறைத்து 3  நிமிடங்கள் வேக விடவும்.
ஆவி அடங்கியபின் குக்கரின் மூடியை திறக்கவும்.

அதற்குள் மற்றொரு அடுப்பில் எண்ணெய் சட்டியை வைத்து 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு 2 சிட்டிகை உப்பை சேர்க்கவும்.
பின்னர் பொடியாக நறுக்கிய குடை மிளகாயை சேர்த்து முக்கால் பாகம் வேகும் வரை வதக்கி எடுத்து தனியே வைக்கவும்.


ஆவி அடங்கிய பின்னர் குக்கரை திறந்தவுடன் வதக்கி வைத்துள்ள குடை மிளகாயை சேர்த்து கிளறவும்.

பரிமாறும் தட்டில் எடுத்து வைத்து தயிர் பச்சடியுடன் சுவைக்கவும்.


பன்னீர் கறியுடன் அல்லது குருமாவுடனும் சாப்பிட அருமையாக இருக்கும்.




Onion Red Chutney

#வெங்காயம்சிகப்புசட்னி : மிக எளிதில் செய்யக்கூடிய கார சாரமான சட்னியாகும். தேவையான பொருட்களனைத்தும் பச்சையாகவே அரைப்பதனால் உடலுக்கு மிக மிக நல்லது. இனி செய்வதெப்படி என பார்க்கலாம்.

வெங்காயம் சிகப்பு சட்னி

தேவையான பொருட்கள் :
8 - 10                                         சிகப்பு மிளகாய்
15 - 20                                       சின்ன வெங்காயம் உரித்தது
அல்லது
2                                                பெரிய வெங்காயம், துண்டுகளாக்கவும்
30                                              கறுவேப்பிலை
1/2 Tsp                                       உப்பு


செய்முறை :
மிக்ஸி பாத்திரத்தில் மிளகாய், உப்பு இரண்டையும் பொடி பண்ணிக்கொள்ளவும்.
பின்னர் வெங்காயம் மற்றும் கறுவேப்பிலை சேர்த்து நன்கு மைய அரைத்துக்கொள்ளவும்.
வெங்காயத்தின் தண்ணீரே சட்னியை அரைக்க போதுமானது.
தேவையானால் சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்.

இந்த சட்னி இட்லி மற்றும் தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
தட்டில் இட்லிக்கு பக்கத்தில் ஒரு தேக்கரண்டி இந்த சட்னியை வைத்து ஒரு தேக்கரண்டி நல்லெண்ணையை சட்னியின் மேல் விட்டு சுவைத்தால் மிக மிக அருமையாக இருக்கும்.




மேலும் சில சட்னி வகைகள்

பூண்டு தக்காளி சட்னி தக்காளி கொத்தமல்லி சட்னி வெங்காயம் தக்காளி சட்னி



Friday, July 25, 2014

Jeera Rice

#சீரகசாதம் : சீரக சாதம் எளிமையாகவும் மிக சுலபமாகவும் செய்ய கூடியது. நான் வசிக்கும் ராய்ப்பூரில் மதிய உணவு மற்றும் இரவு உணவு ஆகியவற்றில் பூரி அல்லது ரொட்டியுடன் சீரக சாதமே பரிமாறப்படுகிறது.

இந்த சீரக சாதத்தின் மேல் பருப்பு விட்டு சாப்பிடுகிறார்கள்.
இனி எவ்வாறு செய்வது என காணலாம்.

சீரக சாதம்

தேவையான பொருட்கள் :
1/2 கப்                                      பாசுமதி அரிசி அல்லது பச்சரிசி
1 Tsp                                         சீரகம்
1                                               அன்னாசி மொக்கு
1                                               ப்ரிஞ்சி இலை
1 அங்குல                            இலவங்க பட்டை துண்டு
1 Tbsp                                      பச்சை பட்டாணி [ இருந்தால் ]
2 Tsp                                        நெய் அல்லது எண்ணெய்
1 Tsp                                        வெள்ளை மிளகுத்தூள் [ விரும்பினால் ]

செய்முறை :

அரிசியை ஒரு முறை கழுவி நீரை வடித்து விட்டு நல்ல தண்ணீரில் ஊற வைக்கவும்.

அடுப்பில் குக்கரை வைத்து நெய் விட்டு சூடாக்கவும்.
சீரகத்தை முதலில் வெடிக்க விடவும்.
பின்னர் மற்ற வாசனை பொருட்களை போட்டு வறுக்கவும்.

ஊறிக்கொண்டிருக்கும் அரிசியில் இருந்து தண்ணீரை வடித்து விட்டு குக்கரில் சேர்க்கவும்.

சிறிது நேரம் வறுக்கவும். நன்கு வெள்ளை நிறமாக அரிசி மாறியவுடன் பட்டாணியை சேர்க்கவும்.

தேவையான அளவு உப்பு மற்றும் 1 கப் தண்ணீர் சேர்க்கவும்.
கரண்டியால் நன்கு கலக்கிய பின்னர் மூடி வெயிட் பொருத்தவும்.

அதிக தீயில் 3 விசில் வரும் வரையும், பின்னர் சிறிய தீயில் 3 நிமிடங்கள் வரையும் வேக விடவும்.
அடுப்பை அணைத்து விடவும்.

நீராவி முழுவதுமாக வெளியேறும் வரை காத்திருக்கவும்.
இதற்கு சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் ஆகும்.

சீரக சாதம்

பின்னர் திறந்து மிளகு தூளை சேர்த்து கரண்டியால் கிளறி பரிமாறும் தட்டில் எடுத்து வைக்கவும்.
இங்கு சுரைக்காய் மோர் குழம்புடன் பரிமாறப் பட்டுள்ளது.

சீரக சாதம்

தங்களுக்கு விருப்பமான குருமா அல்லது பன்னீர் மசாலாவுடனும் சுவைக்கலாம்.




Rasagulla

#ரசகுல்லா [ #Rasagulla ] : இந்த இனிப்பு வகை கொல்கத்தாவில் மிக மிக பிரசித்தமானது. பாலை திரித்து செய்யப்படும் பன்னீரை கொண்டு செய்யப்படும் இனிப்பாகும்.
சுமார் 20 வருங்களுக்கு முன் நான் பெங்களூரில் வசித்த போது ஒரு பெங்காலி பெண்மணியிடம் இதன் செய்முறையை கற்றறிந்தேன்.
இப்போது எவ்வாறு செய்வது என காண்போம்.


தேவையான பொருட்கள் :
1 லிட்டர்                                     பால்
2 - 3 Tbsp                                       வினிகர் / எலுமிச்சை சாறு
1/2 Tsp                                            ரவா

சர்க்கரை பாகிற்கு :
1 1/2 கப்                                       சர்க்கரை
3 1/2 கப்                                       தண்ணீர்

செய்முறை :
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பாலை காய்ச்சவும்.
பால் பொங்கியதும் அடுப்பை அணைத்து விடவும்.
ஐந்து நிமிடங்கள் காத்திருக்கவும்.
ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு  1 Tbsp வினிகர் / எலுமிச்சை சாறு சேர்த்து கரண்டியால் கலக்கவும்.


பால் இலேசாக திரிய ஆரம்பிக்கும்.
மேலும் 1 Tbsp  வினிகர் / எலுமிச்சை சாறு  விட்டு கலக்கவும்.


பால் நன்கு திரிந்து தண்ணீர் சிறிது வெளிர் பச்சை நிறமாக மாறினால் போதுமானது.


இல்லையென்றால் சிறிது வினிகர் / எலுமிச்சை சாறு  சேர்த்து கலக்கி நன்கு திரிய விடவும்.
திரிந்த பாலை அப்படியே 5 நிமிடங்கள் வைத்திருக்கவும்.

பின்னர் ஒரு துணியின் வழியே மற்றொரு பாத்திரத்தினுள் வடிகட்டவும்.
வடிகட்டிய தண்ணீர்  வே [ whey ] என்று கூறப்படுகிறது.


இது புரோட்டீன் நிறைந்தது.
அதனால் கீழே கொட்ட வேண்டாம்.
சாதம் சமைக்க, சப்பாத்தி மாவு பிசைய போன்றவற்றிற்கு பயன் படுத்திக் கொள்ளலாம்.

துணியின் நுணியை கட்டி பாத்திரம் விளக்கும் தொட்டியின் மேல் வே முழுவதுமாக வடிவதற்காக தொங்க விடவும்.
சுமார் 1 அல்லது 2 மணி நேரம் அப்படியே தொங்க விட்டு வெ முழுவதுமாக நீங்கிய பன்னீரை பெறவும்.

நன்கு வாடி கட்டிய இந்த பன்னீரை ஒரு தட்டில் கொட்டவும்.


நன்கு கைகளால் அழுத்தி பிசையவும்.
ரவாவையும் சேர்த்து நன்கு பிசையவும்.


அடுப்பில் குக்கரை வைத்து சர்க்கரை போட்டு தண்ணீர் விட்டு சூடாக்கவும்.


சர்க்கரை கரையும் வரை கரண்டியால் கலக்கவும்.
பிறகு கொதிக்க விடவும்.

சர்க்கரை பாகு கொதிப்பதற்குள் ஒரே அளவு உருண்டைகளாக உள்ளங்கைகளுக்கு நடுவே வைத்து அழுத்தி விரிசல் வராமல் உருட்டி வைக்கவும்.

சர்க்கரை பாகு கொதிக்க ஆரம்பித்ததும் உருட்டிய உருண்டைகளை சேர்க்கவும். குக்கரை மூடி வெயிட் பொருத்தவும்.



ஒரு விசில் வந்த பிறகு சிறிய தீயில் 7 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
7 நிமிடங்கள் ஆனதும் அடுப்பை அணைத்து விட்டு குக்கரை தண்ணீர் குழாய் அடியில் வைத்து தண்ணீர் திறந்து விட்டு ஆவியை போக்கவும்.
இப்போது குக்கரை திறந்தால் சுவையான ரசகுல்லா  ரெடி.
உருண்டைகள் அனைத்தும் இரு பங்காக பெருத்திருக்கும்.


என்ன இன்னுமா காத்திருக்கிறீர்கள் ??!! ஒரு கிண்ணத்தில் எடுத்து ஜீராவுடன் சுவைக்க சொல்லவா வேண்டும்!!!!!
















Thursday, July 24, 2014

Cocoa Chocolate

#சாக்லேட் [ #Chocolate ] : இது துரிதமாக செய்யக்கூடிய ஒரு பால் சாக்லேட் ஆகும். பால் பவுடர், கோகோ பவுடர் மற்றும் சர்க்கரை கொண்டு செய்யப்படும் இனிப்பாகும். பல வருடங்களுக்கு முன்பு மல்லிகா பத்ரிநாத் என்ற சமையல் கலை வல்லுநர் ஒரு தொலை காட்சி சமையல் நிகழ்ச்சியில் செய்த சமையல் குறிப்பாகும். நான் அவருடைய செய்முறையை பின்பற்றி பல முறை செய்துள்ளேன். என் மகளின் பள்ளி மற்றும் கல்லூரி தோழிகளுக்கு மிக மிக பிடித்தமான இனிப்பாகும். என் மகளும் இந்த இனிப்பு வகை செய்வதில் மிக்க தேர்ச்சி பெற்றவர்.
இனி செய்முறையை காணலாம்.


தேவையான பொருட்கள் :
1 கப்                                          பால் பவுடர்
3 Tbsp                                        கோகோ பவுடர் [ அட்ஜஸ்ட் ]
1/2 கப்                                      சர்க்கரை
2 துளிகள்                              சாக்லேட் எஸ்சென்ஸ்
1 Tbsp                                       பாதாம் அல்லது முந்திரி பருப்பு துண்டுகள் வறுத்தது
1/2 Tsp                                      நெய்

செய்முறை :

ஒரு வாயகன்ற பாத்திரத்திலோ அல்லது பேசினிலோ பால் பவுடர், கோகோ பவுடர் மற்றும் பாதாம் அல்லது முந்திரி பருப்பு துண்டுகள் ஆகியவற்றை போட்டு நன்கு கலக்கி வைக்கவும்.


ஒரு அலுமினிய தட்டில் நெய் தடவி தயாராக வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் 1/4 கப் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும்.
அடுப்பில் மிதமான தீயில் சூடாக்கவும்.


சர்க்கரை கரையும் வரை கரண்டியால் கலக்கி விடவும்.
சர்க்கரை கரைந்த பின்னர் கரண்டி கொண்டு கலக்க வேண்டாம்.
ஒரு கம்பி பதம் வரும் வரை அடுப்பில் வைத்திருக்கவும்.

கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவே சிறிது கொதிக்கும் சர்க்கரை பாகை வைத்து அழுத்திய பின் விலக்கி பார்க்கவும்.
ஒரு கம்பி உடையாமல் நீண்டு வந்தால் அதுதான் பதம்.

பதம் வந்த உடனேயே பால் பவுடர் கலவையில் கொட்டி துரிதமாக கலக்கவும்.


கலக்கிக் கொண்டிருக்கும் போது  ஒன்றாக சேர்ந்தார் போல வரும் போது நெய் தடவிய தட்டில் கொட்டவும்.

சூடு ஆறிய பின்னர் துண்டுகளாக்கவும்.


குறிப்பு :
சர்க்கரை பதம் சரியாக இருந்தால்தான் சாக்லேட் ஒழுங்காக வரும்.
கோகோ பவுடரை அவரவர் சுவைக்கு ஏற்றவாறு கூட்டி குறைக்கவும்.







Sunday, July 13, 2014

Sigappu Mulaikeerai Chappathy

#சிகப்புமுளைகீரைசப்பாத்தி : சத்தீஸ்கரில் #சிகப்புமுளைகீரை மிகவும் பிரசித்தம். இது மிகுந்த சுவை கொண்டது. மசியல் மற்றும் கூட்டு செய்ய உகந்தது. இந்த கீரையை உபயோகித்து சப்பாத்தி செய்வதெப்படி என காணலாம்.

சிகப்புமுளைகீரை சப்பாத்தி

தேவையான பொருட்கள் :
2 கப்                                     கோதுமை மாவு [ multi grain whole wheat flour ]
1/4 கப்                                 வெங்காயம்   பொடியாக நறுக்கியது
1/2 Tsp                                  ஓமம்
1/2 Tsp                                  சீரகம்
1/4 Tsp                                  கருஞ்சீரகம்
3/4 Tsp                                  உப்பு [ அட்ஜஸ்ட் ]
2 Tsp                                     நல்லெண்ணெய்
1/4 Tsp                                  சீரகப்பொடி
1/4 Tsp                                  பட்டை பொடி
1/2 கப்                                  பாலக் கீரை பொடியாக நறுக்கியது

சப்பாத்தி சுட்டெடுக்க தேவையான எண்ணெய்

செய்முறை :
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மாவை எடுத்துக்கொள்ளவும்.


மற்ற பொருட்களையும் சேர்க்கவும். முதலில் கையினால் பிசறி விடவும்.

கீரையை நன்கு கழுவிய பின்னர் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த கீரை விழுதையும் தேவையான அளவு தண்ணீரையும் சேர்த்து பிசையவும்.

எண்ணெய் விட்டு நன்கு மிருதுவாகும் வரை பிசைந்து வைக்கவும்.
சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

கீரையில் நீர் சத்து அதிகம் உள்ளதால் நேரம் ஆக ஆக மாவு நீர்த்து போய் விடும். அதனால் பிசைந்தவுடன் சுட்டெடுப்பது நல்லது.

மாவு தொட்டு தொட்டு வட்ட வட்ட ரொட்டிகளாக திரட்டி வைக்கவும்.
அடுப்பில் தோசை கல்லை சூடாக்கவும்.

திரட்டிய மாவை சூடான கல்லில்  இட்டு ஒன்றிரண்டு துளிகள் எண்ணெய் விட்டு தடவி இரண்டு பக்கமும் சுட்டு எடுக்கவும்.
சிகப்புமுளைகீரை சப்பாத்தி சிகப்புமுளைகீரை சப்பாத்தி

சூடான சப்பாத்தியை பருப்பு அல்லது குருமாவுடன் சுவைக்கவும்.

சிகப்புமுளைகீரை சப்பாத்தி

மற்ற சப்பாத்தி வகைகள் :

Buckwheat Roti பாலக் சப்பாத்தி