Search This Blog

Tuesday, October 4, 2016

Modhakam - Spicy

#மோதகம் - காரம் : நான் பொதுவாக இனிப்பு மோதகம் செய்வதே வழக்கம். இந்த முறை விநாயகர் சதுர்த்தி அன்று பல வருடங்களுக்குப் பிறகு கார மோதக கொழுக்கட்டை செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது.
அதன் செய்முறையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
மோதகம் செய்ய ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பே உளுத்தம் பருப்பை ஊற வைக்க வேண்டும்.
கார மோதகம் செய்முறையை நான்கு பகுதிகளாக பிரித்துக்கொள்ளலாம்.
மேல் மாவு தயாரிப்பது, மாவினுள் வைக்கப்படும் பூரணம் செய்வது பூரணத்தை மாவினுள் வைத்து மோதகம் தயாரிப்பது மற்றும் மோதகத்தை ஆவியில் வேக வைத்து எடுப்பது என நான்கு பகுதிகள் ஆகும்.

தோராயமாக 10 முதல் 12 மோதகங்கள் செய்யலாம்.


மோதகம் - காரம்


தேவையானவை :
பூரணம் செய்ய :
1/2 கப்உளுத்தம் பருப்பு
1பச்சை மிளகாய்
1/2 அங்குலஇஞ்சி துண்டு 
1/2 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]
2 Tspநல்லெண்ணெய்
1/2 Tspகடுகு
1/4 Tspபெருங்காயத்தூள்
10 - 12கருவேப்பிலை
மேல்மாவிற்கு :
1/2 கப்அரிசி மாவு
1/2 கப்தண்ணீர்
1 Tspநல்லெண்ணெய்
1/4 Tspஉப்பு

மோதகம் செய்யும் போது கையில் ஒட்டாமல் இருக்க நல்லெண்ணெய் சிறிது.

செய்முறை :
மோதகம் செய்ய ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பே உளுத்தம் பருப்பை நன்கு கழுவிய பின்னர் தண்ணீரில் ஊறவைக்கவும்.
நன்கு ஊறிய பின்னர் மிக்சியில் பச்சை மிளகாய் இஞ்சி மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் சிறிது கூட விடாமல் கொர கொரவென அரைக்கவும்.

அடுப்பில் இட்லி பானையை வைத்து தண்ணீர் விட்டு சூடாக்கவும்.
இட்லி தட்டின் மீது எண்ணெய் தடவி அரைத்த உளுத்தம் பருப்பு விழுதை வைத்து இட்லி பானையினுள் வைத்து மூடி ஆவியில் 10 நிமிடம் வேக விடவும்.
நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து விட்டு வெந்த உளுத்தம் பருப்பு விழுதை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து என்னை விட்டு சூடானதும் கடுகு போட்டு வெடித்ததும் பெருங்காயத்தூள் மற்றும் கருவேப்பிலையை கிள்ளி போட்டு தாளிக்கவும்.
உடனே வெந்த உளுத்தம் பருப்பு விழுதை கைகளால் உதிர்த்து விட்டு சேர்க்கவும்.
தேவையெனில் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
அடுப்பை அணைத்து விட்டு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

மேல் மாவு செய்ய தேவையான அரிசிமாவு, உப்பு மற்றும் எண்ணெய் ஆகியவற்றை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
கைகளால் நன்கு பிசறி விடவும்.
அடுப்பில் தண்ணீரை வேறொரு பாத்திரத்தில் சூடாக்கவும்.
சிறு சிறு காற்று குமிழிகள் வரும் வரை சூடாக்கவும்.
அவ்வாறு சூடானதும் சிறிது சிறிதாக மாவில் விட்டு ஒரு கரண்டி கொண்டு கலக்கி பிசையவும்.
மாவு தண்ணீரின் சூட்டில் வெந்து ஒன்று சேர்ந்தாற்போல வரும்.
சிறிது நேரம் ஆறவிடவும்.

கையினால் பிசையும் அளவிற்கு சூடு தணியும் வரை காத்திருக்கவும்.
மாவின் சூடு தணிந்ததும் கையில் எண்ணெய் தடவிக்கொண்டு சிறு சிறு கிண்ணங்களாக செய்து தயாரித்த உளுத்தம் பருப்பு பூரணத்தை நடுவில் வைத்து மூடி மோதகம் தயாரிக்கவும்.
இவ்வாறு ஒவ்வொன்றாக செய்து எண்ணெய் தடவிய இட்லி தட்டின் மீது அடுக்கவும்.

இட்லி பானையை தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் செய்து வைத்துள்ள மோதகங்களை ஆவியில் 3 நிமிடங்கள் வேக விடவும்.
மிக அதிக நேரம் ஆவியில் வேக விடத் தேவையில்லை.

எடுத்து பரிமாறும் தட்டில் வைத்து விநாயகருக்கு படைத்தது சுவைக்கவும்.

மோதகம் - காரம் மோதகம் - காரம்

குறிப்பு :
கையில் தட்ட விருப்பப்படாதவர்கள் எண்ணெய் தடவிய இரு பிளாஸ்டிக் தாள்களின் நடுவே மாவை வைத்து தட்டையான கிண்ணத்தினால் அழுத்தி வட்ட வடிவமாக செய்த பின் மேலே கூறியுள்ள படி நடுவே பூரணம் வைத்து கொழுகட்டைகளாக்கவும்.
அல்லது மோதகம் செய்யும் அச்சு கடைகளில் கிடைக்கிறது. அதனை உபயோகித்தும் செய்யலாம்.
மேல் மாவு ஏற்கனவே சுடு தண்ணீர் விட்டு பிசைந்துள்ளதால் மிகக் குறைந்த நேரமே வேக வைத்தால் போதுமானது.
தேவையான நேரத்திற்கு மேல் வேக வைத்தால் நசநசவென ஆகிவிடும்.




மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க

மோதகம்
மோதகம்
தேங்காய் பூரணம்
தேங்காய் பூரணம்
சோயா பூரணம்
சோயா பூரணம்
சோயா பூரண போளி
சோயா பூரண போளி
ஜவ்வரிசி சேமியா பாயசம்
ஜவ்வரிசி சேமியா பாயசம்



1 comment:

  1. மிகவும் அருமை ..இதை போல முயற்சி செய்து பார்கிறேன் ...
    http://snowwhitesona.blogspot.in/

    ReplyDelete