குலசாமை முடக்கத்தான் தோசை :
#குலசாமை ஆங்கிலத்தில் பிரவுன் டாப் மில்லெட் [ Browntop Millet or sometimes American Millet ] என அழைக்கப்படுகிறது.
அறிவியல் பெயர் : Brachiaria ramosa or Urochloa ramosa
கன்னட பெயர் : Pedda sama or korle
மிகப்பழங்காலத்திலிருந்தே குலசாமை மக்களின் உணவாக இருந்த போதிலும் இடையில் இத்தானியம் உபயோகத்திலிருந்து மறைந்தே போய்விட்டது. தற்போது இத்தானியம் கர்நாடகத்தில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இதைத்தவிர தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் மஹாராஷ்ட்ரா மாநிலங்களில் சிற்சில இடங்களில் பயிரிடப்படுகின்றன. குலசாமை மிகவும் குறைந்த அளவிலே விளைவிக்கப்படுவதால் மற்ற சிறுதானியங்களை விட விலை கூடுதலாகவே இருக்கிறது.
குலசாமை பழுப்பு பச்சையுடன் கூடிய மஞ்சள் நிறம் கொண்டது.
இதன் நார்சத்து மற்ற அனைத்து சிறுதானியங்கள் மற்றும் மற்ற தானியங்களை விட மிக அதிக அளவில் கொண்டுள்ளது. அதிக நார்சத்து உடலின் நச்சுக்களை வெளியேற்ற மிகவும் உதவுகிறது.
அகில இந்திய சிறுதானிய ஆராய்ச்சி கழகத்தின் வலைதளத்தின் படி 100 கி குலசாமையில் அடங்கியுள்ள சத்துக்கள் :
நார்சத்து 12.5 கி, புரதச்சத்து 11.5 கி, தாதுப்பொருட்கள் [ minerals ] 4.21 கி, நியாசின் [ B 3 ] 18.5 mg, இரும்புசத்து 0.65 mg.
எல்லாவகையான சிறுதானியங்களையும் குறைந்தபட்சம் இரண்டு மணிநேரமாவது ஊறவைத்தபின்னர் சமைப்பது நல்லது. அவ்வாறு ஊறவைப்பதால் அத்தானியத்தின் முழுப்பலன்களும் உடலுக்குக் கிடைக்கிறது.
சாதாரணமாக முடக்கத்தான் கீரை தெருவோரங்களில் மற்றும் வேலியோரங்களில் படரும் ஒரு கொடி வகையாகும். இதன் காய்கள் பலூன் மாதிரி இருப்பதால், ஆங்கிலத்தில் இந்தக் கொடி Balloon Vine என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது Love in a Puff or Heartseed or Heartseed vine என்ற பெயர்களாலும் அறியப்படுகிறது.
இதன் அறிவியல் பெயர் Cardiospermum halicacabum and Cardiospermum corindum என்பதாகும்.
இங்கு குலசாமை [ Browntop millet ] மற்றும் முடக்கத்தான் கீரை இரண்டையும் சேர்த்து மிகவும் இலகுவாக செய்யக்கூடிய தோசை செய்முறையை பகிர்ந்துள்ளேன்.
ஊறவைக்க வேண்டிய கால அளவு : 2 மணி நேரம்
மாவு அரைக்க : 10 நிமிடங்கள்
தயாரிக்கப்படும் தோசை : 12 - 15 தோராயமாக
தேவையானவை : | |
---|---|
1 கப் | குலசாமை [ Browntop millet ] |
1 Tbsp | உளுத்தம்பருப்பு |
1/3 கப் | முடக்கத்தான் கீரை |
1 Tsp | உப்பு [ Adjust ] |
செய்முறை :
குலசாமை [ browntop millet ] மற்றும் உளுத்தம் பருப்பு இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு முறை கழுவிய பிறகு 1 கப் தண்ணீர் ஊற்றி இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும்.
முடக்கத்தான் கீரையை ஆய்ந்து தண்ணீரில் நன்கு கழுவவும்.
கத்தி கொண்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
இரண்டு மணிநேரம் கழித்து மிக்சியில் ஊறிய பொருட்கள் மற்றும் நறுக்கி வைத்துள்ள முடக்கத்தான் கீரை ஆகியவற்றை தேவையான அளவு தண்ணீர் விட்டு மைய அரைத்தெடுக்கவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
உப்பு சேர்த்து கலக்கவும்.
மாவு நீர் தோசையின் மாவு போல நன்கு நீர்க்க இருக்கலாம்.
தோசை தயாரிக்க மாவு தயாராகிவிட்டது.
உடனேயும் தோசை சுடலாம்.
இன்னும் சுவையான தோசை வேண்டுமெனில் 2 - 4 மணிநேரம் வைத்திருந்து, மாவு சிறிது புளித்ததும் தோசை சுட்டு எடுக்கலாம்.
தோசைக்கல்லை அடுப்பில் மிதமான தீயில் சூடாக்கவும்.
எண்ணெய் விட்டு கல் சூடாவதற்காக காத்திருக்கவும்.
தோசைக்கல் சூடானதும்.மாவை வட்டமாக ஊற்றி
தண்ணீர் போல கரைத்த மாவு தோசை ஊற்றும் முறை
எண்ணெயை ஊற்றிய தோசை மீது தெளித்து வேகவிடவும்.
தோசையை திருப்பி போட்டு வேகவைக்கத்தேவையில்லை.
சிறிது நேரத்தில் தோசையின் ஓரங்கள் சிவந்து மேலெழும்பி சுருட்டிக்கொள்ள ஆரம்பிக்கும்.
தோசை திருப்பியை உபயோகித்து தோசையை கல்லிலிருந்து எடுத்து தட்டில் வைக்கவும்.
மறுபடியும் தோசைக்கல்லின் மீது எண்ணெய் விட்டு அடுத்த தோசையை ஊற்றவும்.
இவ்வாறு ஒவ்வொரு தோசையாக சுட்டெடுக்கவும்.
தங்களுக்கு பிடித்தமான கார சட்னி யுடன் சுவைக்கவும்.
மேலும் சில சிற்றுண்டிகள் செய்து பார்த்து ருசிக்க :
|
|
|
||||||
|
|
|
மற்றும் பல சிற்றுண்டி வகைகளுக்கு
டிபன் வகைகள்
சிறுதானிய சமையல் முறைகள்
No comments:
Post a Comment