பருப்புப்பொடி : #பருப்புப்பொடி சாதத்தில் போட்டு நெய் விட்டு பிசைந்து சாப்பிடக்கூடிய சுவையான பொடியாகும். பருப்புகளை தனித்தனியே எண்ணெய் சேர்த்து வறுத்து எடுக்க வேண்டும். பின்னர் வறுத்த சிகப்பு மிளகாய் மற்றும் மிளகு சேர்த்து மிக்சியில் பொடித்து எடுத்தால் சூடான சாதத்துடன் கலந்து சாப்பிடக்கூடிய பருப்புப் பொடி தயார்.
தேவையானவை : | |
---|---|
1/2 கப் | துவரம் பருப்பு |
1/2 கப் | கடலை பருப்பு |
1/2 கப் | பொட்டுக்கடலை |
8 - 9 | சிகப்பு மிளகாய் [ adjust ] |
1 Tsp | மிளகு |
1/4 Cup | கருவேப்பிலை காய்ந்தது |
6 - 8 | பூண்டு பற்கள் |
2 - 3 Tsp | நல்லெண்ணெய் |
1/Tbsp | ஆளிவிதை [ விரும்பினால் ] |
3 Tsp | கல் உப்பு [ adjust ] |
செய்முறை :
அடுப்பின் மீது மிதமான தீயில் வாணலியை சூடாக்கவும்.
அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு முதலில் சிகப்பு மிளகாயை நிறம் மாறும் வரை வறுத்தெடுக்கவும். வறுத்த மிளகாயை எடுத்து ஒரு ஈரமில்லாத தட்டில் வைக்கவும்.
அதே வாணலியை அடுப்பில் வைத்து 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு துவரம் பருப்பை சேர்த்து கை விடாமல் நன்கு வாசனை வரும் வரை வறுத்து பொன்னிறமாக சிவந்தவுடன் தட்டில் எடுத்து வைக்கவும்.
மறுபடியும் வாணலியில் 1/2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடலை பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்து தட்டில் கொட்டவும்.
வாணலியில் எண்ணெய் விடாமல் பொட்டுக்கடலை மற்றும் மிளகை சேர்த்து நன்கு சூடாகும் வரை வறுத்து தட்டில் எடுத்து வைக்கவும்.
ஆளி விதையை சேர்க்க விரும்பினால் எண்ணெய் விடாமல் வாணலியில் வறுக்கவும். படபடவென பொரியும் போது எடுத்து தட்டில் கொட்டவும்.
கல் உப்பையும் சிறிது சூடு வரும்வரையும் அதன் நீர்ச்சத்து வற்றும் வரை வறுத்தெடுக்கவும்.
வறுத்த அனைத்து பொருட்களின் சூடு ஆறும் வரை பொறுத்திருக்கவும்.
பின்னர் பூண்டு பற்கள் நீங்கலாக வறுத்த பொருட்கள் மற்றும் காய்ந்த கருவேப்பிலை ஆகியவற்றை மிக்சியில் நன்கு பொடிக்கவும். கடைசியாக பூண்டு பற்களை தோலுடன் போட்டு சிறிது நேரம் மிக்சியை இயக்கி அரைத்தெடுக்கவும்.
ஒரு சுத்தமான ஈரமில்லாத, மூடியுடன் கூடிய கண்ணாடி அல்லது நெகிழி பாட்டிலில் எடுத்து வைத்துப் பத்திரப்படுத்தவும்.
சூடான சாதத்தின் மீது 2 தேக்கரண்டி பொடி சேர்த்து ஒரு தேக்கரண்டி நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாம்பார் அல்லது வத்தக்குழம்பு தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
|
|
|
சட்னி வகைகள் சில
|
|
|
||||||
|
|
|
பொடி வகைகள்
No comments:
Post a Comment