பீர்கங்காய் கொண்டு செய்யப்படும் அத்தனை உணவு வகைகளையும் துரை கொண்டும் செய்யலாம்.
இங்கு துரை உபயோகப்படுத்தி செய்த துவையலின் சமையல் குறிப்பை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள் :
2 Tbsp தேங்காய் துருவல்
2 துரை, கழுவி ஒரே அளவு துண்டுகளாக்கவும்
2 சிகப்பு மிளகாய்
2 Tsp உளுத்தம் பருப்பு
சிறு துண்டு பெருங்காயம்
1/4 Tsp மல்லி விதை
2 பற்கள் பூண்டு
4 மிளகு
20 புதினா இலைகள்
1 அங்குல துண்டு இஞ்சி, தோல் நீக்கி துண்டுகளாக்கவும்
கோலி குண்டு அளவு புளி, வெது வெதுப்பான நீரில் ஊற வைக்கவும்
3/4 Tsp உப்பு
செய்முறை :
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
பெருங்காயம், சிகப்பு மிளகாய் மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றை வறுக்கவும்.
பருப்பு சிவந்தவுடன் எல்லாவற்றையும் தனியே ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
இப்போது மல்லியை சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும். கடைசியில் மிளகையும் சேர்த்து வறுத்து மற்ற வறுத்த பொருட்களுடன் சேர்த்து வைக்கவும்.
அதே கடாயில் 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு இஞ்சியை சிவக்க வதக்கி எடுத்து வைக்கவும்.
பின்னர் துரை துண்டுகளை வதக்கவும். இரண்டு நிமிடம் மூடியால் மூடி வேக் விடவும்.
எடுத்து தனியே வைக்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு கடாயின் சூட்டிலேயே புதினாவை வதக்கவும்.
இலேசாக வதங்கினால் போதும்.
இப்போது மிக்சியில் எல்லா பொருட்களையும் சூடு ஆறியவுடன் தண்ணீர் விடாமல் முதலில் அரைக்கவும்.
பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்தெடுக்கவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
துவையல் சிறிது கெட்டியாகவே அரைக்க வேண்டும்.நீர்க்க இருக்கக் கூடாது.
கார சாரமான புதினா மணம் நிரம்பிய துவையல் தயார்.
பொங்கல், உப்புமா , இட்லி, தோசை போன்ற அனைத்து சிற்றுண்டிகளுக்கும் ஏற்ற துவையல் ஆகும்.
சாதத்துடன் நல்லெண்ணெய் விட்டு பிசைந்து முருங்கைக்காய் அல்லது முள்ளங்கி சாம்பாருடன் சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும்.
No comments:
Post a Comment