Search This Blog

Wednesday, December 17, 2014

Kothamalli-Koottu - Pulillacurry

#கொத்தமல்லிகூட்டு  #புளில்லாகறி : இந்த கூட்டு எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் மிக மிக பிடித்தமான உணவு ஆகும். விடுமுறையின் போது எங்களுடைய பாட்டி வீட்டிற்கு சென்றால் இரவு உணவின் போது புளில்லாகறியும் சூடான சாதமும் அதற்கு தொட்டுக்கொள்ள வெங்காய வத்தலும் [ வற்றலும் ] வறுத்து கொடுப்பார்கள். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை யாரும் வேண்டாம் என்றே சொல்ல மாட்டார்கள். அருமையான மேலும் சத்தான உணவாகும்.
என் அம்மாவும் அடிக்கடி செய்வார்கள். என்னுடைய மகளுக்கும் மிகவும் பிடித்தமான உணவு ஆகும். கொத்தமல்லி பச்சையாக கிடைக்கும் போதெல்லாம் இந்த கூட்டு கட்டாயம் தினமும் எங்களுடைய சமையல் பட்டியலில் இடம் பெற்று விடும்.
புளி இல்லாமல் பயத்தம் பருப்பு மற்றும் தேங்காய் கொண்டு செய்யப்படுவதால் புளில்லாகறி அதாவது புளியில்லாத கறி என்று அழைக்கப்படுகிறது.
புளில்லாகறியை கொத்தமல்லி தழை மட்டுமே கொண்டும் செய்யலாம்.
அல்லது கத்தரிக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், பலாகொட்டை, பீர்கங்காய் ஆகியவற்றுள் ஒன்று மட்டுமோ அல்லது இரண்டு மூன்று காய்கறிகளுடனும்  கொத்தமல்லி தழை சேர்த்து செய்யலாம். ஆனால் எடுத்துக்கொள்ளும் காய்கறியின் அளவு கொத்தமல்லி தழையின் அளவை காட்டிலும் குறைவாக இருப்பின் சுவை அருமையாக இருக்கும்.
இனி செய்முறையை காண்போம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவு கொண்டு மூன்று பேருக்குத் தேவையான புளில்லாகறி தயாரிக்கலாம்.

கொத்தமல்லிகூட்டு [ புளில்லாகறி ]

தேவையான பொருட்கள் :
Coriander Leaves

கொத்தமல்லி தழை                    : 1/2 cup
வெங்காயம் சிறிய அளவு         : 1
பூண்டு                                                :  2 பற்கள்
பயத்தம் பருப்பு                              : 1/3 cup
மஞ்சத்தூள்                                     : ஒரு சிட்டிகை
சாம்பார் மிளகாய்த்தூள்        : 1/2 Tsp
உப்பு                                                    : 3/4 Tsp [ அட்ஜஸ்ட் ]

 அரைப்பதற்கு :
தேங்காய் துருவல்                       : 3 Tsp
சீரகம்                                                  : 1/4 Tsp
அரிசி மாவு                                       : 1/4 Tsp
மிளகு                                                  : 4 or 5 [ optional ]

தாளிப்பதற்கு :
வெங்காய வடவம்                        : 1/4 Tsp
எண்ணெய்                                        : 1/2 Tsp

செய்முறை :
வெங்காயம் மற்றும் பூண்டை பொடியாக நறுக்கவும்.

கொத்தமல்லியை நன்கு கழுவி அதையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்து எடுத்து தனியே வைக்கவும்

பருப்பை கழுவி குக்கரில் எடுத்துகொள்ளவும்.
மஞ்சத்தூள் ஒரு சிட்டிகை மற்றும் தண்ணீர் 1 கப் சேர்த்து  வேக வைக்கவும்.
1 விசில் வந்த பிறகு தீயை குறைத்து 5 நிமிடங்கள் வேக விடவும்.
ஆவி அடங்கிய பிறகு குக்கரை திறக்கவும்.



மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் விட்டு சூடாக்கவும். அதில் மஞ்சத்தூள், சாம்பார் மிளகாய்த்தூள் நறுக்கிய வெங்காயம், பூண்டை சேர்க்கவும்.
வெங்காயம் முக்கால் பாகம் வெந்ததும் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி மற்றும் வேக வைத்த பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து மிதமான தீயில் 3 முதல் 5 நிமிடங்கள் அல்லது ஒன்று சேர்ந்தார் போல வரும் வரை கொதிக்க வைக்கவும்.


தயாரான கூட்டை பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கி வெங்காய வடவம் தாளித்து சேர்க்கவும்.

கொத்தமல்லிகூட்டு [ புளில்லாகறி ]


சூடான சுவையான கொத்தமல்லி கூட்டு - புளில்லாகறி தயார்.
சூடான சாதத்தில் ஊற்றி பிசைந்து வெங்காய வற்றல் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.


செய்துதான் பாருங்களேன்!!

மற்ற கொத்தமல்லி கூட்டு வகைகள் :

காய்கறி கொத்தமல்லி கூட்டு [ காய்கறி புளில்லாகறி ]


No comments:

Post a Comment