Search This Blog

Monday, January 19, 2015

Nellikkai-Pudhina-Thuvaiyal

#நெல்லிக்காய்புதினாதுவையல் : அரசன் அதியமான் ஔவையாருக்கு நெல்லிக்கனி அளித்த வரலாறை நாம் அனைவரும் அறிவோம். அதியமான் ஔவையாருக்கு ஏன் நெல்லிக்கனி அளித்தார் தெரியுமா?? ஔவையார் நீண்ட நாட்களுக்கு ஆரோக்கியமாக வாழ்ந்து தமிழுக்கு மேலும் மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதற்காகத்தான்!.... நெல்லிக்கனி நோய் வராமல் தடுப்பதற்கும் என்றும் இளமையாக இருப்பதற்கும் பேருதவியாக இருக்கிறது. மற்ற அனைத்து கனிகளுடன் ஒப்பிடும் போது மிக அதிக அளவு வைட்டமின் C தன்னகத்தே அடக்கியுள்ளது.
புதினாவின் வாசனைக்காக நமது சமையலில் உபயோகப்படுத்துகிறோம். ஆனால் இந்த புதினாவில் இரும்பு சத்து அதிக அளவில் உள்ளது.
இவ்விரண்டுடன் கொத்தமல்லி சேர்த்து ஒரு அருமையான துவையல் எவ்வாறு செய்யலாம் என காண்போம்.
பொதுவாக துவையலுக்கு புளி சேர்த்து அரைப்பது வழக்கம். ஆனால் நெல்லிக்காயில் புளிப்பு சுவை இருப்பதனால் புளி சேர்க்கப்படவில்லை. ஆனால் எலுமிச்சை சாறு கொடுக்கப்பட்டிருக்கிறதே என யோசிக்கிறீர்களா??!!
புதினா சிறிது நிறம் மாறும் தன்மை கொண்டது. அதனை தடுப்பதற்காகவும் மேலும் சுவையை சமன் படுத்துவதற்காகவும் எலுமிச்சை சாறு பயன் படுத்தப்பட்டுள்ளது.
இனி செய்முறையை காண்போம்.

நெல்லிக்காய் புதினா துவையல் [ Amla Mint Chutney ]

தேவையான பொருட்கள் :
2                                          நெல்லிக்காய்
1/2 கப்                                புதினா இலைகள்
1/4 கப்                                கொத்தமல்லி தழை நறுக்கியது
1 1/2 Tsp                             உளுத்தம் பருப்பு தோலுடன்
2 or 3                                  சிகப்பு மிளகாய்
1 Tsp                                  பச்சை கொத்தமல்லி விதைகள் ( கிடைத்தால் )*
சிறிய துண்டு                இஞ்சி [ விருப்பப்பட்டால் ]
1Tsp                                    எலுமிச்சை சாறு
3 Tsp                                   தேங்காய் துறுவல்
1 Tsp                                   உப்பு
1 Tsp                                   கடுகு
1 Tsp                                   எண்ணெய்

*பச்சை கொத்தமல்லி விதைகள் மார்கெட்டில் கிடைக்காவிடின் அதற்குப் பதிலாக நாம் பொதுவாக சமையலுக்கு உபயோகப் படுத்தும் கொத்தமல்லி விதையை பயன்படுத்தலாம்.

செய்முறை :
நெல்லிக்காயை நான்கு கழுவிய பின்னர் கொட்டையை நீக்கி விட்டு அரிந்து வைத்துக் கொள்ளவும்.
கொத்தமல்லி மற்றும் புதினாவையும் மண் போக அலசி தண்ணீரை வடித்து விடவும்.
இஞ்சியை கழுவி தோல் நீக்கி துண்டுகளாக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
முதலில் சிகப்பு மிளகாயையும் உளுத்தம் பருப்பையும் வறுக்கவும்.
உளுத்தம் பருப்பு சிவந்தவுடன் ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
 அதே வாணலியில் மேலும் அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு இஞ்சி துண்டுகளை போட்டு சிறிது சிவக்கும் வரை வதக்கவும்.
இஞ்சி சிவந்த பின் பச்சை கொத்தமல்லி விதைகளை இஞ்சியுடன் சேர்த்து அரை நிமிடம் வதக்கிய பின் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
அதே வாணலியில் எண்ணெய் விடாமல் நெல்லிக்காய் துண்டுகளை சற்றே சிவக்கும் வரை வதக்கி எடுக்கவும்.
அடுப்பை அணைத்து விடவும்.
சூடாக இருக்கும் வாணலியில் புதினாவை ஒரு நிமிடம் வதக்கி எடுக்கவும்.
வறுத்த மற்றும் வதக்கிய பொருட்களை ஆற விடவும்.


வதக்கிய பொருட்கள் மற்றும் கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருட்களையும் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
உப்பு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றின் சுவையை சரி பார்க்கவும்.


பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
சிறிது கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்.
சுவையும் மணமும் மிகுந்த துவையல் தயார்.

நெல்லிக்காய் புதினா துவையல் [ Amla Mint Chutney ]


சூடான சாதத்தில் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாம்பாரை தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் சுவை அபாரமாக இருக்கும்.
பொங்கல் மற்றும் உப்புமா போன்ற சிற்றுண்டிகளுக்கும் ஏற்ற துவையல் ஆகும்.
தயிர் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் சுவையோ சுவை!!
செய்து சுவைத்து பாருங்கள்!!







சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க

நெல்லிக்காய் தயிரில் ஊறியது
நெல்லிக்காய் தயிரில் ஊறியது
நெல்லிக்காய் மிட்டாய்
நெல்லிக்காய் மிட்டாய்
நெல்லிக்காய் தேனில் ஊறியது
நெல்லிக்காய் தேனில் ஊறியது
நெல்லிக்காய் ஜாம்
நெல்லிக்காய் 
ஜாம்
நெல்லிக்காய் ஊறுகாய்
நெல்லிக்காய் ஊறுகாய்






No comments:

Post a Comment