Search This Blog

Friday, October 31, 2014

Mullangi Paruppu Thuvatal

#முள்ளங்கிபருப்புதுவட்டல் : முள்ளங்கி மிகுந்த நீர் சத்து கொண்ட காயாகும்.
முள்ளங்கியை உபயோகித்து சாம்பார் மற்றும் துவட்டல் செய்யப்படுவது வழக்கம். முள்ளங்கி துவட்டல் செய்யும் போது முள்ளங்கியில் நீர் மிகுதியாக இருப்பதனால் நசநசவென ஆகி விடும். நீர் முழுவதும் வற்றும் வரை அடுப்பில் வைத்திருந்தால் மிகுதியாக வெந்து விடும். சில சமயம் துருவிய முள்ளங்கியை கைகளால் பிழிந்து நீரை அகற்றிவிட்டு வாணலியில் சேர்ப்பது முறையாகும்.அப்படி செய்யும் போது மிகவும் முக்கியமான சத்துக்களை இழக்க நேரிடுகிறது. இதை தவிர்க்க துருவிய முள்ளங்கியுடன் தேவையான அளவு பயத்தம் பருப்பை சேர்த்து சிறிது நேரம் வைத்திருந்தால் காயிலிருந்த வெளிவரும் தண்ணீரில் பருப்பு ஊறி விடும். பிறகு துவட்டல் செய்யும் போது நமக்கு புரோட்டீன் சத்து [ பருப்பு சேர்த்திருப்பதனால் ] நிறைந்த உணவு கிடைக்கிறது.
இனி எப்படி செய்வது என காண்போம்.

முள்ளங்கி பருப்பு துவட்டல்



தேவையான பொருட்கள் 
1 1/2 cupமுள்ளங்கி துருவியது 
1வெங்காயம், நறுக்கி வைக்கவும்.
1/4 cupகுடைமிளகாய் பொடியாகநறுக்கியது [இருந்தால்]
1 Tbspவெங்காயத்தாள் நறுக்கவும் [ இருந்தால் ]
1 or 2பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும்.
1/8 cupபயத்தம் பருப்பு [ பச்சை பருப்பு ]
1/2 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]
4 Tspதேங்காய் துருவியது
தாளிக்க :
1 Tspகடுகு
1 Tspஉளுத்தம் பருப்பு
1 or 2சிகப்பு மிளகாய்
1 Tspஎண்ணெய்

வாசனைக்காக சிறிது கொத்தமல்லி கறுவேப்பிலை 


செய்முறை :
துருவிய முள்ளங்கியை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
பயத்தம் பருப்பை கழுவி தண்ணீரை வடித்து விட்டு துருவிய முள்ளங்கியுடன் சேர்க்கவும்.


தேவையான உப்பு சேர்த்து கலந்த பின்னர் 15 நிமிடம்  மூடி வைக்கவும்.


15 நிமிடங்களுக்கு பிறகு அடுப்பை பற்ற வைத்து வாணலியை சூடாக்கவும்.
எண்ணெய் விட்டு சூடானதும் கடுகை வெடிக்க விடவும்.
கடுகு வெடித்த பின்னர் சிகப்பு மிளகாயை கிள்ளி போட்டு உளுத்தம் பருப்பையும் சேர்க்கவும்.

உளுத்தம் பருப்பு சிவந்த பின்னர் வெட்டிவைத்துள்ள வெங்காயம், வெங்காயதாள், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சிறிது வதங்கிய பிறகு குடை மிளகாயை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

இப்போது முள்ளங்கி பருப்பு கலவையை சேர்க்கவும்.
உப்பு சரி செய்யவும்.

மிதமான தீயில் வைத்து மூடி வேக விடவும்.
ஓரிரு நிமிடங்களிலேயே முள்ளங்கி வெந்து விடும்.

முள்ளங்கி பருப்பு துவட்டல்

கடைசியாக தேங்காய் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடவும்.

முள்ளங்கி பருப்பு துவட்டல்

பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றவும்.

முள்ளங்கி பருப்பு துவட்டல்



Monday, October 27, 2014

Carrot Poriyal

#காரட்பொரியல் : #காரட் எல்லோருக்கும் பிடித்தமான காய் ஆகும். பச்சையாக சாலட் அல்லது தயிர் பச்சடி ஆகியவற்றில் கலந்து சுவைக்கலாம்.
மற்றபடி எல்லாவகையான குருமா, சாம்பார் ஆகியவற்றில் மற்ற காய்கறிகளுடன் சேர்த்து பயன் படுத்த ஏற்ற காய் ஆகும். பிரியாணி செய்ய காரட் அவசியம் தேவை. இதை தவிர இதனை கொண்டு பொரியல் செய்தாலும் அருமையாக இருக்கும்.
இங்கு பொரியல் எவ்வாறு செய்வது என பார்க்கப்போகிறோம்.

காரட் பொரியல்

தேவையான பொருட்கள் :
1 கப்                                         காரட் துருவியது
1 Tbsp                                       வெங்காயம் அரிந்தது
1                                                 பச்சை மிளகாய், நறுக்கி வைக்கவும்
சிறிதளவு                              கொத்தமல்லி
3/4 Tsp                                      சாம்பார் மிளகாய் தூள்
1 Tsp                                         தேங்காய் துருவல்
3/4 Tsp                                      உப்பு [ அட்ஜஸ்ட் ]
தாளிக்க :
1/2 Tsp                                      கடுகு
1 Tsp                                         உளுத்தம் பருப்பு
1/2 Tsp                                      எண்ணெய்


செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் முதலில் கடுகை வெடிக்க விடவும்.

அடுத்து உளுத்தம் பருப்பை போட்டு வறுக்கவும்.
 பொன்னிறமாக வறுபட்டவுடன் பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை சேர்த்து சிறிது மணித்துளிகள் வதக்கவும்.

இப்போது வெட்டி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து  நிமிடம் வதக்கவும்.
பின்னர் சாம்பார் மிளகாய் தூள் சேர்த்து இலேசாக வதக்கிய பிறகு துருவி வைத்துள்ள காரட்டை சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்க்கவும்.
நன்கு கிளறி விடவும்.


தீயை சிறியதாக வைத்து மூடி வேக விடவும்.
காரட் எளிதில் வேகக்கூடியதாகையால் ஓரிரு நிமிடங்களிலேயே வெந்து விடும்.


கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

காரட் பொரியல்

எல்லாவகையான கலந்த சாதத்திற்கும், ரசம் அல்லது சாம்பார் சேர்த்து பிசைந்த சாதத்திற்கும் ஏற்ற பொரியலாகும்.

குறிப்பு :

  • காரட் இனிப்பு சுவையுடையதாகையால் அவரவர் சுவைக்கு ஏற்ப பச்சை மிளகாயையும் சாம்பார் மிளகாய் தூள் அளவையும் கூட்டி குறைத்துக் கொள்ளவும்.
  • சாம்பார் மிளகாய் தூள் இந்த கறிக்கு ஒரு விசேஷமான சுவையை கொடுக்கும். சாம்பார் மிளகாய் தூள் இல்லாவிடின் சிகப்பு மிளகாய் தூளும் கொத்தமல்லி தூளும் ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் பயன் படுத்திக் கொள்ளலாம்.

Friday, October 24, 2014

Murungaikeerai Rice

#முருங்கைகீரைசாதம் : நாம் அனைவரும் காரட்டில்தான் மிக அதிக அளவில் வைட்டமின் A நிறைந்துள்ளது என நினைத்துக் கொண்டிருக்கிறோம். விலை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் காரட் சத்து மிகுந்தது என்று எண்ணி வாங்கி சமையலில் உபயோகப்படுத்துகிறோம்.
உண்மையில் முருங்கைகீரையில்  காரட்டில் உள்ள வைட்டமின் A அளவை காட்டிலும் நான்கு மடங்கு அதிக அளவில் உள்ளது. மிகவும் எளிதாக கிடைக்ககூடியதும் ஆகும்.
முருங்கைகீரையை பொரியலோ அல்லது கூட்டோ பொதுவாக செய்வது வழக்கம். வேறு முறையில் மாற்றி சமைக்கும் போது எல்லோரும் கீரையா என முகம் சுளிக்காமல் சந்தோஷமாக சாப்பிடுவார்கள்.
இனி முருங்கைகீரை சாதம் செய்வது எப்படி என காண்போம்.

முருங்கைகீரை சாதம்


தேவையான பொருட்கள் :


1/2 cup                                  பச்சரிசி
1                                            வெங்காயம், நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்
15 or 20 பற்கள்                  பூண்டு, பொடியாக நறுக்கவும்.
2 அ 3                                    சிகப்பு மிளகாய்
1 or 2                                     பச்சை மிளகாய், இரண்டாக கீறிக்கொள்ளவும்
1/2 கப்                                 முருங்கைகீரை [ Drumstick leaves ]
1கப்                                     தேங்காய் பால்
1 Tsp                                     உப்பு [ adjust ]

தாளிக்க :
1 Tsp                                சீரகம்
3 Tsp                                நல்லெண்ணெய் [ till / sesame oil ]

செய்முறை :
அரிசியை ஒரு முறை களைந்து கழுவிய பின்னர் தண்ணீரில் ஊற வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு அடுப்பின் மீது வைத்து சூடாக்கவும்.

சீரகம் வெடிக்க விட்ட பின்னர் சிகப்பு மிளகாயை துண்டுகளாக்கி சேர்த்து சில மணித்துளிகள் வறுக்கவும்.
அடுத்து பூண்டு சேர்த்து வதக்கிய பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.


ஊறுகின்ற அரிசியிலிருந்து முழுவதுமாக தண்ணீரை வடித்து விடவும். அடுப்பின் தீயை பெரியதாக்கிய பின்னர் அரிசியை சேர்க்கவும்.
30 வினாடிகள் கிளறிக்கொண்டே இருக்கவும்.
பின்னர் தீயை குறைத்து கிளறவும்.
அரிசி நன்கு வெள்ளையாக நிறம் மாறும் வரை வறுக்கவும்.


அரிசி நன்கு வெள்ளையாக நிறம் மாறியதும் முருங்கைகீரையையும் தேங்காய் பாலையும் சேர்க்கவும்.
தேவையான உப்பு சேர்த்து கலக்கி விடவும்.

முருங்கைகீரை சாதம்

மூடி வெயிட் பொருத்தி அதிக தீயில் மூன்று விசில் வரும் வரை வேக விடவும்.

பின்னர் தீயை குறைத்து 3 நிமிடங்கள் குறைந்த தீயில் வேக விட்ட பின் அடுப்பை அணைத்து விடவும்.
ஆவி அடங்கிய பின்னரே திறக்க வேண்டும்.

பரிமாறும் தட்டில் எடுத்து வைத்து காரட் சாலட் அல்லது தயிர்பச்சடி வைத்து பரிமாறவும்.

முருங்கைக்கீரை சாதம்






மேலும் சில சாத வகைகள் செய்து சுவைக்க

கருவேப்பிலை சாதம் சாமை பிசிபேளே பாத் நெல்லிக்காய் சாதம் மணத்தக்காளி கீரை சாதம் தேங்காய் பால் காய்கறி புலாவ்




Saturday, October 18, 2014

Thattai

#தட்டை : சென்ற வாரம் பெங்களூரின் அவென்யு ரோடு கடைகளில் கிடைக்கும் தட்டையை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். தட்டையை அங்கு நிப்பட்டு என அழைப்பார்கள். சிறு சிறு கார பலகாரங்கள் விற்கும் கடைகளில் வாளிகளில் பல வகையான காரங்கள் நிரப்பப்பட்டிருக்கும். அதில் இந்த நிப்பாட்டும் ஒன்று. நல்ல கையகல அளவில் தடிமனாக இருக்கும்.
சுவையோ கர கரவென மிகவும் காரமாக இருக்கும்.
சாட் கடைகளில் இந்த நிப்பட்டின் மீது வெங்காயம், தக்காளி வைத்து சாட்மசாலா தூவி விற்கப்படும். சுவை அருமையாக இருக்கும். எனக்குதான்  சாப்பிட ஒரு குவளை நீர் அருகில் வைத்திருக்க வேண்டும்.
அதே போல வீட்டில் செய்து பார்க்கலாம் என முடிவெடுத்து செயலிலும் இறங்கி விட்டேன்.
எப்படி செய்தேன் என இனி காணலாம்.

தட்டை


தேவையான பொருட்கள் :
1 கப்மைதா 
2 Tbspகடலை மாவு
2 Tbspபொட்டுகடலை மாவு [ வறுகடலை மாவு ]
1/4 Tspபெருங்காயத்தூள்
1/4 Tspமிளகுத்தூள்
1 Tspஉப்பு [ adjust ]
4 Tspசூடான எண்ணெய்
அரைக்க :
6 or 7பச்சை மிளகாய் [ adjust ]
1 Tspசீரகம்
10 to 15கறுவேப்பிலை
ஊற வைக்க :
1 Tbspகடலை பருப்பு
2 Tbspஉளுத்தம் பருப்பு

பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்.

செய்முறை :
ஊறவைக்க வேண்டியவற்றை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீரில் 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
மைதாவை இட்லிபானையில் ஒரு பாத்திரத்தில் வைத்து துணி போட்டு மூடி ஆவியில் 8 முதல் 10 நிமிடங்கள் வேகவிடவும்.
வேகவைத்ததை ஆற விடவும்.

மிக்சியில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீருடன் மைய அரைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பின் மீது வைத்து மிதமான தீயில் சூடாக்கவும்.

வேகவைத்து ஆற வாய்த்த மாவு, கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்து பொருட்களையும் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
அரைத்த விழுதை சேர்க்கவும்.


ஊறவைத்துள்ள பருப்பை தண்ணீரை முழுவதுமாக வடித்து விட்டு சேர்க்கவும்.
சூடான எண்ணெயை அடுப்பில் உள்ள வாணலியில் இருந்து எடுத்து சேர்க்கவும்.

சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.


ஒரு பிளாஸ்டிக் தாளின் மீதோ அல்லது கையிலோ தட்டி வைக்கவும்.


எண்ணெய் சூடாகி விட்டதா என ஒரு சிறு துண்டு மாவை போட்டு பார்க்கவும்.
நன்கு பொரிந்து மேலெழும்பி வந்தால் தட்டி வைத்த தட்டைகளை மெதுவாக எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
தட்டை

எண்ணெயின் அளவிற்கு ஏற்றவாறு ஒரு முறைக்கு நான்கு அல்லது ஐந்து போட்டு திருப்பி திருப்பி விட்டு சிவக்க பொரித்தெடுக்கவும்.
பொரிக்கும் போது தீ மிதமான சூட்டிலேயே இருப்பது நலம்.
பொரிப்பது அடங்கியவுடன் எண்ணெயிலிருந்து எடுத்து டிஷ்யு தாள் பரப்பிய தட்டில் எடுத்து வைக்கவும்.
தட்டை

மறுபடியும் அடுத்த ஈடிற்கு தட்டி வைத்துள்ள தட்டையை போடவும்.
இதே போல எல்லாவற்றையும் பொரித்தெடுக்கவும்.

தட்டையின் தடிமன் அவரவர் விருப்பபடி தடிமனாகவோ அல்லது மெல்லியதாகவோ தட்டிக்கொள்ளவும்.

சுவையான காரமான தட்டை தயார்.
இது ஒரு அருமையான தீபாவளி பலகாரம்.
மாலை வேளையில் டீ அல்லது காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

Mixer

#மிக்ஸர் : வெகு நாட்களுக்கு முன்பு தீபாவளியின் பொது மிக்ஸர் செய்திருக்கிறேன். அதன் பிறகு சென்ற வாரம் செய்தேன்.
மிக்சரில் சேர்க்கப்படும் பெருங்காயத்தூள் மற்றும் வறுத்த கறுவேப்பிலை ஒரு தனி சுவையை மிக்ஸருக்கு கொடுக்கும்.
இங்கு ராய்ப்பூரில் கிடைக்கும் மிக்ஸரில் சாட் மசாலா கலந்திருப்பதை சாப்பிட்டால் மிக்ஸர் சாப்பிட்ட திருப்தியே இல்லாமல் இருக்கிறது.
அதனாலேயே நானே வீட்டில் செய்ய முயற்சி செய்தேன். அருமையாக இருந்தது.
இந்த அளவு சுமார் 2 முதல் 2 1/2 கப் மிக்ஸர் செய்ய முடியும்.
இனி எப்படி என பார்ப்போம்.


மிக்ஸர்


தேவையான பொருட்கள் :

ஓமப்பொடி செய்ய :
1/2 கப்                     கடலை மாவு [ Besan ]
1 Tbsp                       அரிசி மாவு
1 Tsp                         ஓமம் [ optional ]
1/4 Tsp                     உப்பு
2 சிட்டிகை          பெருங்காயம்
1/8 Tsp                     சிகப்பு மிளகாய் தூள்
1 சிட்டிகை           மஞ்சத்தூள்

காரா பூந்தி செய்ய :
1/2 கப்                    கடலை மாவு  [ Besan ]
2 Tbsp                       அரிசி மாவு
1/4 Tsp                     உப்பு
1 சிட்டிகை          மஞ்சத்தூள்
1 சிட்டிகை          பெருங்கயத்தூள்

மற்ற பொருட்கள் :
1/2 கப்                    சோள வத்தல் [ if available ]
1/4 கப்                 பொட்டுக்கடலை [ வறுகடலை ]
1/4 கப்                  நில கடலை [ Ground nuts ]
1/4 கப்                   கெட்டி அவல்  [ optional ]
15 - 20                    கறுவேப்பிலை

தூவுவதற்கு :
1 Tsp                      சர்க்கரை பொடித்தது
1/4 Tsp                   பெருங்கயத்தூள்
1 Tsp                      உப்பு [adjust]
1/2 Tsp                   சிகப்பு மிளகாய் தூள் [adjust]

2 கப்               எண்ணெய் பொரிப்பதற்கு

செய்முறை :
ஓமப்பொடி எவ்வாறு செய்வது என முன்பே பார்த்திருக்கிறோம்.

ஓமப்பொடி

அதில் கொடுக்கப்பட்டுள்ள செய்முறையை பின்பற்றி ஓமப்பொடி செய்து தனியே ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
நொறுக்கிக் கொள்ளவும்.

ஓமப்பொடி


அடுத்து காராபூந்தி செய்யும் முறை :

கடைசி ஈடு ஓமப்பொடி பொரிந்து கொண்டிருக்கும் போதே காரா பூந்திக்கு மாவு தயாரிக்க ஆரம்பித்து விடவும்.

காராபூந்தி  செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒரு பேசினில் எடுத்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

Karaboondhi batter


ஓமப்பொடி செய்து முடித்த அதே காய்ந்து எண்ணெய் மீது சாரணி [ ஓட்டைகள் கொண்ட கரண்டி ] யை இடது கையால் பிடித்துக்கொள்ளவும்.
வலது கையினால் ஒரு கரண்டி மாவை எடுத்து சாரணி மீது விடவும்.
சாரணியை ஒரு தட்டு தட்டியோ அல்லது வலது கையில் உள்ள கரண்டியால் இலேசாக தேய்த்து விடவும்.
ஓட்டைகளின் வழியே மாவு கீழே உள்ள சூடான எண்ணெயில் விழுந்து பொறியும்.
ஒரு தடவைக்கு ஒரு கரண்டி மாவு மட்டுமே சாரணி மேல் ஊற்றி தேய்க்க வேண்டும்.
சிவக்க வறுத்தெடுத்து எண்ணெய் வடிய டிஷ்யு தாளின் மீது வைக்கவும்.


மாவு உள்ள வரை இதே போல எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

எண்ணெய் வடித்த பிறகு ஒமப் பொடி எடுத்து வைத்துள்ள பாத்திரத்திற்கு மாற்றவும்.

அடுத்து சோள வத்தலை பொரித்தெடுக்கவும். வறுத்தெடுத்து எண்ணெய் வடித்து எடுத்து இதனையும் ஓமப்பொடி மற்றும் காராபூந்தி உள்ள பாத்திரத்தில் சேர்க்கவும்.


நில கடலை, பொட்டுக்கடலை, கறுவேப்பிலை ஆகிய அனைத்தையும் தனித்தனியாக பொரிதெடுத்து சேர்க்கவும்.


அவல் எடுத்திருந்தால் அதனையும் பொரித்துக்கொள்ளவும்.

தூவுவதற்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் அவரவர் ருசிக்கேற்ற படி தூவி கலந்து விடவும்.

மிக்ஸர் மிக்ஸர்

காற்றுப்புகா பாத்திரத்தில் எடுத்து வைத்து பத்திர படுத்தவும்.


மிக்ஸர்

மாலை நேரத்தில் காபி அல்லது தேநீருடன் சுவைக்க ஏற்றது.
இது தீபாவளி பலகாரங்களில் ஒன்றாகும்.

Wednesday, October 15, 2014

Kothamally-Murungaikeerai-Podi

#கொத்தமல்லிமுருங்கைக்கீரைபொடி : #முருங்கைகீரை யில் நிறைந்திருக்கும் வைட்டமின் A சத்து காரட்டில் உள்ளதை விட நான்கு மடங்கு அதிக அளவில் நிரம்பி இருக்கிறது. பாலில் உள்ள கால்ஷியத்தை போல நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. ஆரஞ்சைக் காட்டிலும் மிக மிக அதிகமான வைட்டமின் C அடங்கியிருக்கிறது. இத்தகைய அருமையான கீரையை எவ்வாறேனும் உணவில் சேர்த்துக்கொள்வது மிக மிக அவசியம்.
ஆனால் குழைந்தகளோ கீரை என்றாலே முகத்தை தூக்கி வைத்துக்கொள்வார்கள். ஏன் சில பெரியவர்களும்தான்.
முருங்கைக்கீரையை வேறு எந்த வகையில் உணவில் சேர்க்கலாம் என யோசிக்கிறீர்களா? இதோ சொல்கிறேன் கேளுங்கள்!!

முருங்கைகீரையை பறித்து நன்கு கழுவி ஒரு துணியின் மீது பரப்பி நிழலில் காய வைக்கவும். அல்லது வீட்டின் உட்புறம் ஒரு ஓரத்தில் காய விடவும்.
கழுவிய நீரை துணி உறிஞ்சி விடும்.
பிறகு ஒரு தட்டில் எடுத்து வைத்து மூன்று நான்கு நாட்களுக்கு நிழலிலோ அல்லது வீட்டின் உட்புறம் காய விடவும்.
கலகலவென காய்ந்தவுடன் ஒரு காற்றுப் புகா பாட்டிலில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
தேவையான போது பயன் படுத்திக்கொள்ளலாம்.
இப்போது இந்த காய்ந்த முருங்கை கீரை கொண்டு கொத்தமல்லியுடன் பொடி எப்படி செய்யலாம் என காணலாம்.

கொத்தமல்லி முருங்கைக்கீரை பொடி


தேவையான பொருட்கள் :
1/2 கப்கொத்தமல்லி விதை
1/2 கப்முருங்கை கீரை காய்ந்தது
3 or 4 சிகப்பு மிளகாய் [adjust]
1 Tsp உப்பு [adjust]
3 or 4 பற்கள் பூண்டு 
1/2 Tspஎண்ணெய் 

செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து சூடாக்கவும்.
எண்ணெய் விட்டு கொத்தமல்லி விதையை கை விடாமல் வறுக்கவும்.


பாதி வறுபட்டதும் மிளகாயையும் சேர்த்து வறுக்கவும்.
நன்கு வாசனை வரும் வரை கொத்தமல்லியை வறுத்தெடுக்கவும்.


உப்பையும் அதன் நீர் சத்தை போக்க சிறிது வறுத்தெடுக்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு முருங்கை கீரையை வாணலியில் சேர்க்கவும்.
அதன் சூட்டில் சில மணி துளிகள் வைத்திருக்கவும்.


சூடு ஆறிய பிறகு மிக்ஸியில் பூண்டு மற்றும் முருங்கை கீரை  நீங்கலாக மற்ற அனைத்தையும் சேர்த்து அரைக்கவும்.


கொரகொரவென அரைத்த பிறகு கீரையை சேர்த்து நன்றாக பொடிக்கவும்.


கடைசியாக பூண்டை உரிக்காமல்  சேர்த்து இரண்டு மூன்று சுற்று சுற்றி மிக்சியிலிருந்து வேறு பாத்திரத்திற்கு மாற்றவும்.

கொத்தமல்லி முருங்கைக்கீரை பொடி கொத்தமல்லி முருங்கைக்கீரை பொடி

பாட்டிலில் அடைத்து வைத்து உபயோகப்படுத்தவும்.


சூடான சாதத்தில் இரண்டு தேக்கரண்டி பொடியை போட்டு ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு முருங்கைக்காய் சாம்பாருடன் சாப்பிட்டால்.... ஆஹ்.. ஆஹா அருமையாக இருக்கும்.
செய்து சாப்பிட்டுத்தான் பாருங்களேன்!!











மேலும் சில அத்தியாவசியமான பொடி வகைகள் 
சாம்பார் பொடி
சாம்பார் 
பொடி
மிளகுப் பொடி
மிளகுப்
பொடி
மதராஸ் ரசப் பொடி
மதராஸ்
ரசப் 
பொடி
இட்லி மிளகாய்ப் பொடி
 இட்லி மிளகாய்ப் 
பொடி
ஆளி விதை சேர்த்த இட்லி மிளகாய்ப் பொடி
ஆளி விதை சேர்த்த இட்லி மிளகாய்ப் பொடி