Search This Blog

Showing posts with label savory. Show all posts
Showing posts with label savory. Show all posts

Saturday, October 18, 2014

Thattai

#தட்டை : சென்ற வாரம் பெங்களூரின் அவென்யு ரோடு கடைகளில் கிடைக்கும் தட்டையை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். தட்டையை அங்கு நிப்பட்டு என அழைப்பார்கள். சிறு சிறு கார பலகாரங்கள் விற்கும் கடைகளில் வாளிகளில் பல வகையான காரங்கள் நிரப்பப்பட்டிருக்கும். அதில் இந்த நிப்பாட்டும் ஒன்று. நல்ல கையகல அளவில் தடிமனாக இருக்கும்.
சுவையோ கர கரவென மிகவும் காரமாக இருக்கும்.
சாட் கடைகளில் இந்த நிப்பட்டின் மீது வெங்காயம், தக்காளி வைத்து சாட்மசாலா தூவி விற்கப்படும். சுவை அருமையாக இருக்கும். எனக்குதான்  சாப்பிட ஒரு குவளை நீர் அருகில் வைத்திருக்க வேண்டும்.
அதே போல வீட்டில் செய்து பார்க்கலாம் என முடிவெடுத்து செயலிலும் இறங்கி விட்டேன்.
எப்படி செய்தேன் என இனி காணலாம்.

தட்டை


தேவையான பொருட்கள் :
1 கப்மைதா 
2 Tbspகடலை மாவு
2 Tbspபொட்டுகடலை மாவு [ வறுகடலை மாவு ]
1/4 Tspபெருங்காயத்தூள்
1/4 Tspமிளகுத்தூள்
1 Tspஉப்பு [ adjust ]
4 Tspசூடான எண்ணெய்
அரைக்க :
6 or 7பச்சை மிளகாய் [ adjust ]
1 Tspசீரகம்
10 to 15கறுவேப்பிலை
ஊற வைக்க :
1 Tbspகடலை பருப்பு
2 Tbspஉளுத்தம் பருப்பு

பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்.

செய்முறை :
ஊறவைக்க வேண்டியவற்றை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீரில் 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
மைதாவை இட்லிபானையில் ஒரு பாத்திரத்தில் வைத்து துணி போட்டு மூடி ஆவியில் 8 முதல் 10 நிமிடங்கள் வேகவிடவும்.
வேகவைத்ததை ஆற விடவும்.

மிக்சியில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீருடன் மைய அரைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பின் மீது வைத்து மிதமான தீயில் சூடாக்கவும்.

வேகவைத்து ஆற வாய்த்த மாவு, கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்து பொருட்களையும் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
அரைத்த விழுதை சேர்க்கவும்.


ஊறவைத்துள்ள பருப்பை தண்ணீரை முழுவதுமாக வடித்து விட்டு சேர்க்கவும்.
சூடான எண்ணெயை அடுப்பில் உள்ள வாணலியில் இருந்து எடுத்து சேர்க்கவும்.

சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.


ஒரு பிளாஸ்டிக் தாளின் மீதோ அல்லது கையிலோ தட்டி வைக்கவும்.


எண்ணெய் சூடாகி விட்டதா என ஒரு சிறு துண்டு மாவை போட்டு பார்க்கவும்.
நன்கு பொரிந்து மேலெழும்பி வந்தால் தட்டி வைத்த தட்டைகளை மெதுவாக எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
தட்டை

எண்ணெயின் அளவிற்கு ஏற்றவாறு ஒரு முறைக்கு நான்கு அல்லது ஐந்து போட்டு திருப்பி திருப்பி விட்டு சிவக்க பொரித்தெடுக்கவும்.
பொரிக்கும் போது தீ மிதமான சூட்டிலேயே இருப்பது நலம்.
பொரிப்பது அடங்கியவுடன் எண்ணெயிலிருந்து எடுத்து டிஷ்யு தாள் பரப்பிய தட்டில் எடுத்து வைக்கவும்.
தட்டை

மறுபடியும் அடுத்த ஈடிற்கு தட்டி வைத்துள்ள தட்டையை போடவும்.
இதே போல எல்லாவற்றையும் பொரித்தெடுக்கவும்.

தட்டையின் தடிமன் அவரவர் விருப்பபடி தடிமனாகவோ அல்லது மெல்லியதாகவோ தட்டிக்கொள்ளவும்.

சுவையான காரமான தட்டை தயார்.
இது ஒரு அருமையான தீபாவளி பலகாரம்.
மாலை வேளையில் டீ அல்லது காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

Mixer

#மிக்ஸர் : வெகு நாட்களுக்கு முன்பு தீபாவளியின் பொது மிக்ஸர் செய்திருக்கிறேன். அதன் பிறகு சென்ற வாரம் செய்தேன்.
மிக்சரில் சேர்க்கப்படும் பெருங்காயத்தூள் மற்றும் வறுத்த கறுவேப்பிலை ஒரு தனி சுவையை மிக்ஸருக்கு கொடுக்கும்.
இங்கு ராய்ப்பூரில் கிடைக்கும் மிக்ஸரில் சாட் மசாலா கலந்திருப்பதை சாப்பிட்டால் மிக்ஸர் சாப்பிட்ட திருப்தியே இல்லாமல் இருக்கிறது.
அதனாலேயே நானே வீட்டில் செய்ய முயற்சி செய்தேன். அருமையாக இருந்தது.
இந்த அளவு சுமார் 2 முதல் 2 1/2 கப் மிக்ஸர் செய்ய முடியும்.
இனி எப்படி என பார்ப்போம்.


மிக்ஸர்


தேவையான பொருட்கள் :

ஓமப்பொடி செய்ய :
1/2 கப்                     கடலை மாவு [ Besan ]
1 Tbsp                       அரிசி மாவு
1 Tsp                         ஓமம் [ optional ]
1/4 Tsp                     உப்பு
2 சிட்டிகை          பெருங்காயம்
1/8 Tsp                     சிகப்பு மிளகாய் தூள்
1 சிட்டிகை           மஞ்சத்தூள்

காரா பூந்தி செய்ய :
1/2 கப்                    கடலை மாவு  [ Besan ]
2 Tbsp                       அரிசி மாவு
1/4 Tsp                     உப்பு
1 சிட்டிகை          மஞ்சத்தூள்
1 சிட்டிகை          பெருங்கயத்தூள்

மற்ற பொருட்கள் :
1/2 கப்                    சோள வத்தல் [ if available ]
1/4 கப்                 பொட்டுக்கடலை [ வறுகடலை ]
1/4 கப்                  நில கடலை [ Ground nuts ]
1/4 கப்                   கெட்டி அவல்  [ optional ]
15 - 20                    கறுவேப்பிலை

தூவுவதற்கு :
1 Tsp                      சர்க்கரை பொடித்தது
1/4 Tsp                   பெருங்கயத்தூள்
1 Tsp                      உப்பு [adjust]
1/2 Tsp                   சிகப்பு மிளகாய் தூள் [adjust]

2 கப்               எண்ணெய் பொரிப்பதற்கு

செய்முறை :
ஓமப்பொடி எவ்வாறு செய்வது என முன்பே பார்த்திருக்கிறோம்.

ஓமப்பொடி

அதில் கொடுக்கப்பட்டுள்ள செய்முறையை பின்பற்றி ஓமப்பொடி செய்து தனியே ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
நொறுக்கிக் கொள்ளவும்.

ஓமப்பொடி


அடுத்து காராபூந்தி செய்யும் முறை :

கடைசி ஈடு ஓமப்பொடி பொரிந்து கொண்டிருக்கும் போதே காரா பூந்திக்கு மாவு தயாரிக்க ஆரம்பித்து விடவும்.

காராபூந்தி  செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒரு பேசினில் எடுத்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

Karaboondhi batter


ஓமப்பொடி செய்து முடித்த அதே காய்ந்து எண்ணெய் மீது சாரணி [ ஓட்டைகள் கொண்ட கரண்டி ] யை இடது கையால் பிடித்துக்கொள்ளவும்.
வலது கையினால் ஒரு கரண்டி மாவை எடுத்து சாரணி மீது விடவும்.
சாரணியை ஒரு தட்டு தட்டியோ அல்லது வலது கையில் உள்ள கரண்டியால் இலேசாக தேய்த்து விடவும்.
ஓட்டைகளின் வழியே மாவு கீழே உள்ள சூடான எண்ணெயில் விழுந்து பொறியும்.
ஒரு தடவைக்கு ஒரு கரண்டி மாவு மட்டுமே சாரணி மேல் ஊற்றி தேய்க்க வேண்டும்.
சிவக்க வறுத்தெடுத்து எண்ணெய் வடிய டிஷ்யு தாளின் மீது வைக்கவும்.


மாவு உள்ள வரை இதே போல எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

எண்ணெய் வடித்த பிறகு ஒமப் பொடி எடுத்து வைத்துள்ள பாத்திரத்திற்கு மாற்றவும்.

அடுத்து சோள வத்தலை பொரித்தெடுக்கவும். வறுத்தெடுத்து எண்ணெய் வடித்து எடுத்து இதனையும் ஓமப்பொடி மற்றும் காராபூந்தி உள்ள பாத்திரத்தில் சேர்க்கவும்.


நில கடலை, பொட்டுக்கடலை, கறுவேப்பிலை ஆகிய அனைத்தையும் தனித்தனியாக பொரிதெடுத்து சேர்க்கவும்.


அவல் எடுத்திருந்தால் அதனையும் பொரித்துக்கொள்ளவும்.

தூவுவதற்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் அவரவர் ருசிக்கேற்ற படி தூவி கலந்து விடவும்.

மிக்ஸர் மிக்ஸர்

காற்றுப்புகா பாத்திரத்தில் எடுத்து வைத்து பத்திர படுத்தவும்.


மிக்ஸர்

மாலை நேரத்தில் காபி அல்லது தேநீருடன் சுவைக்க ஏற்றது.
இது தீபாவளி பலகாரங்களில் ஒன்றாகும்.

Sunday, October 5, 2014

Maida-Murukku

#மைதாமுறுக்கு : அரிசியில் முறுக்கு செய்தால்தான் சுவையும் மணமும் அருமையாக இருக்கும். ஆனால் மைதா உபயோகித்தும் முறுக்கு செய்யலாம். இந்த முறுக்கு அரிசி கொண்டு செய்யப்படுவதைக் காட்டிலும் மென்மையாக இருக்கும். சரியான பதத்தில் மாவு தயாரிக்க படவில்லையெனில் எண்ணெயை குடிக்கும்.
இப்போது எவ்வாறு செய்வது என காண்போம்.

மைதா முறுக்கு


தேவையான பொருட்கள் :
1/2 Cupமைதா மாவு
1 Tbspகடலை மாவு [ Gram Flour ]
1 1/4 Tbspபொட்டுகடலை மாவு [ Pottukadalai maavu ]
1/2 Tspஉப்பு  [ Adjust ]
1/2 Tspசிகப்பு மிளகாய் தூள்
2 pinchபெருங்காயம்
1/4 Tspஓமம்[ Optional ]
1/4 Tspசீரகம்
1/4 Tspஎள்ளு
1 Tspசூடான எண்ணெய்

பொரித்தெடுக்க தேவையான எண்ணெய்.
முறுக்கு பிழிய முறுக்கு அச்சு.


செய்முறை :
அடுப்பில் இட்லி பானையை வைத்து தண்ணீர் விட்டு சூடாக்கவும்.

ஒரு பேசினில் மைதாவை எடுத்துக்கொள்ளவும்.
அதன் மேல் ஒரு சுத்தமான துணியை போட்டு மூடவும்.
அப்படியே இட்லி பானையினுள் ஸ்டீமர் தட்டின்மேல் வைத்து மூடி 8 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும்.

வெந்த மாவை ஆற வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும்.

வேறொரு வாயகன்ற பாத்திரத்தில் வேகவைத்த மைதா, மற்றும் மற்ற பொருட்கள் அனைத்தையும் ஒரு பேசின் அல்லது வாயகன்ற பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.


கைகளால் நன்கு கலந்து விடவும்.

ஒரு தேக்கரண்டி சூடான எண்ணெயை மாவில் விட்டு கைகளால் பிசறி விடவும்.

பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு கெட்டியான மாவாக பிசைந்துக் கொள்ளவும்.

முறுக்கு பிழியும் அச்சில் முறுக்கு துவாரம் உள்ள தட்டை போட்டு மாவை நிரப்பவும்.

எண்ணெய் சூடாகி விட்டதா என பார்த்த பின்னர் சிறு தட்டிலோ அல்லது சாரணியின் பின்புறமோ முறுக்கை பிழிந்து எண்ணையில் கவனமாக மெதுவாக போடவும்.

எடுத்துக்கொண்ட எண்ணெயின் அளவிற்கு ஏற்றவாறு ஒரு தடவைக்கு 3 அல்லது 4 முறுக்குளை போட்டு பொரிக்கவும்.
ஓரிரு நிமிடங்கள் அப்படியே பொரிய விடவும்.


பின்னர் சாரணியால் திருப்பிவிட்டு பொரிக்கவும்.


பொரிவது அடங்கியவுடன் எடுத்து டிஷ்யு தாளின் மேல் வைக்கவும்.


மறுபடியும் எண்ணெய் சரியான சூட்டில் இருக்கிறதா என சோதித்த பின்னர் அடுத்த ஈடு முறுக்குகளை போட்டு பொரிக்கவும்.

பின்னர் காற்று புகா டப்பாவில் எடுத்து வைத்து பத்திரபடுத்தவும்.

மைதா முறுக்கு

சுவையான மைதா முறுக்கு தயார். டீ அல்லது காபியுடன் சுவைக்க அருமையாக இருக்கும்.

குறிப்பு :
அதிக அளவில் செய்யும் போது ஒரே முறை மாவை தண்ணீர் விட்டு பிசைய கூடாது. எல்லா பொருட்களையும் கலந்து சூடான எண்ணெய் விட்டு பிசறி வைக்கவும். 
அதிலிருந்து சிறிதளவு இரண்டு அல்லது மூன்று முறைக்கு தேவையானதை தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.
மறுபடியும் தேவையான மாவு இரண்டாவது ஈடு அடுப்பில் இருக்கும் பொது தயார் செய்தால் எல்லாவற்றின் சுவையும் ஒரே சுவையுடன் இருக்கும்.
ஒரே தடவை பிசைந்து போடும் பொது கடைசியாக போகப்போக முறுக்கு கடுக்கென்று இருக்கும்.

குக்கரிலும் வைத்து மைதா மாவை ஆவியில் வேகவைக்கலாம். குக்கரில் தண்ணீர் விட்டு அதனுள் மாவை வைத்து மூடி வெயிட் போடாமல் 8 நிமிடங்கள் வேக வைக்கவேண்டும்.






Wednesday, September 24, 2014

Omapodi

#ஓமப்பொடி : ஓமப்பொடி தீபாவளி பலகாரங்களில் ஒன்று ஆகும். #மிக்ஸர் செய்யும் போதும் அதில் ஓமப்பொடி கலக்கப்படும்.
ஓமப்பொடி சாப்பிட வேண்டும் என்ற அவா சென்ற வாரம் தலை தூக்கியது. கடலை மாவு மற்றும் ஓமம் சேர்த்து மாவு பிசைந்து இடியாப்பம் போல பிழிந்து எண்ணெயில் பொரித்தேடுப்பதே ஓமப்பொடி ஆகும். கடைகளில் விற்கப்படும் ஓமப்பொடியில்  கடலை மாவு வாசனையும் பொரிக்கப்படும் எண்ணெய் வாசனையுமே இருக்கின்றது. அதிலும் இங்கு ராய்ப்பூரில் கிடைப்பவை சாட் மசாலா வாசனையே தூக்கலாக உள்ளது.
ஓமம் வாசனைக்காகவும் அதன் ருசிக்காகவுமே இந்த பலகாரம் விரும்பப்படுகிறது.
அதனால் வீட்டிலேயே செய்து ருசிக்கலாம் என முடிவெடுத்து காரியத்திலும் இறங்கி வெற்றியும் கண்டு விட்டேன்.
எவ்வாறு என பார்ப்போமா?!!


தேவையான பொருட்கள் :
1 1/4 கப்                               கடலை மாவு
1/4 கப்                                  அரிசி மாவு
1 Tbsp                                    ஓமம்
1/4 Tsp                                   சிகப்பு மிளகாய் தூள்  [ adjust ]
2 pinches                                மஞ்சத்தூள்
1/2 Tsp                                   உப்பு  [ adjust ]
11/2 cup                                 எண்ணெய் பொரிப்பதற்கு

முறுக்கு  பிழியும் இயந்திரம் இடியாப்ப அச்சுடன்.


செய்முறை :
ஓமத்தை ஒரு சிறிய கிண்ணத்தில் 4 முதல் 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
குறிப்பிட்டுள்ள மணி நேரத்திற்கு பிறகு மிக்சியில் தண்ணீர் விட்டு மைய அரைக்கவும்.
அரைக்கப்படாத ஓமம் மற்றும் சிறு துகள்களை அகற்றுவதற்காக  டீ வடிகட்டியில் வடிகட்டிகொள்ளவும். இல்லாவிடின் இடியாப்ப அச்சின் ஓட்டைகளை அடைத்துக்கொள்ளும்.

வாணலியில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மாவு, உப்பு, மிளகாய் தூள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும்.


ஓம கரைசலை ஊற்றி மேலும் தேவையானால் சிறிது தண்ணீர் விட்டு கெட்டியான மாவாக பிசைந்து கொள்ளவும்.


முறுக்கு பிழியும் இயந்திரத்தின் உள்ளே மாவை வைத்து தயார் செய்யவும்.

ஒரு தட்டின் மேல் எண்ணெய் உறிஞ்சும் தாளை பரப்பி தயாராக வைக்கவும்.

எண்ணெய் சூடாகி விட்டதா என அறிய சிறு உருண்டை மாவை எண்ணையில் போடவும். பொறிந்துகொண்டே மேலேழும்பினால் எண்ணெய் சூடாகி விட்டது என அர்த்தம்.

மாவுடன் கூடிய முறுக்கு இயந்திரத்தை சூடான எண்ணெயின் மேலே பிடித்துக் கொண்டு ஒரு வட்டமாக பிழிந்து விடவும்.


முறுக்கு இயந்திரத்தை கீழே வைத்து விட்டு சாரணியால் பிரட்டி விட்டு பொரிவது அடங்கியவுடன் எடுத்து விடவும்.


தயாராக உள்ள தட்டின் மீது எடுத்து வைக்கவும்.

அடுத்த ஈட்டிற்காக மறுபடியும் மேலே கூறியவாறு பிழிந்து பொரித்தெடுக்கவும்.

ஒவ்வொரு முறை பிழியும் போதும் எண்ணெயின் சூடு சரியாக  இருக்கிறதா என பார்த்துக்கொள்ளவும்.
எண்ணெயின் சூட்டை தேவைக்கு ஏற்றவாறு கூட்டி குறைப்பது அவசியம்.
ஒமப்பொடியின் இழைகள் மிக மெல்லியதாக இருப்பதால் மிக விரைவில் பொரிந்து விடும்.

ஒரு மூடியுடன் கூடிய டப்பாவில் எடுத்து வைக்கவும்.


இந்த அளவு மாவில் 6 முதல் 7 ஈடு பொரித்தெடுக்க வேண்டியதாய் இருக்கும்.


காபி மற்றும் டீயுடன் மாலையில் சுவைக்க மிக மிக ஏற்ற பலகாரமாகும்.


Wednesday, January 29, 2014

Puli Koozh - Tamarind Koozh

#புளிக்கூழ் : இது அரிசி, புளி மற்றும் பருப்பு வகைகளை சேர்த்து செய்யப்படும் ஒரு புளிப்பு சுவையுடன் கூடிய காரம் ஆகும். இதனை சூடாக சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும். ஆறினாலும் அருமையாக இருக்கும்.
பொதுவாக மாலை நேர சிற்றுண்டியாகவே செய்யப்படும்.
இனி எப்படி செய்வது என பார்க்கலாம்.

புளிக்கூழ்

தேவையான பொருட்கள் :


நெல்லி அளவு                        புளி, நீரில் ஊறவைக்கவும்
1/3 கப்                                          அரிசி மாவு
2 அ 3                                            சிகப்பு மிளகாய்
சிறு துண்டு                              பெருங்காயம்
1/2 Tsp                                           கடுகு
4 Tsp                                              நிலக்கடலை
2 Tsp                                              கடலை பருப்பு
1 Tsp                                              உளுத்தம் பருப்பு
6                                                    கருவேப்பிலை
4 Tsp                                             நல்லெண்ணெய்

செய்முறை :
அரிசி மாவை 1/3 கப் தண்ணீர் விட்டு கரைத்து தனியே வைக்கவும்.
புளியை 1/2 கப் தண்ணீர் விட்டு கரைத்து வடி கட்டி தனியே எடுத்து வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு குறைந்த தணலில் சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் கடுகை வெடிக்க விடவும்.
அதன் பின் மிளகாய் துண்டுகள், உளுத்தம் பருப்பு, பெருங்காயம் மற்றும் கடலை பருப்பு போட்டு சிறிது நேரம் வறுக்கவும்.
பிறகு கடலையை சேர்த்து வறுக்கவும்.
எல்லா பருப்பும் பொன்னிறமானதும் கருவேப்பிலையை சேர்க்கவும்.
உடனே புளி கரைசலை விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கொதிக்க ஆரம்பித்ததும் தணலை குறைத்து அரிசி மாவு கரைசலை சேர்த்து சாரணியால் விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
கிளறாமல் விட்டால் கட்டி கட்டி ஆகிவிடும். அடியும் பிடித்து விடும்.


சிறிது நேரத்தில் வாணலியில் ஒட்டாமல் வரும் பொது எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி மேலே 1/2 Tsp எண்ணெய் விட்டு ஒரு தேக்கரண்டியால் ஒரே சீராக பரப்பி விடவும்.
சூடாக இருக்கும் போது துண்டுகள் போட முடியாது.

புளிக்கூழ்

அப்படியே கிண்ணத்தில் எடுத்து தேக்கரண்டி கொண்டுதான் சாப்பிட வேண்டும்.
ஆறிய பின்  துண்டுகள் போட்டு கேக் போல சாப்பிடலாம்.

புளிக்கூழ்

இதன் ருசி மிக மிக அருமையாக இருக்கும். சூடாக இருக்கும் போதே மள மளவென காலியாகி விடும். துண்டுகளாக்க மிச்சம் ஒன்றும் தேறாது!!






மேலும் சில உணவு வகைகள் முயற்சி செய்து பார்க்க :

சோயா பூரணம்
சோயா பூரணம்
போளி - சோயா பூரணம்
போளி - சோயா பூரணம்
போளி மாவு
போளி  மாவு
போளி - உருளை பூரணம்
போளி - உருளை பூரணம்
தேங்காய் பூரணம்
தேங்காய் பூரணம்