Search This Blog

Thursday, April 23, 2015

Samai-Bisibelebath

#சாமைபிசிபெளேபாத்  #சாமைசாம்பார்சாதம் : #சாமைஅரிசி சுருக்கமாக #சாமை #சிறுதானியம் வகைகளில் மிகவும் அளவில் சிறியது ஆகும். ஆனாலும் இதில் விட்டமின்களும் தாதுக்களும் அதிகமாக நிறைந்துள்ளன. இரும்பு சத்தும் துத்தநாக சத்தும் மிக அதிக அளவில் நிறைந்து உள்ளது. அரிசியை சமையலுக்கு உபயோகிப்பது போலவே எல்லா வகையான சமையலிலும் சாமையையும் பயன் படுத்தலாம்.
இங்கு கர்நாடகத்தில் #பிசிபெளேபாத், அதாவது சாம்பார் சாதம் மிகவும் பிரசித்தம். கல்யாணம் மற்றும் பிற விருந்துகளில் பிசிபெளேபாத் கட்டாயமாக இடம் பெற்றிருக்கும்.
நான் பொதுவாக சாதம் மற்றும் பருப்பை ஒன்றாக ஒரு குக்கரிலும் சாம்பாரை மற்றொரு குக்கரிலும் செய்த பின்னர் ஒன்றாக கலந்து தாளித்து கொட்டி சாம்பார் சாதம் செய்வது வழக்கம். எனது மகள் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து ஒரே குக்கரிலேயே செய்ய கற்றுக் கொடுத்தாள். அவ்வாறே சென்ற வாரம் சாமை அரிசியில் பிசிபெளேபாத் [ சாம்பார் சாதம் ] செய்தேன். மிக மிக அருமையாக இருந்தது.
இப்போது செய்முறையை காண்போம்.


Samai Bisibelebath

தேவையான பொருட்கள் :
1/2 கப்சாமை அரிசி [ Little Millet ]
1/4 கப்துவரம் பருப்பு
1 சிட்டிகைமஞ்சத்தூள்
எலுமிச்சை அளவு புளி
10 - 15சின்ன வெங்காயம் [ சாம்பார் வெங்காயம் ]
1 சிறிய அளவுவெங்காயம், மெல்லியதாக நறுக்கவும்.
3 - 4பச்சை மிளகாய், நீளவாக்கில் கீறவும்
10 - 15கறுவேப்பிலை
1/4 கப்நூல்கோல் பொடியாக நறுக்கியது
1/4 கப்கத்தரிக்காய் பொடியாக நறுக்கியது
1/4 கப்முருங்கைக்காய் நறுக்கியது
1/4 கப்காரட் பொடியாக நறுக்கியது
1/4 கப்உருளை கிழங்கு பொடியாக நறுக்கியது
1/4 கப்பச்சை பட்டாணி [ optional ]
4 Tspசாம்பார் பொடி
2 Tspமல்லித்தூள்
1/4 Tspமஞ்சத்தூள்
3 Tspஉப்பு [ adjust ]
2 Tspபிசிபெளேபாத் பொடி
1/2 Tspமிளகாய் தூள் [ adjust ]
தாளிக்க :
1 Tspகடுகு
1/2 Tspபெருங்காய தூள்
2 Tspஎண்ணெய்
கடைசியில் தாளிக்க :
1 Tspநெய்
1/4 Tspமிளகாய் தூள்
1 Tspகடுகு
6 - 7கறுவேப்பிலை
கொத்தமல்லி தழை அலங்கரிக்க.
செய்முறை :
புளியை வெதுவெதுப்பான தண்ணீரில் ஊறவைக்கவும்.
சாமை அரிசி மற்றும் பருப்பை ஒரு பாத்திரத்தில் இட்டு இரு முறை கழுவி தண்ணீரை வடித்து விட்டு தனியே வைக்கவும்.
சமைக்க உபயோகிக்கப் போகும் குக்கரை தயாராக வைக்கவும்.

அடுப்பில் வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடானதும் முதலில் கடுகை வெடிக்க விட்டு பின்னர் பெருங்காயம், கீறி வைத்துள்ள பச்சை மிளகாய், கறுவேப்பிலை மற்றும் சிறிய வெங்காயம் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
கடைசியாக பெரிய வெங்காயம் சேர்த்து அரை நிமிடம் வதக்கவும்.
வதக்கியவற்றை எடுத்து வைத்துள்ள குக்கரில் கொட்டவும்.

மீண்டும் அதே வாணலியை அடுப்பில் வைத்து அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை ஓரிரு நிமிடங்கள் வதக்கவும்.
பின்னர் கொடுக்கப்பட்டுள்ள பொடிகளை சேர்த்து அரை நிமிடம் பிரட்டி அதே குக்கரில் கொட்டவும்.
3 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
அடுப்பில் அதிக தீயில் வைத்து சூடாக்கவும்.
கழுவி வைத்துள்ள சாமை அரிசி மற்றும் பருப்பை சேர்க்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
ஊறவைத்துள்ள புளியை 1/2 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி குக்கரில் ஊற்றவும்.

ஒரு கரண்டியால் நன்கு கலக்கி விட்டு மூடி வெயிட் வைத்து மூன்று விசில் அடிக்கும் வரை வைக்கவும்.
பின்னர் தீயை குறைத்து 5 நிமிடங்கள் வேக விடவும்.
அடுப்பை அணைத்து விட்டு நீராவி அடங்குவதற்காக காத்திருக்கவும்.
ஆவி அடங்கிய பிறகு குக்கரை திறந்து ஒரு கனமான கரண்டியால் நன்கு மசித்த படி கலக்கி விடவும்.
உப்பு சரி பார்க்கவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

அடுப்பில் வாணலியை சூடாக்கி நெய் விட்டு கடுகு வெடிக்க விடவும்.
அடுத்து கறுவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைத்து விட்டு மிளகாய் தூளை சேர்த்து ஒரு சில மணித்துளிகள் வைத்திருந்த பின்னர் தயாராக உள்ள பிசிபெளேபாத்தின் மேல் கொட்டவும்.
கொத்தமல்லி தழையை தூவி அலங்கரிக்கவும்.
சூடாக இருக்கும் போதே சுவைத்தால்தான் ருசி அருமையாக இருக்கும்.
தயிர்பச்சடி அல்லது விருப்பமான கறியுடன் சுவைக்கலாம்.

Samai Bisibelebath


குறிப்பு :
பிசிபெளேபாத் பொடி கடைகளில் தயாராக கிடைக்கிறது.








மேலும் சில சாத வகைகள் செய்து சுவைக்க

கருவேப்பிலை சாதம் நெல்லிக்காய் சாதம் முருங்கைக்கீரை சாதம்
மணத்தக்காளி கீரை சாதம் தேங்காய் பால் காய்கறி புலாவ்







No comments:

Post a Comment