Search This Blog

Showing posts with label koozh. Show all posts
Showing posts with label koozh. Show all posts

Friday, October 16, 2020

Lemon_Koozh

 #எலுமிச்சைகூழ்  [  #LemonKoozh ] :

நான் தற்போது மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு சிற்றூராகிய சித்தரஞ்சன் என்ற இடத்தில் வசித்து வருகிறேன். இங்கு என் வீட்டைச் சுற்றி பல மரங்கள் உள்ளன. அவற்றில் மூன்று எலுமிச்சை மரங்களும் அடங்கும். அதனால் எப்போதும் எலுமிச்சை அபரிமிதமாக கிடைத்துக்கொண்டே இருக்கிறது. 

பொதுவாக எலுமிச்சை ரசம் தான் செய்வது வழக்கம். தற்போது அதிக அளவில் எலுமிச்சை பழங்கள் காய்ப்பதால் சாம்பாரையும் எலுமிச்சை சாறு கொண்டு தயாரித்துக்கொண்டிருக்கிறேன். எலுமிச்சை கொண்டு ஊறுகாய் தயாரித்து சேமித்துவைத்திருக்கிறேன். இது தவிர உப்பு எலுமிச்சங்கா ஊறுகாயும் செய்து பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். எலுமிச்சை சாறு எடுத்து கண்ணாடி குடுவையில் நிரப்பி குளிர் சாதனப் பெட்டியில் சேமித்துவைத்திருக்கிறேன். எலுமிச்சை சாறு எடுத்த பின்பு அதனுள்ளே இருக்கும் வெள்ளை நிறத் தோல்களை நீக்கி விட்டு மஞ்சள் நிறமான வெளிப்புறத் தோலை வெய்யிலில் காய வைத்து பத்திரப்படுத்தியுள்ளேன். இந்த காய்ந்த தோலைக்கொண்டு தேனீர் செய்து சுவைத்து வருகிறேன். இவைதவிர வேறு என்ன செய்யலாம் என யோசித்த போது புளிக்கூழ் ஞாபகத்திற்கு வந்தது.

புளிக்கூழ் என்ற மாலை நேர பலகாரத்தை பலரும் மறந்திருப்பார்கள் என எண்ணுகிறேன். புளிப்பும் காரமும் நிறைந்த நாக்கை சப்புக்கொட்ட வைக்கும்  இந்த பலகாரம் மிக எளிதில் தயாரிக்கக்கூடிய ஒன்றாகும். அதன் சுவையும் மணமும் செய்யும் போதே நம்மை சுண்டியிழுக்கும். செய்து முடித்து தட்டில் கொட்டியவுடன் கையால் எடுத்து நக்கி சாப்பிட்டே முழுவதும் காணாமல் போய்விடும். 

அத்தகைய மிகவும் சுவையான கூழ் அரிசி மாவிலிருந்து செய்யப்படுகிறது. புளிப்பிற்காக புளித்தண்ணீர் மற்றும் சிகப்பு மிளகாய், சில பருப்பு வகைகளை வறுத்து சேர்த்து செய்யப்படுகிறது. புளிக்குப் பதிலாக புளித்த மோர் சேர்த்தும் இந்த பலகாரம் செய்வதுண்டு. 

தற்போது இந்த சுவையான கூழை புளிக்குப் பதிலாக எலுமிச்சை சாறு சேர்த்து எவ்வாறு செய்யலாம் என காண்போம்.

உலர்ந்த அரிசி மாவு அல்லது இட்லி மாவு அரைக்கும் போது சிறிதளவு எடுத்து வைத்த அரைத்த அரிசி மாவு ஏதேனும் ஒன்றை இந்த பலகாரம் செய்ய உபயோகப்படுத்தலாம்.

தயாரிக்க ஆகும் நேரம்              : 20 நிமிடங்கள்

இரண்டு முதல் மூன்று நபர்களுக்கு பரிமாறலாம்.


Lemon koozh [ Elumichai koozh ]


தேவையானவை :
1/2 Cupஅரிசி மாவு
1எலுமிச்சம்பழம் [ லெமன் ]
1 - 2பச்சை மிளகாய்,பொடியாக நறுக்கவும் [ adjust ]
1 Tspஇஞ்சி பொடியாக நறுக்கியது
1/2 Tspமஞ்சள் கிழங்கு பொடியாக நறுக்கியது*
10 - 15கருவேப்பிலை
1/2 Tspகடுகு
1/2 Tspஉளுத்தம் பருப்பு
1 Tspகடலை பருப்பு [ chick pea ]
2 Tspநிலக்கடலை [ pea nut ] உடைத்து
Small pieceபெருங்காயம்
4 Tspநல்லெண்ணெய் [ Sesame/Til oil ]**

* மஞ்சள் கிழங்கு இல்லையெனில் 1/4 Tsp மஞ்சத்தூளை சேர்க்கவும்.
**தங்களது சுவைக்கேற்ப எண்ணெய்யை தேர்ந்தெடுக்கவும்.



செய்முறை :

உலர்ந்த அரிசி மாவை எலுமிச்சை கூழ் செய்ய எடுத்திருந்தால் 1 கப் தண்ணீரில் நன்கு கலக்கி தனியே வைக்கவும்.

[ அல்லது இட்லி அல்லது தோசை மாவு அரைக்கும் போது 1/2 கப் அரிசி மாவு எடுத்து வைத்திருப்பின் 3/4 கப் தண்ணீரில் நன்கு கலந்து தனியே வைக்கவும். ]

அடுப்பில் இரும்பு வாணலியை வைத்து எண்ணெய் விட்டு மிதமான தீயின் மேல் சூடாக்கவும்.

எண்ணெய் சூடாகி இலேசாக புகைய ஆரம்பித்ததும் கடுகை போட்டு வெடிக்க விடவும்.

அடுத்து பெருங்காய கட்டி, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, உடைத்து வைத்துள்ள நிலக்கடலை முதலியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

தீயை நன்கு குறைக்கவும்.

பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலையை சேர்த்து சில மணித்துளிகள் வதக்கவும்.

அடுத்து பொடியாக நறுக்கி வைத்துள்ள இஞ்சி மற்றும் மஞ்சள் துண்டுகளை சேர்த்து சில மணித்துளிகள் வதக்கவும்.

இப்போது தண்ணீரில் கரைத்து வைத்துள்ள அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து விடாமல் கிளறி கொண்டே இருக்கவும்.

கிளறுவதை நிறுத்தினால் அடிபிடித்து விடும்.

தண்ணீராக இருக்கும் அரிசிக்கலவை கஞ்சி பதத்தை அடையும்.

பிறகு சிறிது சிறிதாக கெட்டியாக ஆரம்பிக்கும்.

கெட்டியானவுடன் எலுமிச்சை சாரை ஊற்றி கிளறவும்.

உப்பு மற்றும் புளிப்பு சுவையை சரி பார்த்து தேவையெனில் சிறிது சேர்க்கவும்.

சிறிது நேரத்தில் நன்கு கெட்டிப்பட்டு வாணலியில் ஓரத்தில் ஒட்டாமல் பந்து போல உருண்டு வரும்.

அத்தருணத்தில் ஒரு உலர்ந்த சுத்தமான தட்டில் கொட்டவும்.

Lemon koozh [ Elumichai koozh ]

எலுமிச்சை கூழின் மேல் புறம் அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு ஒரு உலர்ந்த சுத்தமான தேக்கரண்டியின் பின் பக்கத்தைக் கொண்டு சமமாக பரப்பி விடவும்.

Lemon koozh [ Elumichai koozh ]

சூடாக இருக்கும் போது தேக்கரண்டி கொண்டு எடுத்து கிண்ணத்தில் பரிமாறவும்.

Lemon koozh [ Elumichai koozh ]

சிறிது ஆற விடவும்.

பின்னர் துண்டுகள் போட்டு சூடான காபி அல்லது தேநீருடன் பரிமாறவும்.

இளம் மஞ்சள் நிறத்தில் எலுமிச்சை கூழ் பார்க்கவே அற்புதமாக இருக்கும்.

சுவையும்தான்!! ஆஹா என நாக்கை சப்புகொட்டவைக்கும் அருமையான மாலை நேர பலகாரம்!!

Lemon koozh [ Elumichai koozh ]

இந்த பலகாரம் சூடாக சுவைத்தால் அருமையாக இருக்கும்.

ஆறியவுடன் சுவைத்தால் மேலும் அற்புதமாக இருக்கும்.






மேலும் சில உணவு வகைகள் முயற்சி செய்து பார்க்க :

சோயா பூரணம்
சோயா பூரணம்
போளி - சோயா பூரணம்
போளி - சோயா பூரணம்
வாழைப்பூ மசால் வடை
வாழைப்பூ மசால் வடை
போளி - உருளை பூரணம்
போளி - உருளை பூரணம்
கம்பு பகோடா
கம்பு பகோடா

புளிக்கூழ்
புளிக்கூழ்



பலவித பலகாரங்கள் அட்டவணை

Sunday, February 9, 2014

Kambu Koozh

#கம்புகூழ் : ஆங்கிலத்தில் #கம்பு #PearlMillet என அழைக்கப்படுகிறது.
ஹிந்தியில் பாஜ்ரா [ #Bajra ] எனவும், தெலுங்கில் #Sajja அல்லது #Gantilu  எனவும், கன்னடத்தில் #Sajje எனவும் அழைக்கப்படுகிறது.
இதன் அறிவியல் பெயர் : Pennisetum glaucum

கம்பு [ Pearl millet ]

உலகளவில் சிறு தானிய வகைகளில் மிக அதிகமாகப்  பயிரிடப்படும் தானியம் கம்பு ஆகும்.
மேலும் அறிய
சிறு தானியங்கள்
முழு கம்பு தானியம், கம்பு குருணை [ ரவா ], மற்றும் கம்பு மாவு சமையலில் உபயோகப்படுத்தப்படுகிறது.
இங்கு கம்பு உபயோகப் படுத்தி கூழ் [ கஞ்சி ] செய்வது எப்படி என பார்ப்போம்.

கம்பு கூழ்

தேவையான பொருட்கள் :
1 Tbsp                                         கம்பு
1/2 கப்                                        தயிர்
3                                                  சின்ன வெங்காயம் ( விருப்பப்பட்டால் )
6                                                  கருவேப்பிலை ( விருப்பப்பட்டால் )
1 சிட்டிகை                             பெருங்காயதூள்

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் கம்பை போட்டு தண்ணீர் விட்டு கழுவிய பின் வடித்து விட்டு அப்படியே பத்து நிமிடங்கள் வைக்கவும்.
பிறகு மிக்சியில் கொர கொரவென அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் விட்டு அரைத்த கம்பு குருணையையும் சேர்த்து மிதமான தீயில் சூடாக்கவும்.
கரண்டியால் விடாமல் கலக்கிக் கொண்டே இருக்கவும்.
சில நிமிடங்களில் கஞ்சி பதத்தை அடைந்து விடும்.
மேலும் சில நிமிடங்கள் கம்பு நன்கு வேகும் வரை கொதிக்க விட்டு பெருங்காய தூள் மற்றும் உப்பு சேர்த்து இறக்கவும்.

நன்கு ஆறிய பின் தயிரை கடைந்து விட்டு கலக்கி உப்பு சரி பார்க்கவும்.
ஒரு பரிமாறும் கிண்ணத்தில் ஊற்றி வெங்காய துண்டுகள் மற்றும் கருவேப்பிலை தூவி சுவைக்கவும்.
கம்பு கூழ் கம்பு கூழ்

குறிப்பு :

  • முதல் நாளே கஞ்சியை தயாரித்து மறுநாள் மோரோ அல்லது கடைந்த தயிரோ சேர்த்தும் அருந்தலாம். இவ்வாறு செய்வதால் சிறிது புளிப்பு சுவையுடன் இருக்கும். சுவையும் மிக மிக அருமையாக இருக்கும்.
  • கடுகு, கருவேப்பிலை மற்றும் பெருங்காயம் தாளித்து சேர்த்த கஞ்சி இன்னும் சுவையுடனும் மணத்துடனும் இருக்கும்.
மற்ற கஞ்சி வகைகள் :
குதிரைவாலி வெந்தய கஞ்சி கோதுமைரவா கஞ்சி மக்காசோளரவா கஞ்சி சோள கஞ்சி


Wednesday, January 29, 2014

Puli Koozh - Tamarind Koozh

#புளிக்கூழ் : இது அரிசி, புளி மற்றும் பருப்பு வகைகளை சேர்த்து செய்யப்படும் ஒரு புளிப்பு சுவையுடன் கூடிய காரம் ஆகும். இதனை சூடாக சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும். ஆறினாலும் அருமையாக இருக்கும்.
பொதுவாக மாலை நேர சிற்றுண்டியாகவே செய்யப்படும்.
இனி எப்படி செய்வது என பார்க்கலாம்.

புளிக்கூழ்

தேவையான பொருட்கள் :


நெல்லி அளவு                        புளி, நீரில் ஊறவைக்கவும்
1/3 கப்                                          அரிசி மாவு
2 அ 3                                            சிகப்பு மிளகாய்
சிறு துண்டு                              பெருங்காயம்
1/2 Tsp                                           கடுகு
4 Tsp                                              நிலக்கடலை
2 Tsp                                              கடலை பருப்பு
1 Tsp                                              உளுத்தம் பருப்பு
6                                                    கருவேப்பிலை
4 Tsp                                             நல்லெண்ணெய்

செய்முறை :
அரிசி மாவை 1/3 கப் தண்ணீர் விட்டு கரைத்து தனியே வைக்கவும்.
புளியை 1/2 கப் தண்ணீர் விட்டு கரைத்து வடி கட்டி தனியே எடுத்து வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு குறைந்த தணலில் சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் கடுகை வெடிக்க விடவும்.
அதன் பின் மிளகாய் துண்டுகள், உளுத்தம் பருப்பு, பெருங்காயம் மற்றும் கடலை பருப்பு போட்டு சிறிது நேரம் வறுக்கவும்.
பிறகு கடலையை சேர்த்து வறுக்கவும்.
எல்லா பருப்பும் பொன்னிறமானதும் கருவேப்பிலையை சேர்க்கவும்.
உடனே புளி கரைசலை விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கொதிக்க ஆரம்பித்ததும் தணலை குறைத்து அரிசி மாவு கரைசலை சேர்த்து சாரணியால் விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
கிளறாமல் விட்டால் கட்டி கட்டி ஆகிவிடும். அடியும் பிடித்து விடும்.


சிறிது நேரத்தில் வாணலியில் ஒட்டாமல் வரும் பொது எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி மேலே 1/2 Tsp எண்ணெய் விட்டு ஒரு தேக்கரண்டியால் ஒரே சீராக பரப்பி விடவும்.
சூடாக இருக்கும் போது துண்டுகள் போட முடியாது.

புளிக்கூழ்

அப்படியே கிண்ணத்தில் எடுத்து தேக்கரண்டி கொண்டுதான் சாப்பிட வேண்டும்.
ஆறிய பின்  துண்டுகள் போட்டு கேக் போல சாப்பிடலாம்.

புளிக்கூழ்

இதன் ருசி மிக மிக அருமையாக இருக்கும். சூடாக இருக்கும் போதே மள மளவென காலியாகி விடும். துண்டுகளாக்க மிச்சம் ஒன்றும் தேறாது!!






மேலும் சில உணவு வகைகள் முயற்சி செய்து பார்க்க :

சோயா பூரணம்
சோயா பூரணம்
போளி - சோயா பூரணம்
போளி - சோயா பூரணம்
போளி மாவு
போளி  மாவு
போளி - உருளை பூரணம்
போளி - உருளை பூரணம்
தேங்காய் பூரணம்
தேங்காய் பூரணம்