Search This Blog

Showing posts with label summer special. Show all posts
Showing posts with label summer special. Show all posts

Thursday, June 5, 2014

Watermelon Juice

#தர்பூசணி #பானம் : வெய்யில் காலங்களில் தர்பூசணி பழம் சாலையோரத்தில் குவிக்கப்பட்டு விற்கப்படும். பச்சை நிறத்தின் வெவ்வேறு நிறங்களில் இந்த பழங்களை காணலாம். இந்த பழம் கோடையில் உடலை குளிர்விக்க மிக மிக அவசியமானது.
இதில் தொண்ணூறு சதவிகிதம் தண்ணீர் சத்தும் மீதி சதைபற்றும் மிகுந்து காணப்படுகிறது. இத்தண்ணீர் சத்து கோடையில் உடலை குளிர்விக்க மிக அத்தியாவசியமாகும். இனிப்பும் நிறைந்த பழமாகும்.
இனி இந்த பழத்தை கொண்டு எப்படி பானம் தயாரிக்கலாம் என காண்போம்.


தேவையான பொருட்கள் :
2 கப்                                          தர்பூசணி பழத்துண்டுகள் 
2 Tsp                                           எலுமிச்சை சாறு [ புளிப்பு சுவைக்காக ]
1 சிட்டிகை                             உப்பு 
2 Tsp                                           தேன் [ விரும்பினால் ]


அலங்கரிக்க :
மெல்லியதாக அரிந்த தர்பூசணி துண்டுகள் 

செய்முறை :
மிக்ஸி ஜாரில் கொடுக்கப்பட்டுள்ள அணைத்து பொருட்களையும் அடித்து ஜூசாக்கவும்.

ஜூஸ் பருகும் கண்ணாடி கோப்பையில் ஊற்றி மேலே தர்பூசணி பழ துண்டுகளால் அலங்கரித்து பரிமாறவும்.


ஜூஸ் செய்யும் போது சில்லென்று வேண்டுமானால் ஐஸ் கட்டிகளுடன் சேர்த்து அடித்து தயாரிக்கலாம். ஆனால் சிலருக்கு மிக குளிர்ந்த பானம் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது. பழங்களை குளிர் சாதன பெட்டியில் வைத்திருந்து பின்னர் ஜூஸ் செய்தால் சிறிது சில்லென்று இருக்கும்.

மற்ற பானங்கள்
தர்பூசணி ஆரஞ்சு பானம் 
தர்பூசணி ஆப்பிள் பானம் 

Sunday, June 1, 2014

Muskmelon Mango Juice

#முலாம்பழம்மாம்பழபானம் : #முலாம்பழம் கோடைகாலத்தில் கிடைக்கும் ஒரு அற்புதமான பழம். வைட்டமின் A மற்றும் வைட்டமின் C அதிக அளவில் உடையது. இதை தவிர பொட்டாசியம் மற்றும் மக்னேசியம் தாது நிறைந்துள்ளது. கலோரி அளவு குறைவாகவும் மிகுந்த நீர் சத்து நிரம்பியதாகவும் இருக்கிறது.
இந்த பழம் வெவ்வேறு நிறங்களில் கிடைக்கின்றன. பொதுவாக எல்லாவற்றையும் முலாம் பழம் என்று தமிழிலும் Muskmelon என்று ஆங்கிலத்திலும் அழைக்கின்றோம். மேல்தோல் சிறிது அழுத்தமாகவும் அதனுள்ளே மிருதுவான இன்னொரு தோல் போன்ற பகுதியும் காணப்படுகிறது. இவ்விரு தோல்களை அடுத்து இனிப்பான மஞ்சள் கலந்த ஆரஞ்சு சதைப்பற்றும் நடுவில் விதைகளும் கொண்டவையாக இருக்கின்றன.
சில முலாம்பழ வகைகள் வேறு நிறத்திலும் அமையபெற்றுள்ளது.



பழத்தில் இனிப்பு சுவை நன்றாக இருப்பதால் சர்க்கரை சேர்க்காமலேயே ஜூஸ் தயாரிக்கலாம். இப்பழத்துடன் மாம்பழமும் சேர்ப்பதனால் இனிப்பிற்கு வேறு ஏதும் சேர்க்கவே தேவையில்லை.
இப்போது எப்படி செய்வது என பார்ப்போம்.

முலாம்பழம் மாம்பழ பானம்


தேவையான பொருட்கள் :
1/2 பழம்                                     முலாம்பழம், தோல் நீக்கி துண்டுகளாக்கவும்
1/4 கப்                                         மாம்பழ துண்டுகள்
1 Tsp                                             எலுமிச்சை சாறு
2 சிட்டிகை                               உப்பு
15                                                  புதினா இலைகள்
1/2 கப்                                         தண்ணீர்

செய்முறை :
அனைத்தையும் மிக்சி அரைக்கும் பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
நன்கு கூழாக்கவும்.

ஜூஸ் கோப்பையில் ஊற்றி புதினா இலைகளால் அலங்கரித்து பரிமாறவும்.
மிக்க சுவை நிரம்பிய பானம். கோடை நேரத்தில் அருந்தும் போது உடலுக்கு தேவையான நீர் சத்து கிடைக்கிறது.

முலாம்பழம் மாம்பழ பானம்

புதினா இலைகள் நேரம் செல்ல செல்ல நிறம் மாறும் தன்மை கொண்டது.
அதனால் செய்தவுடன் பருகுவது அவசியம்.

புதினா இலைகளுக்கு பதிலாக துளசி இலைகளை சேர்த்தும் இந்த பானத்தை தயாரிக்கலாம்.


முலாம்பழத்தில் மற்ற பானங்கள் :

முலாம்பழம் ஆரஞ்சு ஜூஸ் 

முலாம்பழம் மாங்காய் ஜூஸ் 

Friday, May 30, 2014

Avakkai Urugai

#ஆவக்காய்ஊறுகாய் : கோடை வெய்யிலுக்கு பயந்தாலும் நாவில் நீர் சுரக்க வைக்கும் மாங்காயை நினைக்கும் போது வெய்யில் காலமும் சுகமானதாகவே தோன்றும்.  மாங்காயை வெட்டி மிளகாய் தூள் அல்லது மிளகு தூள் உப்புடன் சாப்பிட்டால்...... ம் ... அதன் ருசியே தனிதான் !!

சிறு சிறு வடுமாங்காய் விற்க ஆரம்பித்தால் கோடையின் தொடக்கம் என அர்த்தம். அம்மாக்களும் பாட்டிகளும் ஊறுகாய் போட ஆயத்தம் ஆகி விடுவார்கள். முதலில் வடுமாங்காய், அடுத்து மாங்காய் தொக்கு, பிறகு ஆவக்காய் ஊறுகாய் என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
ஆவக்காய் ஊறுகாய் ஆந்திர மாநிலத்தின் பாரம்பரிய ஊறுகாய் ஆகும்.மாங்காய் துண்டுகளை கடுகு, வெந்தயம், மிளகாய் தூள் மற்றும் உப்பு கலந்த எண்ணெயில் ஊற விடுவதே ஆவக்காய் ஊறுகாய் ஆகும்.

எங்களுக்கு எண்ணையில் ஊறிய மாங்காயை சாப்பிட பிடிக்கும். ஆனால் எண்ணெய் கலவை வீணாகி போகும்.
அதனால் எனது தாயார் இதே  பொருட்களை கொண்டு ஆவக்காய் செய்வார்கள். ஆனால் செய்முறையில் சிறு மாற்றம் உண்டு.
மிகவும் புளிப்பில்லாத கொட்டையுடன் கூடிய மாங்காய் கொண்டு செய்யப்படுகிறது. நான் பெரும்பாலும் கிளி மூக்கு மாங்காய் என அழைக்கப்படும் பெங்களூராவை உபயோகப் படுத்தி செய்வது வழக்கம்.
எப்படி என்று இங்கு காணலாம்.

ஆவக்காய் ஊறுகாய் 

தேவையான பொருட்கள் :


1 kg [சுமார் 5 ]                           மாங்காய்
1/2 கப்                                         சிகப்பு மிளகாய் தூள்
1/2 கப்                                         நல்லெண்ணெய்
1/2 கப்                                         உப்பு
1/4 கப்                                         கடுகு
1/8 கப்                                         வெந்தயம்
2 Tsp                                            மஞ்சத்தூள்

செய்முறை :
நாள் 1 :
காயை நன்கு கழுவி வைக்கவும்.
மிகவும் கஷ்டமான வேலை எது என்றால் உள்ளே உள்ள கொட்டை ஓட்டோடு வெட்டுவதுதான்.
முதலில் நீளவாக்கில் இரண்டாக வெட்டவும்.
நடுவில் உள்ள பருப்பை நீக்கி விடவும்.
பிறகு ஒரு அங்குல துண்டுகளாக வெட்டி  அகலமான தட்டில் பரப்பவும்.
வெய்யிலில் 4 முதல் 5 மணி நேரம் காய வைக்கவும்.
சிறிது சுருங்கினாற்போல காய்ந்தால் போதும்.

வீட்டின் உள்ளே அதே தட்டிலேயே வைத்து ஒரு மெல்லிதான துணி கொண்டு மூடி வைக்கவும்.

மாலையில் முதலில் எண்ணெயை அடுப்பில் இலேசாக புகை வரும் வரை சூடு பண்ணி பிறகு அடுப்பை அணைத்து விடவும்.
நன்றாக ஆற விடவும்.

கடுகை சிறிது நற நறவென பொடித்துக் கொள்ளவும்.
அதேபோல வெந்தயத்தையும் பொடித்து தனியே வைக்கவும்.
உணவு பத்திரப்படுத்த தகுதி உள்ள மூடியுடன் கூடிய சுத்தமான பிளாஸ்டிக் டப்பாவை எடுத்துக் கொள்ளவும். ஈரப்பசை சிறிதும் இருக்கக்கூடாது.

பொடித்த பொருட்கள், உப்பு, மிளகாய் தூள் ஆகிய அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் எடுத்து ஒன்றாக கலக்கி வைக்கவும்.
பிளாஸ்டிக் டப்பாவில் கலந்த பொடிகள் மற்றும் எண்ணெய் சேர்த்து கலக்கவும்.
கலக்க உபயோகிக்கும் கரண்டி சுத்தமானதாகவும் ஈரம் இல்லாததாகவும் இருப்பது மிக மிக அவசியம்.
சிறிது சிறிதாக மாங்காய் துண்டுகளை சேர்த்து ஒரு நீண்ட கரண்டியால் கலவையுடன் கலக்கி விடவும்.

எல்லாவற்றையும் நன்றாக கலக்கிய பின்னர் மூடி வைத்து விடவும்.

நாள் 2 :


மறுநாள் பார்த்தால் சிறிது தளர இருப்பதை காணலாம். மாங்காயில் உள்ள தண்ணீர் உப்புடன் சேர்ந்து சிறிது இளக்கம் கொடுத்திருக்கும். நன்றாக குலுக்கி வைக்கவும். சரியாக குலுக்கினாலும் மேலே உள்ள மாங்காய் கீழே போகவில்லை என்றால் டப்பாவை திறந்து ஈரமில்லாத கரண்டியினால் கலக்கி விடலாம். மறுபடியும் மூடி வைத்து விடவும்.

நாள் 3 :
இன்றும் குலுக்கி வைக்கவும்.
நேற்றை விட இன்று இன்னும் சிறிது அதிகமாக நீர்த்து போய் கீழே எண்ணெய் கலவையாக இருப்பதை காணலாம்.


நாள் 4 :
ஒரு சுத்தமான ஈரமே இல்லாத ஒரு தட்டை எடுத்துக் கொள்ளவும்.
மாங்காயை ஒரு சுத்தமான ஈரமில்லாத கரண்டியால் எடுத்து தட்டின் மேல் பரப்பவும்.

கீழே தங்கியுள்ள எண்ணெயை முடிந்தவரை தட்டில் கொட்டாமல் பார்த்துக் கொள்ளவும். அந்த எண்ணெயை ஒரு சிறிய கிண்ணத்தில் வடித்து வேறு சமையலில் பயன் படுத்திக் கொள்ளலாம்.

நல்ல வெய்யிலில் நாள் முழுவதும் காய விடவும்.
இடையே கரண்டியால் பிரட்டி விடவும்.

நாள் 5 :


இன்றும் வெய்யிலில் எடுத்து வைத்து காய வைக்கவும்.
இரண்டு அல்லது மூன்று நாட்கள் காய வைக்கவும்.

பொதுவாக பகல் வெப்ப நிலை 40 டிகிரி செல்சியஸ் க்கு மேலே இருப்பின் இரண்டு நாட்கள் காய வைத்தால் போதும்.
அதற்கு குறைவாக இருப்பின் 3 அல்லது நான்கு நாட்கள் காய வைக்கவும்.
மிகவும் சுக்காக காய வைக்கக்கூடாது.
சிறிது ஈரப் பசை இருக்க வேண்டும்.
சுக்காக காய்ந்து விட்டால் கடிப்பதோ அல்லது பிய்த்து சாப்பிடுவதோ கடினமாக இருக்கும்.

காய்ந்த ஆவக்காயை ஒரு சுத்தமான ஈரமில்லாத கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைக்கவும்.


உடனே சாப்பிட நன்றாக இருக்காது.
20 நாட்கள் முதல் 1 மாதம் வரை ஊறிய பிறகே சாப்பிட பயன் படுத்தலாம்.

சுத்தமாக தண்ணீர் மற்றும் கை படாமல் செய்த ஆவக்காய் ஊறுகாய் இரண்டு வருடங்களுக்கு கூட ... அதற்கு மேலும் கூட உபயோகிக்கலாம்.
அருமையாக இருக்கும். வெந்தயமும் கடுகும் சேர்த்திருப்பதால் உடலுக்கும் நல்லது.
தயிர் சாதத்துடன் சாப்பிட ஏதுவான அருமையான ஊறுகாய் ஆகும்.
பருப்பு சாதம் மற்றும் பருப்பு பொடி சாதத்துடனும் நன்றாக இருக்கும்.
சப்பாத்தி மற்றும் பூரியுடனும் தொட்டுக்கொண்டு சாப்பிட ருசியாக இருக்கும்.





சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க

நெல்லிக்காய் தயிரில் ஊறியது
நெல்லிக்காய் தயிரில் ஊறியது
நெல்லிக்காய் மிட்டாய்
நெல்லிக்காய் மிட்டாய்
நெல்லிக்காய் ஊறுகாய்
நெல்லிக்காய் ஊறுகாய்
தேன் நெல்லிக்காய்
நெல்லிக்காய் தேனில் ஊறியது
உப்பு எலுமிச்சங்காய்
உப்பு எலுமிச்சங்காய்



Tuesday, May 20, 2014

Aam Panna - Maangai Drink

#மாங்காய்பானம் [ #ஆம்பண்ணா ] : இப்போது நான் சத்திஸ்கர் மாநிலத்தின் தலைநகரான ராய்ப்பூரில் வசித்து வருகிறேன். இங்கு கோடைகாலத்தில் இரவு உணவிற்கு சென்றாலோ அல்லது மதிய உணவின் போதும் பன்னா என்னும் மாங்காயில் செய்த பானத்தை அளிக்கிறார்கள்.
நான் விசாரித்த போது மாங்காய் உடலை குளிர்விக்கும். மாம்பழம்தான் உடலுக்கு சூடு என கூறுகிறார்கள்.
அருகில் உள்ளவர்களிடம் இதன் சமையல் குறிப்பை கேட்ட போது மாங்காயை நெருப்பில் சுட்டு பிறகு வெந்த பழக்கூழை கொண்டு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.
இல்லையெனில் மாங்காயை கழுவி தோலுடன் குக்கரில் வேக வைத்து பின்னர் பழக்கூழை உபயோகித்து தயாரிக்கலாம் என கூறினார்கள்.
அவர்கள் கூறியதை கேட்ட பின்னர் என் வழியில் நான் இதை தயாரித்தேன்.
மாங்காய் பானம் [ #ஆம்பண்ணா ]
Aam Panna - Raw Mango Drink

ஓரிரு தினங்களுக்கு முன்னர் மாங்காய் பச்சடி செய்தேன். அப்போதே இந்த பானத்தை தயாரிக்க நினைத்தேன். ஆனால் இன்றுதான் செய்ய முடிந்தது. அதற்குள் பழம் பாதி பழுத்து விட்டது. ஆனாலும் புளிப்பாக இருப்பதால் இந்த பானம் தயாரிக்க இந்த செங்காயை உபயோகித்துள்ளேன்.
இனி செய்முறை

இனிப்பு பழக்கூழ் செய்ய தேவையான பொருட்கள் :


2 கப்                                 மாங்காய் தோல் நீக்கி  சீவியது
1/4 கப்                              சர்க்கரை

ஒரு கப் பானம் தயாரிக்க :
1/4 கப்                              இனிப்பு பழக்கூழ்
1/4 Tsp                               சீரகபொடி
1/4 Tsp                               இந்துப்பு [ rock salt ]
2 அ 3                                புதினா இலைகள்

செய்முறை :
மாங்காயை குக்கரில் எடுத்துக்கொள்ளவும்.
சர்க்கரையை சேர்க்கவும்.


1/4 கப் தண்ணீர் சேர்க்கவும்.
கரண்டியால் நன்கு கலக்கி விடவும்.


அடுப்பில் 2 விசில் வரும்  வேக விடவும்.
அடுப்பை  அணைத்து விட்டு குக்கரை உடனே ஆவி நீக்கி திறக்கவும்.
கரண்டி கொண்டோ அல்லது மிக்ஸியிலோ ஆறியவுடன் அரைத்து மசிக்கவும்.


1 கப் பானம் தயாரிக்க
1/4 கப் மசித்த இனிப்பு பழகூழை ஒரு கண்ணாடி தம்ளரில் எடுத்துக் கொள்ளவும்.
சீரகபொடி, இந்துப்பு மற்று 3/4 கப் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
மேலே ஒரு சிட்டிகை சீரகப் பொடி தூவியோ அல்லது புதினா இலைகளை பியித்து போட்டோ பருகவும்.
வெய்யிலுக்கு இதமான புளிப்பும் இனிப்பும் நிறைந்த பானம் தயார்.
அருந்தி மகிழவும்.
மாங்காய் பானம் [ ஆம்பண்ணா ]


மீதமுள்ள இனிப்பு பழக்கூழை கண்ணாடி பாட்டில் அல்லது பீங்கான் கிண்ணத்தில் எடுத்து வைத்து ஆறியவுடன் குளிர் சாதன பெட்டியில் இரு தினங்களுக்கு பத்திர படுத்தலாம்.






மற்ற சில பானங்கள்

புதினா கஷாயம்
புதினா கஷாயம்
எலுமிச்சை இஞ்சி பானம்
எலுமிச்சை இஞ்சி ..
பானகம்
பானகம்
நீர் மோர்
நீர் மோர்
தேநீர்
தேநீர்



Sunday, May 18, 2014

Lemon Ginger Juice

#எலுமிச்சைஇஞ்சிபானம்  : #எலுமிச்சைபழம் உலகத்தின் எல்லாவகையான உணவுகளிலும் அதன் புளிப்பு சுவைக்காக பயன் படுத்தப்படுகிறது. வைட்டமின் C அதிக அளவில் உள்ள ஒரு அற்புதமான பழமாகும். உடலில் இரும்பு சத்து சேர வேண்டுமானால் வைட்டமின் C சத்துள்ள ஆகாரங்களை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அந்த வகையில் இந்த வைட்டமின் C நிரம்ப உள்ள எலுமிச்சை மிக சுலபமாக எல்லோராலும் எடுத்துக்கொள்ளக் கூடிய பழம் ஆகும்.
இஞ்சி அதனுடைய நறுமணத்திற்காகவும் உணவு செரிமானத்திற்காகவும் உணவு தயாரிப்பில் பயன் படுத்தப் படுகிறது.
இந்த இரண்டையும் சேர்த்து கோடைக்கு ஏற்ற ஒரு குளிர் பானத்தை தயாரிக்கலாம்.

எலுமிச்சை இஞ்சி பானம்

1 கப் பானம் தயாரிக்க
தேவையான பொருட்கள் :
1/2                                  எலுமிச்சை, கொட்டைகளை நீக்கவும்
1/2 அங்குல                  இஞ்சி துண்டு
2 Tsp                               வெல்லம்
1 சிட்டிகை                   உப்பு


செய்முறை :
இஞ்சியின் தோலை நீக்கி 1/4 கப் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் ஒரு கண்ணாடி தம்ளரை எடுத்து எலுமிச்சையை பிழிந்து சாறை சேர்க்கவும்.
இஞ்சி ஊறிய தண்ணீர் 3 தேக்கரண்டி சேர்க்கவும்.
வெல்லம், உப்பு மற்றும் 3/4 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
இஞ்சியின் நறுமணத்துடன் கூடிய சுவையான குளிர் பானம் தயார்.
சுவைத்து மகிழவும்.

எலுமிச்சை இஞ்சி பானம்

குறிப்பு :
வெல்லம் மற்றும் தண்ணீரின் அளவை அவரவர் விருப்பப்படி கூட்டி குறைத்துக் கொள்ளவும்.
விரும்பினால் புதினா கஷாயம் உபயோகித்து செய்த ஐஸ் கட்டிகளை போட்டு சுவைக்கலாம்




மற்ற சில பானங்கள்
புதினா கஷாயம்
புதினா கஷாயம்
பானகம்
பானகம்
மாங்காய் பானம் [ ஆம் பண்ணா ]
ஆம் பண்ணா
நீர் மோர்
நீர் மோர்
தேநீர்
தேநீர்