Search This Blog

Showing posts with label pickle. Show all posts
Showing posts with label pickle. Show all posts

Friday, August 17, 2018

Inji Thokku

#இஞ்சிதொக்கு : #இஞ்சி நமது உணவின் சுவையை கூட்டுவதற்காகவும் மருத்துவ குணங்களுக்காகவும் பயன் படுத்தப்படுகிறது. பொங்கல் , &  உப்புமா போன்ற சிற்றுண்டிகளில் சிறிதளவேனும் இஞ்சி சேர்க்கும் போது அவற்றின் சுவை மிகுதியாவது திண்ணம். தேங்காய் சட்னி,  &  வெங்காய சட்னி போன்ற சட்னி வகைகளை அரைக்கும் போது சிறிதளவு இஞ்சியை பச்சையாகவோ அல்லது வறுத்தோ சேர்க்கும் போது சட்னி கூடுதல் சுவையுடன் இருப்பதைக் காணலாம்.
இஞ்சியை உபயோகித்து ஒரு சுவையான #தொக்கு செய்வதெப்படி என இங்கு காணலாம்.


inji thokku [ Ginger pickle ]

தேவையானவை :
150 gmsஇஞ்சி
8 - 10சிகப்பு மிளகாய் [ கூட்டி குறைக்கவும் ]
1/2 Tspவெந்தயம்
நெல்லி அளவுபுளி
1/2 Tspமஞ்சத்தூள்
15 - 20கருவேப்பிலை [ விருப்பப்பட்டால் ]
1 Tspவெல்லம் [ கூட்டி குறைக்கவும் ]
1 Tspகடுகு
2 Tspஉப்பு [ கூட்டி குறைக்கவும் ]
1/3 cupநல்லெண்ணெய்

செய்முறை :
நெல்லிக்காய் அளவு புளியை சூடான தண்ணீரில் ஊறவைக்கவும்.
இஞ்சியை மண் போக கழுவிய பின்னர் தோல் நீக்கி சிறு சிறு நீள வடிவ துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
வாணலியை மிதமான தீயில் வைத்து அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
அதில் வெந்தயத்தை சிவக்க வறுத்து எடுத்து இடிக்கும் உரலில் இட்டு வைக்கவும்.
அதே வாணலியில் மேலும் சிறிது எண்ணெய் விட்டு சிகப்பு மிளகாயை போட்டு நன்கு வறுக்கவும். வறுபட்ட மிளகாயை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
அடுத்து அதே வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு நறுக்கிய இஞ்சி துண்டுகளை போட்டு நன்கு சிவக்கும் வரை வதக்கவும்.
வறுத்த இஞ்சி துண்டுகளை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
நன்கு ஆறிய பின்னர் மிக்சியில் இட்டு அதனுடன் வறுத்த மிளகாய், உப்பு, வெல்லம் மற்றும் ஊறவைத்த புளி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
வாணலியை மீண்டும் அடுப்பில் ஏற்றி மீதமுள்ள எண்ணெய்யை ஊற்றி சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் கடுகு வெடிக்க விடவும்.
அடுத்து கருவேப்பிலையை கிள்ளி சேர்த்து அரைத்த விழுதை சேர்க்கவும்.
உப்பு சரி பார்க்கவும். தேவையெனில் சிறிது சேர்த்து கிளறவும்.
நன்கு கிளறவும். சிறிது நேரத்தில் நன்கு உருண்டு வரும்.
ஊற்றிய எண்ணெயும் வெளியில் கக்க ஆரம்பிக்கும்.
அந்த நேரத்தில் வறுத்த வெந்தயத்தை உரலில் இடித்து சேர்க்கவும்.
நன்கு ஒருமுறை கிளறி விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
சூடு ஆறியதும் ஒரு பீங்கான் கிண்ணத்தில் அல்லது ஒரு கண்ணாடி குடுவையில் எடுத்து வைக்கவும்.
உபயோகப்படுத்தும் போது சுத்தமான ஈரமில்லாத தேக்கரண்டி கொண்டு வேறொரு சிறிய கிண்ணத்தில் எடுத்து வைத்து உபயோகிக்க வேண்டும்.
இவ்வாறு சாதாரணமாக வெளியில் வைத்து பயன் படுத்தும் போது பத்து நாட்கள் முதல் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.
சாதத்தில் கலந்து சாப்பிடலாம்.
இட்லி,  &  தோசை,  &  உப்புமா,   &  பொங்கல் போன்ற டிபன் வகைகளுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
தயிர் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டாலும் மிக அருமையாக இருக்கும்.


inji thokku [ Ginger pickle ]


குறிப்பு : மிளகாய், உப்பு மற்றும் வெல்லத்தின் அளவை அவரவர் சுவைக்கேற்ப கூட்டிக் குறைத்துக்கொள்ளவும்.






சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க

நெல்லிக்காய் மிட்டாய்
நெல்லிக்காய் மிட்டாய்
தேன் நெல்லிக்காய்
நெல்லிக்காய் தேனில் ஊறியது
ஆவக்காய் ஊறுகாய்
ஆவக்காய் 
ஊறுகாய்
உப்பு எலுமிச்சங்காய்
உப்பு 
எலுமிச்சங்காய்
நெல்லிக்காய் ஊறுகாய்
நெல்லிக்காய் ஊறுகாய்

Tuesday, May 19, 2015

Maangai Thokku

#மாங்காய்தொக்கு : மாங்காய் கிடைக்கும் நாட்களில் அதனை உபயோகித்து என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்து சுவைத்து விட வேண்டும். இப்போது செய்து சுவைக்கவில்லை என்றால் இதற்காக அடுத்த கோடை வரை காத்திருக்க வேண்டியதுதான்.
தயிர் சாதம் என்றவுடன் நினைவுக்கு வருவது ஊறுகாய். அதிலும் முக்கியமாக மாங்காய் தொக்குடன்  பரிமாறினால் வேண்டாம் என மறுக்க முடியுமா??!! மாங்காய் தொக்கு இருந்தால் எப்பொழுதையும் விட கூடுதலாக இரண்டு பிடி சாப்பிடத் தூண்டும்.
இனி மாங்காய் தொக்கு செய்முறையை காண்போம்.

மாங்காய் தொக்கு


தேவையான பொருட்கள் :
1/2 கப்மாங்காய் செதுக்கியது
1 Tspசிகப்பு மிளகாய் தூள் [ adjust ]
1/4 Tspமஞ்சத்தூள்
1/2 Tspபெருங்காயத்தூள்
1 Tspஉப்பு [ adjust ]
1 Tspகடுகு
1/4 Tspவெந்தயம்
5 Tspநல்லெண்ணெய் [ till/sesame oil ]
செய்முறை :
குக்கரில் 1 கப் தண்ணீர் விடவும்.
ஒரு கிண்ணத்தில் செதுக்கிய மாங்காய் துண்டுகளை போட்டு குக்கரினுள் வைத்து குக்கரை மூடவும்.
வெயிட் பொருத்த வேண்டாம்.
முதலில் அதிக தீயில் சூடாக்கவும்.
ஆவி வர ஆரம்பித்ததும் தீயை மிதமாக்கி 8 முதல் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து தனியே வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
வெந்தயத்தை பொன்னிறமாக வறுத்தெடுத்து பொடித்து வைக்கவும்.
அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகை வெடிக்க விடவும்.
பின்னர் பெருங்காயதூளை சேர்த்து ஆவியில் வேக வைத்த மாங்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.
பச்சை வாசனை போனதும் மிளகாய் தூள், மஞ்சத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விடவும்.
சிறிய தீயில் வைத்து அவ்வப்போது கிளறி கொண்டே இருக்கவும்.
ஒரு கட்டத்தில் ஊற்றிய எண்ணெய் வெளியே வர ஆரம்பிக்கும்.
மேலும் ஊறுகாய் பளபளப்பாக மாறும்.
இந்த தருணத்தில் வெந்தய பொடியை சேர்த்து கிளறி மேலும் ஓரிரு நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும்.
பிறகு அடுப்பை அணைத்து விட்டு நன்கு காய்ந்த சுத்தமான ஒரு பீங்கான் கிண்ணத்திலோ அல்லது கண்ணாடி கிண்ணத்திலோ எடுத்து வைக்கவும்.
நன்கு ஆறிய பிறகு ஒரு பாட்டிலில் எடுத்து வைத்து பத்திர படுத்தவும்.


மாங்காய் தொக்கு
மாங்காய் தொக்கு மாங்காய் தொக்கு






சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க

நெல்லிக்காய் தயிரில் ஊறியது
நெல்லிக்காய் தயிரில் ஊறியது
நெல்லிக்காய் மிட்டாய்
நெல்லிக்காய்
மிட்டாய்
நெல்லிக்காய் ஊறுகாய்
நெல்லிக்காய் ஊறுகாய்
தேன் நெல்லிக்காய்
நெல்லிக்காய் தேனில் ஊறியது
ஆவக்காய் ஊறுகாய்
ஆவக்காய்
ஊறுகாய்


Friday, May 30, 2014

Avakkai Urugai

#ஆவக்காய்ஊறுகாய் : கோடை வெய்யிலுக்கு பயந்தாலும் நாவில் நீர் சுரக்க வைக்கும் மாங்காயை நினைக்கும் போது வெய்யில் காலமும் சுகமானதாகவே தோன்றும்.  மாங்காயை வெட்டி மிளகாய் தூள் அல்லது மிளகு தூள் உப்புடன் சாப்பிட்டால்...... ம் ... அதன் ருசியே தனிதான் !!

சிறு சிறு வடுமாங்காய் விற்க ஆரம்பித்தால் கோடையின் தொடக்கம் என அர்த்தம். அம்மாக்களும் பாட்டிகளும் ஊறுகாய் போட ஆயத்தம் ஆகி விடுவார்கள். முதலில் வடுமாங்காய், அடுத்து மாங்காய் தொக்கு, பிறகு ஆவக்காய் ஊறுகாய் என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
ஆவக்காய் ஊறுகாய் ஆந்திர மாநிலத்தின் பாரம்பரிய ஊறுகாய் ஆகும்.மாங்காய் துண்டுகளை கடுகு, வெந்தயம், மிளகாய் தூள் மற்றும் உப்பு கலந்த எண்ணெயில் ஊற விடுவதே ஆவக்காய் ஊறுகாய் ஆகும்.

எங்களுக்கு எண்ணையில் ஊறிய மாங்காயை சாப்பிட பிடிக்கும். ஆனால் எண்ணெய் கலவை வீணாகி போகும்.
அதனால் எனது தாயார் இதே  பொருட்களை கொண்டு ஆவக்காய் செய்வார்கள். ஆனால் செய்முறையில் சிறு மாற்றம் உண்டு.
மிகவும் புளிப்பில்லாத கொட்டையுடன் கூடிய மாங்காய் கொண்டு செய்யப்படுகிறது. நான் பெரும்பாலும் கிளி மூக்கு மாங்காய் என அழைக்கப்படும் பெங்களூராவை உபயோகப் படுத்தி செய்வது வழக்கம்.
எப்படி என்று இங்கு காணலாம்.

ஆவக்காய் ஊறுகாய் 

தேவையான பொருட்கள் :


1 kg [சுமார் 5 ]                           மாங்காய்
1/2 கப்                                         சிகப்பு மிளகாய் தூள்
1/2 கப்                                         நல்லெண்ணெய்
1/2 கப்                                         உப்பு
1/4 கப்                                         கடுகு
1/8 கப்                                         வெந்தயம்
2 Tsp                                            மஞ்சத்தூள்

செய்முறை :
நாள் 1 :
காயை நன்கு கழுவி வைக்கவும்.
மிகவும் கஷ்டமான வேலை எது என்றால் உள்ளே உள்ள கொட்டை ஓட்டோடு வெட்டுவதுதான்.
முதலில் நீளவாக்கில் இரண்டாக வெட்டவும்.
நடுவில் உள்ள பருப்பை நீக்கி விடவும்.
பிறகு ஒரு அங்குல துண்டுகளாக வெட்டி  அகலமான தட்டில் பரப்பவும்.
வெய்யிலில் 4 முதல் 5 மணி நேரம் காய வைக்கவும்.
சிறிது சுருங்கினாற்போல காய்ந்தால் போதும்.

வீட்டின் உள்ளே அதே தட்டிலேயே வைத்து ஒரு மெல்லிதான துணி கொண்டு மூடி வைக்கவும்.

மாலையில் முதலில் எண்ணெயை அடுப்பில் இலேசாக புகை வரும் வரை சூடு பண்ணி பிறகு அடுப்பை அணைத்து விடவும்.
நன்றாக ஆற விடவும்.

கடுகை சிறிது நற நறவென பொடித்துக் கொள்ளவும்.
அதேபோல வெந்தயத்தையும் பொடித்து தனியே வைக்கவும்.
உணவு பத்திரப்படுத்த தகுதி உள்ள மூடியுடன் கூடிய சுத்தமான பிளாஸ்டிக் டப்பாவை எடுத்துக் கொள்ளவும். ஈரப்பசை சிறிதும் இருக்கக்கூடாது.

பொடித்த பொருட்கள், உப்பு, மிளகாய் தூள் ஆகிய அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் எடுத்து ஒன்றாக கலக்கி வைக்கவும்.
பிளாஸ்டிக் டப்பாவில் கலந்த பொடிகள் மற்றும் எண்ணெய் சேர்த்து கலக்கவும்.
கலக்க உபயோகிக்கும் கரண்டி சுத்தமானதாகவும் ஈரம் இல்லாததாகவும் இருப்பது மிக மிக அவசியம்.
சிறிது சிறிதாக மாங்காய் துண்டுகளை சேர்த்து ஒரு நீண்ட கரண்டியால் கலவையுடன் கலக்கி விடவும்.

எல்லாவற்றையும் நன்றாக கலக்கிய பின்னர் மூடி வைத்து விடவும்.

நாள் 2 :


மறுநாள் பார்த்தால் சிறிது தளர இருப்பதை காணலாம். மாங்காயில் உள்ள தண்ணீர் உப்புடன் சேர்ந்து சிறிது இளக்கம் கொடுத்திருக்கும். நன்றாக குலுக்கி வைக்கவும். சரியாக குலுக்கினாலும் மேலே உள்ள மாங்காய் கீழே போகவில்லை என்றால் டப்பாவை திறந்து ஈரமில்லாத கரண்டியினால் கலக்கி விடலாம். மறுபடியும் மூடி வைத்து விடவும்.

நாள் 3 :
இன்றும் குலுக்கி வைக்கவும்.
நேற்றை விட இன்று இன்னும் சிறிது அதிகமாக நீர்த்து போய் கீழே எண்ணெய் கலவையாக இருப்பதை காணலாம்.


நாள் 4 :
ஒரு சுத்தமான ஈரமே இல்லாத ஒரு தட்டை எடுத்துக் கொள்ளவும்.
மாங்காயை ஒரு சுத்தமான ஈரமில்லாத கரண்டியால் எடுத்து தட்டின் மேல் பரப்பவும்.

கீழே தங்கியுள்ள எண்ணெயை முடிந்தவரை தட்டில் கொட்டாமல் பார்த்துக் கொள்ளவும். அந்த எண்ணெயை ஒரு சிறிய கிண்ணத்தில் வடித்து வேறு சமையலில் பயன் படுத்திக் கொள்ளலாம்.

நல்ல வெய்யிலில் நாள் முழுவதும் காய விடவும்.
இடையே கரண்டியால் பிரட்டி விடவும்.

நாள் 5 :


இன்றும் வெய்யிலில் எடுத்து வைத்து காய வைக்கவும்.
இரண்டு அல்லது மூன்று நாட்கள் காய வைக்கவும்.

பொதுவாக பகல் வெப்ப நிலை 40 டிகிரி செல்சியஸ் க்கு மேலே இருப்பின் இரண்டு நாட்கள் காய வைத்தால் போதும்.
அதற்கு குறைவாக இருப்பின் 3 அல்லது நான்கு நாட்கள் காய வைக்கவும்.
மிகவும் சுக்காக காய வைக்கக்கூடாது.
சிறிது ஈரப் பசை இருக்க வேண்டும்.
சுக்காக காய்ந்து விட்டால் கடிப்பதோ அல்லது பிய்த்து சாப்பிடுவதோ கடினமாக இருக்கும்.

காய்ந்த ஆவக்காயை ஒரு சுத்தமான ஈரமில்லாத கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைக்கவும்.


உடனே சாப்பிட நன்றாக இருக்காது.
20 நாட்கள் முதல் 1 மாதம் வரை ஊறிய பிறகே சாப்பிட பயன் படுத்தலாம்.

சுத்தமாக தண்ணீர் மற்றும் கை படாமல் செய்த ஆவக்காய் ஊறுகாய் இரண்டு வருடங்களுக்கு கூட ... அதற்கு மேலும் கூட உபயோகிக்கலாம்.
அருமையாக இருக்கும். வெந்தயமும் கடுகும் சேர்த்திருப்பதால் உடலுக்கும் நல்லது.
தயிர் சாதத்துடன் சாப்பிட ஏதுவான அருமையான ஊறுகாய் ஆகும்.
பருப்பு சாதம் மற்றும் பருப்பு பொடி சாதத்துடனும் நன்றாக இருக்கும்.
சப்பாத்தி மற்றும் பூரியுடனும் தொட்டுக்கொண்டு சாப்பிட ருசியாக இருக்கும்.





சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க

நெல்லிக்காய் தயிரில் ஊறியது
நெல்லிக்காய் தயிரில் ஊறியது
நெல்லிக்காய் மிட்டாய்
நெல்லிக்காய் மிட்டாய்
நெல்லிக்காய் ஊறுகாய்
நெல்லிக்காய் ஊறுகாய்
தேன் நெல்லிக்காய்
நெல்லிக்காய் தேனில் ஊறியது
உப்பு எலுமிச்சங்காய்
உப்பு எலுமிச்சங்காய்