Search This Blog

Saturday, August 9, 2014

Murungai Keerai Paal Saaru

#முருங்கைகீரை பால் சாறு : முருங்கை கீரையில் வைட்டமின் A, B மற்றும் C நிறைந்துள்ளது. இதனை தவிர கால்சியம், மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்களும் நிரம்பியுள்ளது. எளிதாக கிடைப்பதால் இதன் அருமை தெரியாமல் பல பேர் இக்கீரையை உண்ண தயக்கம் காட்டுகிறார்கள்.
இக்கீரையின் சத்துக்கள் வேக வைப்பதனால் வெகுவாக அழிவதில்லை.
இதனை காய வைத்து பொடி செய்து உணவில் சேர்த்துக்கொண்டாலும் இதில் அடங்கியுள்ள எல்லாவித சத்துக்களும் நம் உடலுக்கு கிடைக்கிறது.
உலக சுகாதார நிறுவனம் இக்கீரையை சிறுவர்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் போஷாக்கை அதிகரிப்பதற்காக உணவில் சேர்த்துக்கொள்ள ஊக்கப்படுத்துகிறது.


முருங்கை கீரையை வாரத்தில் இரண்டு நாட்கள் உணவில் சேர்த்துக்கொள்வது மிக மிக அவசியம்.
சாம்பார், கூட்டு, பொரியல் மற்றும் பால் சாறு போன்ற பதார்த்தங்களை செய்தால் சுவையாக இருக்கும்.

வாய் புண் என்றதுமே முதலில் மணத்தக்காளி பால் சாறு செய்வது வழக்கம். மணத்தக்காளி கீரை கிடைக்காத நிலையில் முருங்கை கீரை கொண்டு பால் சாறு செய்து தருவார்கள்.
பால் சாறு என்பதை கழனி சாறு என்றே குறிப்பிடுவார்கள். அரிசி களைந்து வடிக்கப்படும் தண்ணீர் கழனி என்று கூறப்படுகிறது. இந்த கழனி வைட்டமின் B சத்து நிறைந்தது. பொதுவாக வாய் புண் வந்து அவதி படும் போது வைட்டமின் B மாத்திரைகளே பரிந்துரை செய்யபடுகிறது. இந்த கழனியை கொண்டு கீரையை வேகவைத்து தேங்காய் பால் சேர்த்து செய்யப்படுவதுதான் கழனி சாறு ஆகும். மாத்திரையை சாப்பிடுவதைக் காட்டிலும் இந்த பால் சாரை தொடர்ந்து இரண்டு நாட்கள் சாப்பிட்டால் வாய்புண் இருந்த சுவடே தெரியாமல் மறைந்து விடும்.
ஆனால் தற்போது பூச்சி அண்டாமல் இருப்பதற்காக அரிசி மூட்டைகளின் மேல் பூச்சி மருந்து அடிக்கப்படுவதால் கழனியை பயன்படுத்த அச்சமாக உள்ளது.
அதனால் கீரையை தண்ணீரில் வேக வைத்து தேங்காய் பால் ஊற்றி செய்வதால் இதனை பால் சாறு என அழைக்க ஆரம்பித்து விட்டோம்.
இங்கு பால் சாறு எவ்வாறு செய்யலாம் என காண்போம்.



தேவையான பொருட்கள் :
1/2 கப்                                         முருங்கை கீரை [ இளசாக எடுத்துக்கொள்ளவும் ]
1/3 கப்                                          தேங்காய் துருவல்
1/2 Tsp                                           சீரகம்
1/4 Tsp                                           உப்பு

தாளிக்க :
1/2 Tsp                                         சீரகம்
2 Tsp                                            சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது
1/2 Tsp                                        நல்லெண்ணெய்

செய்முறை :
கீரையை கழுவி நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீரை கொதிக்க விட்டு கீரை, சீரகம் மற்றும் உப்பை சேர்த்து வேக வைக்கவும்.
கீரை வெந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சூடாக்கவும்.
சீரகத்தை வெடிக்கவிட்ட பின்னர் வெங்காயத்தை சேர்த்து வாசனை வரும் வரை வதக்கி வேகவைத்துள்ள கீரையின் மேல் கொட்டவும்.


தண்ணீரை இளஞ்சூடாக சுட வைத்துக்கொள்ளவும்.
மிக்ஸியில் தேங்காய் துருவலை எடுத்து முதலில் தண்ணீர் விடாமல் 1 மணித்துளி சுற்றி எடுக்கவும்.


சுடுநீரை ஊற்றி மறுபடியும் 1 மணித்துளியே அரைக்கவும்.


பாலை வடிகட்டி கீரையில் சேர்க்கவும்.


மறுபடியும் தேங்காய் சக்கையை மிக்சியில் போட்டு சுடுதண்ணீர் விட்டு 1 மணித்துளி சுற்றி பால் எடுத்து கீரையில் சேர்க்கவும்.


இதேபோல மூன்றாவது தடவையும் பால் எடுத்து கீரையில் சேர்த்து கலக்கவும்.

உப்பு சரி பார்க்கவும். பால் சாறு தயார்.

தட்டில் சூடான சாதத்தை எடுத்துக்கொள்ளவும். தாராளமாக கீரையுடன் பால் சாறை ஊற்றி பிசைந்து சாம்பார் அல்லது விருப்பமான பொரியலுடன் சுவைக்கவும்.



1 comment:

  1. உங்களுடையத் தளம் இன்று வலைச்சரத்தில் பாராட்டப்பட்டுள்ளது.
    இணைப்பு http://blogintamil.blogspot.in/2014/08/6.html
    வாழ்த்துக்கள்.......

    ReplyDelete