Search This Blog

Wednesday, August 13, 2014

Ragi Puttu

#கேழ்வரகுபுட்டு : முந்தைய பதிவில் புட்டு செய்முறையை பார்த்தோம். இந்த கேழ்வரகு புட்டு அரிசிக்கு பதில் #கேழ்வரகு மாவு உபயோகப் படுத்தி செய்யப்படும் ஒரு இனிப்பாகும்.

கேழ்வரகு என்பதை பேச்சு வழக்கில் கேவுரு என்றும் கேப்பை என்றும் சொல்லப் படுகிறது. ஆங்கிலத்தில் #Ragi என்றும் #FingerMillet என்றும் அழைக்கப்படுகிறது. கேழ்வரகு #சிறுதானியம் வகைகளில் ஒன்றாகும். கேழ்வரகு மாவிலிருந்து கூழ், அடை , களி மற்றும் தோசை போன்ற உணவு வகைகளை செய்யலாம். தற்போது கடைகளில் கேழ்வரகு அவல் , உடனே செய்யக் கூடிய இடியாப்பம் போன்றவையும் கிடைகின்றன.
சிறுதானிய வகைகளை பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை அழுத்தவும்.

Millets - சிறுதானிய வகைகள் 

குறிப்பாக கேழ்வரகில் சுண்ணாம்பு ( கால்சியம் - Calcium ) சத்து மற்ற தானியங்களை விட அதிக அளவில் உள்ளது.
இதில் நார்சத்தும் அதிக அளவில் உள்ளது.
இந்த சத்துக்களை பெற அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

இனி கேழ்வரகு மாவை உபயோகித்து புட்டு எவ்வாறு செய்யலாம் என காண்போம்.

கேழ்வரகு புட்டு


தேவையான பொருட்கள் :
2 கப்                                             கேழ்வரகு மாவு [ ragi flour ]
1 கப்                                             வெல்லம்
1 1/2 கப்                                       தேங்காய் துருவல்
2 Tsp                                             நெய்
3 Tsp                                             நல்லெண்ணெய்
1/2 Tsp                                          ஏலக்காய் பொடி
1/2 Tsp                                          உப்பு

செய்முறை :
ஒரு வாணலியை  மிதமான தீயில் சூடாக்கவும்.
கேழ்வரகு மாவை சற்றே சூடு வரும் வரை வறுக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் இந்த வறுத்த மாவை எடுத்துக்கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் 1/8 கப் தண்ணீரில் உப்பை கரைத்துக்கொள்ளவும்.
இந்த உப்பு தண்ணீரை மாவின் மேல் தெளித்து பிசறி விடவும்.
பிரட் துகள்கள் போல வரும் வரை தண்ணீர் தெளித்து பிசறி விடவும்.


இப்படி பிசறி வைத்துள்ள மாவை உருண்டையாக பிடிக்க முயற்சித்தால் பிடிக்க முடியாமல் உடைந்து போக வேண்டும்.

இதை ஒரு சுத்தமான துணியில் மூட்டை போல கட்டவும்.
இட்லி பானையில் தண்ணீர் விட்டு சூடாக்கவும்.


மாவு மூட்டையை இட்லி தட்டின் மேல் இட்லி பானையில் வைத்து ஆவியில் 10 முதல் 12 நிமிடங்கள் வேக விடவும்.


இதற்குள் மற்றொரு அடுப்பில் வெல்லத்தை நசுக்கி 1/4 கப் தண்ணீர் விட்டு சூடாக்கவும்.
கரண்டியால் கலக்கி கரைய வைக்கவும்.
கரைந்த பின்னர் அடுப்பிலிருந்து நீக்கி வடி கட்டவும்.
வடிகட்டிய வெல்ல தண்ணீரை ஒரு அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும்.
அதனுடன் தேங்காயை சேர்க்கவும்.
சாரணியால் கிளறிக்கொண்டே இருக்கவும்.
தண்ணீர் சுண்டி தேங்காயும் வெல்லமும் சேர்ந்தாற்போல வரும்.
கையில் தொட்டு பார்த்தல் பிசுபிசுவென இருக்கும்.

இப்போது அடுப்பை அணைத்து விடவும்.
கிளறிய தேங்காய் வெல்ல கலவையை ஒரு சுத்தமான கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

வெந்த மாவை தேங்காய் வெல்லம் சேர்த்து கிளறிய பாத்திரத்தில் கொட்டவும்.
2 Tbsp தேங்காய் வெல்ல கலவையை சேர்க்கவும்.
நெய் மற்றும் நல்லெண்ணெயையும்  சேர்க்கவும்.

கரண்டியால் நன்கு கிளறி விடவும்.


அவரவர் சுவைக்கு ஏற்ப தேவையானால் தேங்காய் வெல்ல கலவையை போதுமான அளவு சேர்த்து கிளறவும்.
கடைசியாக ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறவும்.

சூடு ஆறிய பின்னர் மூடியுடன் கூடிய டப்பாவில் எடுத்து வைக்கவும்.
நன்கு சூடு ஆறிய பின்னரே டப்பாவை மூட வேண்டும்.

கேழ்வரகு புட்டு

சுவையான புட்டு தயார்! சுவைத்து மகிழவும்!! 

 மற்ற சமையல் குறிப்புகள் :
கேழ்வரகு தோசை
கேழ்வரகு தோசை
புட்டு
புட்டு
கேழ்வரகு [ ராகி ] குழிபணியாரம்
கேழ்வரகு குழி பணியாரம்
தினை சக்கரை பொங்கல்
தினை சக்கரை பொங்கல்
அவல் கேசரி
அவல் கேசரி - அவல் இனிப்பு

No comments:

Post a Comment