Search This Blog

Tuesday, August 19, 2014

Idly Stir Fry

#இட்லிவதக்கல் : #இட்லிஉப்புமா வைதான் குறிப்பிடுகிறேன். உப்புமா என்றாலே சிலருக்கு அலர்ஜி என்பார்கள். அதனால்தான் பெயரை வித்தியாசமாக வைத்திருக்கிறேன்.
காலை #இட்லி மீந்து போயிருந்தால் இரவில் அதனை உப்புமா செய்து காலி செய்வதுதான் தமிழரின் பண்பாடு?!! சிலர் இட்லி உப்புமாவா என்று அலறி அடித்துக் கொண்டு ஓடுவார்கள்!! ஆனால் சூடாக செய்தவுடன் சாப்பிட்டால் மிக மிக அருமையான சிற்றுண்டியாகும்.
ஆறிய இட்லியை  நன்கு உதிர்த்தால் ப்ரெட் தூள் போல பொலபொலவென உதிரும். பின்னர் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், கறுவேப்பிலை சேர்த்து வதக்கி உதிர்த்த இட்லியை சேர்த்து பிரட்டி எடுத்தால் இட்லி உப்புமா தயார்.
இங்கு நான் வசிக்கும் ராய்ப்பூரில் இட்லி புழுங்கல் அரிசி கிடைப்பதில்லை. அதனால் கடைகளில் கிடைக்கும் புழுங்கல் அரிசியுடன் பச்சரிசி மற்றும் சாப்பாட்டிற்கு உபயோகிக்கும் அரிசி ஆகியவற்றை கலந்து நான் இட்லி செய்து கொண்டிருக்கிறேன். இட்லியாக சாப்பிட மிருதுவாக இருக்கும்.
ஆனால் இந்த இட்லியை உதிர்க்க முடிவதில்லை. உதிர்க்க முயற்சித்தால் கைகளில் பிசின் போல ஒட்டிக்கொள்ளும். மாவு போல ஆகிவிடும்  அதனால் வெகு நாட்களாகி விட்டது நான் இட்லி உப்புமா செய்து!!....
இன்று எப்படியாவது செய்து சாப்பிட வேண்டும் என்று உறுதியாக இருந்தேன்.
பச்சை காய்கறிகளும் காளானும் [ mushroom ] இருந்ததால் இரவு உணவிற்கு செய்ய முடிவு செய்து செயலில் இறங்கி வெற்றியும் பெற்று விட்டேன்!!
சும்மா என்னையே நானே பாராட்டிக்கொள்ள கூடாது. ஆனாலும் சொல்கிறேன், மிக மிக அருமையாக வந்திருந்தது.
இதற்கு மேலும் நீட்டி முழக்காமல் செய்முறையை காண்போம்.


தேவையான பொருட்கள் :
4                                                   இட்லி
1/2 கப்                                         முட்டைகோஸ் பொடியாக நறுக்கியது
1/4 கப்                                         குடைமிளகாய் பொடியாக நறுக்கியது
1/4 கப்                                         காரட் துருவியது
10                                                 கறுவேப்பிலை, பொடியாக நறுக்கவும்.
2                                                   பச்சை மிளகாய், நீளவாக்கில் கீறி வைக்கவும்.
1/4 கப்                                         கொத்தமல்லி பொடியாக நறுக்கியது
6                                                   கொடி பசலை, பொடியாக நறுக்கவும்.
3                                                   பட்டன் காளான், பொடியாக நறுக்கவும்
1 Tsp                                            உப்பு [ அட்ஜஸ்ட் ]

தாளிக்க :
1/2 Tsp                                         கடுகு
1/2 Tsp                                         கருஞ்சீரகம்
1 Tsp                                            உளுத்தம் பருப்பு
1/4 Tsp                                         பெருங்காய தூள்
1/4 Tsp                                          மஞ்சத்தூள்
2 Tsp                                            நல்லெண்ணெய்

செய்முறை :
இட்லியை ப்ரெட் வெட்டும் கத்தி கொண்டு ஒரே அளவுள்ள சதுர துண்டுகளாக நறுக்கி வைக்கவும். கத்தியை தண்ணீரில் அவ்வப்போது நனைத்தெடுத்து வெட்டினால் ஒட்டாமல் நறுக்க முடியும்.
இட்லி துண்டுகளை தனியே எடுத்து வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி மிதமான தீயில்  சூடாக்கவும்.
கடுகு, சீரகம் தாளித்து பின்னர் உளுத்தம் பருப்பை சேர்த்து சிவக்கும் வரை வறுக்கவும்.
எண்ணெயில் மஞ்சதூளை சேர்த்த பின்னர் கொத்தமல்லி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, முட்டைகோஸ் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு ஓரிரு நிமிடம் வதக்கவும். முட்டைகோசுக்கு தேவையான அளவு உப்பு மட்டும் சேர்த்து கலந்து விடவும்.


இலேசாக தண்ணீர் தெளித்து தீயை குறைத்து முக்கால் பாகம் வேகும் வரை மூடி வைக்கவும்.
முக்கால் பாகம் வெந்தவுடன் காரட் குடை மிளகாய் மற்றும் அதற்கு தேவையான உப்பு சேர்த்து குடை மிளகாய் வாசனை வரும் வரை வதக்கவும்.


கடைசியாக காளான் [ mushroom ], கொடி பசலை கீரை சேர்த்து ஓரிரு மணித்துளிகள் அதிக தீயில் வதக்கவும்.


காரம் அதிகமாக விரும்புபவர்கள் பச்சை மிளகாய் சாஸ் தேவையான அளவு சேர்த்துக்கொள்ளவும்.
இப்போது உப்பு மற்றும் இட்லி துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
உப்பு சரி பார்க்கவும்.
இட்லி துண்டுகளின் மேல் காய்கறி மசாலா நன்கு படிந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
சுவையான இட்லி ஸ்டிர் ப்ரை தயார்.


இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையே இல்லை.
அப்படியே சாப்பிடலாம்.


கட்டாயம் தொட்டுக்கொள்ள வேண்டுமெனில் தக்காளி சாஸ் உபயோகிக்கலாம்.





மற்ற உணவு வகைகள் :

குதிரைவாலி உப்புமா
குதிரைவாலி உப்புமா
குதிரைவாலி பொங்கல்
குதிரைவாலிபொங்கல்
குதிரைவாலி கொழுக்கட்டை
குதிரைவாலி கொழு..
சோள இட்லி
சோள இட்லி
கம்பு இட்லி
கம்பு இட்லி
காஞ்சிபுரம் இட்லிி
காஞ்சிபுரம் இட்லிி

தொட்டுக்கொண்டு சாப்பிட

தொட்டுக்க



இந்த சமையல் செய்முறை விளக்கம் மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.



No comments:

Post a Comment