Search This Blog

Showing posts with label sundal. Show all posts
Showing posts with label sundal. Show all posts

Monday, September 22, 2014

Puli Sundal

#புளிசுண்டல் : இந்த பலகாரத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நானும் கேள்விப்பட்டதேயில்லை திருமணத்திற்கு முன்பு வரை! ஒரு சமயம் என்ன சிற்றுண்டி செய்யலாம் என எனது கணவரை கலந்து ஆலோசித்த போது இந்த புளிசுண்டல் பற்றி கூறினார்கள். அவர் கூறியபடி செய்தேன். என் மகளுக்கு மிகவும் பிடித்துப் போனது.
புளியோதரை போலவே இதன் சுவை இருக்கும். ஆனால் புளிப்பு சுவை சற்று மிதமாக இருக்கும். அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப புளியின் அளவை கூட்டி குறைத்துக்கொள்ளலாம். மேலும் புளியோதரைக்கு சாதம் தனியாக கவனமுடன் வேக வைத்து ஆற விடவேண்டும். புளிகாச்சல் தனியாக செய்து வைக்கவேண்டும். ஆனால் புளி சுண்டலை அரைமணி நேரத்திற்குள் செய்து முடித்து விடலாம். இதற்கு உபயோகப் படுத்தப்படும் எண்ணெயின் அளவும் புளியிதரையை ஒப்பிடும் போது மிகக் குறைவே!!

புளி சுண்டல்

இதோ இதன் சமையல் குறிப்பு.

தேவையான பொருட்கள் :
1 கப்                         பச்சரிசி
நெல்லி அளவு    புளி,சுடுதண்ணீரில் ஊற வைக்கவும்
1/8 கப்                      கடலை பருப்பு
1/8 கப்                      நிலக்கடலை
2 அ 3                       சிகப்பு மிளகாய்
10 - 15                      கறுவேப்பிலை
1 Tsp                         கடுகு
சிறு துண்டு         பெருங்காயம்
1 1/2 Tsp                  உப்பு
3 Tsp                        நல்லெண்ணெய்
1/4 Tsp                      மஞ்சத்தூள்
1/4 Tsp                      மிளகாய் தூள் [தேவையானால் ]

புளி சுண்டல் தேவையான பொருட்கள்

குறிப்பு : புளி சுண்டலை வேக வைக்க மொத்தம் 2 கப் திரவம் தேவை.
புளி கரைசல் 1/2 கப் இருக்குமாயின் தண்ணீர் 1 1/2 கப் எடுத்துக்கொள்ள வேண்டும்.
புளி கரைசல் + தண்ணீர் அளவு = 2 கப் தேவை.
அதற்கு ஏற்றவாறு தண்ணீர் அளவை கூட்டி குறைத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை :
புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி அளந்து தனியே எடுத்து வைக்கவும்.
புளி கரைசல்

அடுப்பில் வாணலியை வைத்து சூடாக்கவும்.
அரிசியை போட்டு கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
அரிசியை  இவ்வாறு வறுத்துக் கொண்டிருக்கும் போது நல்ல வெள்ளை நிறத்திற்கு மாறும்.
அப்போது ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

அதே வாணலியில் எண்ணெய் விடவும்.
மிதமான தீயில் சூடாக்கவும்.
முதலில் கடுகை வெடிக்க விடவும். அதன் பிறகு பெருங்காயம் மற்றும்  சிகப்பு மிளகாயை கிள்ளி சேர்க்கவும்.
உடனேயே கடலை பருப்பையும் நிலகடலையையும் சேர்த்து வறுக்கவும்.

கடுகு, மிளகாய், பெருங்காயம், கடலை மற்றும் கடலை பருப்பு தாளிக்கவும்

கடலை பருப்பு சிவந்தவுடன் கருவேப்பிலை, மஞ்சத்தூள் மற்றும் சிகப்பு மிளகாய் தூள் சேர்த்தவுடன் புளி கரைசலை அளந்து சேர்க்கவும்.
தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விடவும்.
தீயை அதிகப் படுத்தி கொதிக்கவிடவும்.


கொதிக்க ஆரம்பித்ததும் அரிசியை ஒரு முறை கழுவி விட்டு சேர்க்கவும்.


மூடி போட்டு தீயை குறைத்து வேக விடவும்.
அரசி வேக 10 நிமிடங்கள் ஆகும்.
இடையிடையே மூடியை திறந்து கிளறி விடவும்.


மூடி போட்டு வேக விட்ட பின்னர் எட்டு நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து சாத பருக்கைகளை நசுக்கி விடாமல் கிளறி விட்டு மூடி விடவும்.

புளி சுண்டல்

சரியாக வெந்த பின் அடுப்பை அணைத்து விட்டு ஓரிரு நிமிடங்கள் அடுப்பின் சூட்டிலேயே மூடி போட்டு வைத்திருக்கவும்.

புளி சுண்டல்

பின்னர் பரிமாறும் தட்டில் எடுத்து வைத்து சுவைக்கவும்.


மதிய உணவிற்கு எடுத்து செல்ல ஏற்ற உணவாகும்.
ஆற விட்ட பின் மூடி எடுத்து செல்லவும்.

தொட்டுக்கொள்ள ஏதேனும் பொரியல் அல்லது வற்றல் உபயோகப்படுதலாம்.





மேலும் சில அருமையான சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க
அரிசி உப்புமா
அரிசி உப்புமா
அரிசி சுண்டல்
அரிசி சுண்டல்
குதிரைவாலி சுண்டல்
குதிரைவாலி சுண்டல்
வரகரிசி சுண்டல்
வரகரிசி சுண்டல்
கொள்ளு சுண்டல்
கொள்ளுசுண்டல்



Saturday, May 10, 2014

Kollu Sundal

#கொள்ளுசுண்டல் : ஆங்கிலத்தில் Horse Gram  என அழைக்கப்படுகிறது. குதிரை வெகு தூரம் ஓட கால்களில் வலிமை தேவை. எலும்புகளும் உறுதியாக இருக்க வேண்டும். அதற்காகவே குதிரைக்கு #கொள்ளு உணவாக கொடுக்கப்படுகிறது. அப்படி பார்க்கும் போது கொள்ளு உடல் வலிமைக்கும் எலும்புகளின் வலிமைக்கும் மிக மிக அத்தியாவசியமானது.
இது உடலின் கொழுப்பை குறைப்பதற்கும் பயன் படுகிறது.
மேலும் அறிய கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை அழுத்தவும்.
கொள்ளு உண்பதின் பயன்கள்

இங்கு முளை கட்டிய கொள்ளு உபயோகப் படுத்தப்பட்டுள்ளது. முளை கட்டுவதனால் தானியத்தின் அல்லது பருப்பின் புரத சத்தும் மற்ற விட்டமின்களும் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உடலில் இலகுவாக உறிஞ்சப்படுகிறது.
கொள்ளை கழுவி எட்டு முதல் பத்து மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் ஒரு மூடி போட்டு மறுபடியும் 8 முதல் 10 மணி நேரம் வைத்திருக்கவும்.
முளை வந்த பிறகு குளிர் சாதன பெட்டியில் பத்திர படுத்தலாம்.

முளை கட்டிய கொள்ளு

ஒரு நாளைக்கு ஒரு முறை வெளியில் எடுத்து சுத்தமான தண்ணீரால் கழுவி விட்டு மறுபடியும் பத்திர படுத்தவும்.
இவ்வாறு செய்வதால் பருப்பிலிருந்து துர் நாற்றம் வராமல் இருக்கும்.
மூன்று முதல் நான்கு நாட்களுக்கு குளிர் சாதன பெட்டியில் வைத்து பயன் படுத்தலாம்.

இப்போது சுண்டல் செய்வது எப்படி என பார்ப்போம்.

முளை கட்டிய கொள்ளு சுண்டல்

தேவையான பொருட்கள் :
1/2 கப்                                        கொள்ளு முளை கட்டியது
1/2 Tsp                                         உப்பு
1/4 Tsp                                         பெருங்காய தூள்
1/2 Tsp                                         கடுகு
1 Tsp                                            உளுத்தம் பருப்பு
1 அ 2                                          சிகப்பு மிளகாய்
1/4 Tsp                                         மிளகாய் தூள் [தேவையானால் ]
6                                                  கறுவேப்பிலை
2 Tsp                                           தேங்காய் துருவல்
1/2 Tsp                                        எண்ணெய்
சிறிது கொத்தமல்லி மற்றும் வெங்காயம் அலங்கரிக்க.

செய்முறை :
கொள்ளு வேக சிறிது அதிக நேரம் தேவை. குக்கரில் வேக வைப்பது அவசியம்.
குக்கரில் கொள்ளு சேர்த்து 1/2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து மூடி வெயிட் பொருத்தவும்.
அதிக தீயில் ஒரு  வந்ததும் தீயை குறைத்து விடவும்.
இவ்வாறு குறைந்த தீயில் 10 நிமிடங்கள் வேக விடவும்.
ஆவி அடங்கிய பின்னர் எடுத்து வேறு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

வேக வைத்த தண்ணீரை கீழே கொட்டி விட வேண்டாம். ரசம் செய்ய பயன் படுத்தலாம்.

அடுப்பில் வாணலியை வைத்து சூடாக்கவும்.
எண்ணெய் விட்டு கடுகை வெடிக்க விடவும்.
பின்னர் மிளகாயை கிள்ளி சேர்க்கவும்.
அதன் பின்னர் உளுத்தம் பருப்பை சேர்த்து சிவக்க வறுக்கவும்.
சிவந்த பின்னர் கறுவேப்பிலை, பெருங்காயம்  சேர்த்து பிறகு வேகவைத்த கொள்ளை சேர்க்கவும்.

நன்கு கலந்து விடவும்.
காரம் தேவை என்றால் மிளகாய் பொடியை சேர்த்து கிளறவும்.
தண்ணீர் சுண்டும் வரை அதிக தீயில் அடியில் தீ பிடிக்காமல் கிளறி தேங்காய் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைத்து வெங்காய துண்டுகளை தூவி அலங்கரிக்கவும்.

முளை கட்டிய கொள்ளு சுண்டல்

மாலை நேர சிற்றுண்டிக்கு மிக அருமையான சுண்டல்.
மதிய உணவின் போதும் சாம்பார் மற்றும் ரசம் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.




மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க

பயறு சுண்டல்
பயறு 
சுண்டல்
கொண்டக்கடலை சுண்டல்
கொண்டக்கடலை சுண்டல் 
கொள்ளு ரசம்
கொள்ளு 
ரசம்
 சேப்பங்கிழங்கு மசாலா கறி
சேப்பங்கிழங்கு மசாலா கறி
பலாமுசு மசாலா கறி
பலாமுசு
மசாலா கறி


Monday, April 14, 2014

Chick Pea Stir Fry

கொண்டைகடலை சுண்டல் : கொண்டை கடலை ஆங்கிலத்தில் Chick pea என்றும் Bengal Gram என்றும் அழைக்கப்படுகிறது. ஹிந்தியில் Channa என்று அழைக்கிறார்கள். இது வெள்ளை நிறத்திலும் பிரவுன் நிறத்திலும் கிடைக்கிறது. வெள்ளை நிற கொண்டாய் கடலையை Kabuli Channa என்றும் அழைக்கபடுகிறது. பச்சை நிறத்தில் கூட இருக்கிறது.

கொண்டைகடலை
வெள்ளை கொண்ட கடலை 

இங்கு முளைகட்டிய கொண்டைகடலை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
முதல் நாள் மதியம் கழுவி 6 முதல் 8 மணி நேரம் ஊறவைக்கவும்.
பின்னர் தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு மூடி இரவு முழுவதும் வைத்திருக்கவும். மறுநாள் காலை முளை வந்திருப்பதை காணலாம்.

முளை கட்டிய கொண்டை கடலை

இனி இந்த முளை கட்டிய கொண்டை கடலையை கொண்டு சுண்டல் எப்படி செய்வது என காணலாம்.



தேவையான பொருட்கள் :
1/2 கப்                                          முளை கட்டிய கொண்ட கடலை
1/4 கப்                                           காரட் துருவியது
1/8 கப்                                           கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது
1/8 கப்                                           வாழை தண்டு மெல்லியதாக அரிந்தது
1/2 Tsp                                            உப்பு
1/4 Tsp                                            மிளகாய் தூள்
1 சிட்டிகை                                 மஞ்சத்தூள்
1/4 Tsp                                            சீரகத்தூள்
3 Tsp                                               தேங்காய் துருவல்

தாளிக்க :
1/2 Tsp                                           கடுகு
1 அ 2                                            சிகப்பு மிளகாய்
1 Tsp                                              உளுத்தம் பருப்பு
1 Tsp                                              எண்ணெய்

செய்முறை :
குக்கரில் கொண்டகடலையை உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
ஒரு விசில் வரும் வரை வேக வைத்தால் போதும்.
ஆவி அடங்கியவுடன் திறந்து தண்ணீரை வடித்து விட்டு தனியே எடுத்து வைக்கவும்.


கடாயை அடுப்பின் மேல் வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடானதும் கடுகை வெடிக்க விட்டு மிளகாயை கிள்ளி போட்டு உளுத்தம் பருப்பை சேர்க்கவும்.
பருப்பு சிவந்தவுடன் வாழை தண்டு, காரட் இரண்டையும் சேர்த்து வதக்கவும்.
மிளகாய் தூள், மஞ்சத்தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து வதக்கவும்.

இப்போது வேகவைத்து தனியே எடுத்து வைத்துள்ள கொண்டை கடலையை சேர்த்து கிளறவும்.
மூடியால் மூடி காரட் மற்றும் வாழை தண்டு மிருதுவாகும் வரை வேக விடவும்.
தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.
திறந்து பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைத்து கொத்தமல்லி தழையினால் அலங்கரிக்கவும்.



மாலை சிற்றுண்டியாக சாப்பிட அருமையாக இருக்கும்.
சாம்பார் மற்றும் ரசம் சாதத்துடன் தொட்டுக் கொண்டு சாப்பிடவும் நன்றாக இருக்கும்.







Tuesday, March 25, 2014

Sprouted Green Gram Stir Fry

#முளைகட்டியபயறுபொரியல் - #பயறுசுண்டல் : #பயறு வகைகளை முளை கட்டுவதால் பயறின் புரோட்டீன் சத்து அதிகரிக்கிறது. புரோட்டீன் சத்து உடலுக்கு மிக மிக அவசியமான ஒன்றாகும். மாமிச உணவை எடுத்துகொள்ளாதவர்களுக்கு முளைகட்டிய தானியங்கள் மற்றும் பயறு மூலமாகவே அந்த சத்து கிடைக்கிறது.
பயறை எட்டு முதல் பத்து மணி நேரம் ஊற வைத்து பின்னர் தண்ணீரை வடித்து விடவும். ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி போட்டு வைத்திருக்கவும்.
இரவு முழுவதும் இவ்வாறு வைத்திருந்து மறு நாள் காலை பார்த்தால் சிறிய சிறிய முளை வந்திருப்பதை காணலாம். இன்னும் சிறிது நீளமாக முளைக்க வைக்க வேண்டுமென்றால் சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும். முளை கட்டிய பிறகு உடனே உபயோகப் படுத்த போவதில்லை என்றால் குளிர் சாதன பெட்டியில் பத்திர படுத்தவும். குளிர் சாதன பெட்டியில் வைத்திருந்தாலும் ஒரு நாளைக்கு ஒரு முறை தண்ணீர் தெளிக்க வேண்டும். அல்லது ஒரு முறை கழுவி விட்டு நீரை வடித்து விட்டு மூடி வைக்க வேண்டும்.
மேலும் கடைகளில் முளை கட்டுவதற்கு என்றே சாதனங்கள் கிடைக்கின்றன. அதையும் உபயோகப் படுத்தலாம்.
இப்போது பயறு சுண்டல் எவ்வாறு செய்யலாம் என காண்போம்.

பயறு சுண்டல்

தேவையான பொருட்கள் :
1 கப்                                          முளைகட்டிய பயறு
1/4 கப்                                        பசலை கீரை பொடியாக அறிந்தது
1 Tbsp                                         காரட் துருவியது
1 Tbsp                                         குடை மிளகாய், பொடியாக நறுக்கியது
2 பற்கள்                                  பூண்டு, நசுக்கிக் கொள்ளவும்

தாளிக்க :
1/2 Tsp                                        கடுகு
1 அ 2                                         சிவப்பு மிளகாய்
1 Tsp                                           உளுத்தம் பருப்பு
2 சிட்டிகை                             பெருங்காய தூள்
1 Tsp                                           எண்ணெய்

செய்முறை :
அடுப்பில் சிறிய தீயில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடானதும் கடுகை வெடிக்க விடவும். பின்னர் சிகப்பு மிளகாயை ஒன்றிரண்டாக உடைத்து போடவும். உடனே உளுத்தம் பருப்பையும் சேர்த்து  சிவக்க வறுக்கவும்.
இப்போது பூண்டை தட்டி போட்டு சிறிது வதக்கிய பின்னர் குடை மிளகாய் மற்றும் காரட் துருவலை சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
அதன் பின் முளைகட்டிய பயறை சேர்த்து உப்பை போட்டு ஒரு கிளறு கிளறி மூடி போட்டு இரண்டு நிமிடங்கள் வேக விடவும். அதிக நேரம் வேக வைத்து காய் மற்றும் பயறின் நிறத்தை மாற்றி விட கூடாது.
கடைசியாக கீரையை சேர்த்து சில மணித்துளிகள் வதக்கி விட்ட பின் அடுப்பை நிறுத்தி விடவும்.

பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
மாலை சிற்றுண்டியாகவோ அல்லது சாம்பார் அல்லது ரசம் சாதத்துடன் தொட்டு கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.




மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க

கொள்ளு சுண்டல்
கொள்ளு 
சுண்டல்
கொண்டக்கடலை சுண்டல்
கொண்டக்கடலை சுண்டல் 


Thursday, March 20, 2014

Arisi Sundal

#அரிசிசுண்டல் : #சுண்டல் என்றதும் உங்களுக்கு கடற்கரை ஞாபகம் வருகிறதா? இது அதுவல்ல!.... இது அரிசி மற்றும் பச்சை பருப்பு கொண்டு பாரம்பரியமாக செய்யப் படும் ஒரு உணவு வகையாகும்.அரிசியும் பருப்பும் உபயோகித்துதானே பொங்கல் செய்யப்படுகிறது. பிறகு இதிலென்ன விசேஷம் என தோன்றுகிறதா??!! பொருட்கள் என்னமோ ஒன்றுதான். ஆனால் செய்முறையில் சிறிது வித்தியாசம். இந்த சிறு வித்தியாசம்  சுவையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்து விடுகிறது.

பொங்கல் போல ஒன்று சேர்ந்து கொழகொழவென இல்லாமல் உதிர் உதிராக இருக்கும். அதனால் இதனை பழங்கால Fried Rice  என கூறலாம்.
அரிசி உப்புமா வை போலவும் இதன் ருசி இருக்காது. பருப்பின் வாசனையுடன் மிக வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

மேலும் இதன் சுவை அரிசியின் வகையை ஒத்ததாகவே இருக்கும்.
உதாரணமாக பாசுமதி அரிசியில் செய்யும் போது கிடைக்கும் சுவையும் பொன்னி, சோனாமசூரி போன்ற வகை பச்சரிசியுடன் செய்யும் போது அமையும் சுவையும் சிறிது வித்தியாசமாகவே இருக்கும்.
இனி எப்படி செய்யலாம் என காண்போம்.

அரிசி சுண்டல்

தேவையான பொருட்கள் :
3/4 கப்                                          பச்சரிசி
1/4 கப்                                          பச்சை பருப்பு [பாசி பருப்பு, சிறு பருப்பு ]
1 பெரிய அளவு                       வெங்காயம், பொடியாக நறுக்கவும்.
10                                                  கறுவேப்பிலை
1 சிறு துண்டு                          இஞ்சி [ விருப்பப்பட்டால் ]

தாளிக்க :
1 Tsp                                           கடுகு
3 Tsp                                           கடலை பருப்பு
3 அ 4                                         சிகப்பு மிளகாய் [ அட்ஜஸ்ட் ]
1/8 Tsp                                          பெருங்காயம்
2 Tsp                                           நல்லெண்ணெய்

அலங்கரிக்க :
தேங்காய் துருவல்           தங்களுடைய விருப்பம் போல

செய்முறை :
வாணலியை  சிறிய தீயில் வைத்து முதலில் அரிசியை வெறுமனே வறுக்கவும். கை விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
அரிசி அதனுடைய இயற்கையான நிறம் மாறி நல்ல வெள்ளை நிறமாக மாறும்.
அந்த தருணத்தில் ஒரு தட்டிலோ அல்லது வாயகன்ற பாத்திரத்திலோ மாற்றி விடவும்.

இப்போது அதே வாணலியில் பருப்பை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.


பொன்னிறமாக வறு பட்டதும் அரிசியுடன் சேர்த்து விடவும்.
வறுத்த அரிசி பருப்பை தனியே வைக்கவும்.

அதே வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
கடுகை வெடிக்க விட்ட பின் மிளகாயை கிள்ளி  போட்டு கடலை பருப்பை சேர்த்து வறுக்கவும்.


பருப்பு பொன்னிறமானதும் பெருங்காயம், கறுவேப்பிலை, மற்றும்   இஞ்சியை சேர்த்து  சிறிது வதக்கிய உடனேயே வெங்காயத்தை சேர்த்து மணம் வரும் வரை வதக்கவும். வெங்காயம்  ரோஸ் நிறம் மாறினால் போதும்.
2 கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்க்கவும்.
நன்கு கரண்டியால் கலக்கி விட்டு தீயை அதிகப் படுத்தி கொதிக்க விடவும்.


இந்த நேரத்தில் அரிசியையும் பருப்பையும் இரு முறை தண்ணீர் விட்டு கழுவி வைக்கவும்.
 கொதிக்க  ஆரம்பித்ததும் கழுவி வைத்துள்ள அரிசி பருப்பை சேர்த்து கலக்கி தீயை சிறிதாக்கி மூடி போட்டு வேக விடவும்.


நடுவில் மூடியை திறந்து கரண்டியால் கலக்கி விடவும். கிண்டும் போது கவனம் தேவை. அரிசியோ பருப்போ நசுக்கிவிடாமல் கவனமாக கிளற வேண்டும்.


வேக சுமார் பத்து நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும்.
வெந்தவுடன் அடுப்பை நிறுத்தி விட்டு மேலும் இரண்டு நிமிடங்கள் மூடியால் மூடி வைத்திருக்கவும்.


பின்னர் எடுத்து பரிமாறலாம்.

ஒரு தட்டில் அல்லது கிண்ணத்தில் சுண்டலை வைத்து தேங்காய் துருவலை தூவி தேங்காய் சட்னியுடன் சுவைக்கவும்.


சுண்டலின் மேல் தேங்காய் துருவல், அதன் மேல் சர்க்கரை தூவி சாப்பிட்டால் சுவை மிகவும் அலாதியாக இருக்கும்.
செய்து சுவைக்கவும்!!!

குறிப்பு :
சிகப்பு மிளகாய்க்கு பதில் பச்சை மிளகாய் கொண்டும் செய்யலாம்.







மேலும் சில அருமையான சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க
அரிசி உப்புமா
அரிசி உப்புமா
குதிரைவாலி சுண்டல்
குதிரைவாலி சுண்டல்
வரகரிசி சுண்டல்
வரகரிசி சுண்டல்
புளி சுண்டல்
புளி சுண்டல்
கொள்ளு சுண்டல்
கொள்ளுசுண்டல்