Search This Blog

Tuesday, December 27, 2016

Chowchow-Adai

#சௌசௌஅடை : #அடை செய்வதற்காக மாவு தயார் செய்துவிட்டு சுரைக்காய் வாங்குவதற்காக காய்கறி கடைக்கு சென்றேன். ஆனால் கடையில் மிகவும் பெரிய அளவு சுரைக்காயே இருந்தது. அவ்வளவு பெரிய காய் அடை செய்ய தேவைப்படவில்லை. அதனால் வேறு என்னென்ன காய்கள் கடையில் இருக்கிறதென பார்த்தேன். #சௌசௌ கண்ணில் பட்டது. அதனை வாங்கி வந்து பொடிப்பொடியாக நறுக்கி மாவில் சேர்த்து அடை செய்தேன். மிகவும் பிரமாதமாக இருந்தது. யாராலுமே கண்டுபிடிக்க இயலவில்லை!! அந்த அற்புத சமையல் குறிப்பு இதோ உங்களுக்காக..

சுமார் 4 - 5 அடைகள் தயாரிக்கலாம்.

Chowchow Adai


தேவையானவை :
ஊற வைக்க :
1/4 கப்புழுங்கரிசி [ இட்லி அரிசி ]
1/4 கப்பச்சரிசி
1/4 கப்துவரம் பருப்பு
1/4 கப்கடலை பருப்பு
அரைக்க :
1/2 Tspபெருங்காயத்தூள்
1 Tspசோம்பு
1 Tspசீரகம்
1/2 அங்குலஇஞ்சி துண்டு
2 - 3சிகப்பு மிளகாய் [ அட்ஜஸ்ட் ]
1 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]
மாவுடன் சேர்க்க :
1 சௌ சௌ, தோல் நீக்கி பொடியாக நறுக்கவும் 
1 நடுத்தரவெங்காயம், பொடியாக நறுக்கவும்
4 Tspகொத்தமல்லி தழை நறுக்கியது
10 - 12கருவேப்பிலை, கிள்ளி வைக்கவும்

அடை சுட தேவையான நல்லெண்ணெய்
அடை மேலே தடவ தேவையான நெய் அல்லது வெண்ணெய்.

செய்முறை :
அரிசி இரண்டையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து இரு முறை கழுவி விட்டு ஊற வைக்கவும்.
பருப்பு அனைத்தையும் ஒன்றாக வேறொரு பாத்திரத்தில் எடுத்து கழுவிய பின்னர்  ஊறவைக்கவும்.
சுமார் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

2 மணி நேரம் கழித்து கொடுக்கப்பட்டுள்ள அரைக்க தேவையான மற்ற பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும்.
பின்னர் அதனுடன் அரிசியை சேர்த்து அரைத்து எடுத்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வைக்கவும்.
பின்னர் பருப்பு ஊறவைத்த தண்ணீர்  முழுவதும் வடித்து விட்டு மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்து முன்பு அரைத்து வைத்துள்ள அரிசியுடன் சேர்க்கவும்.
நன்கு கலக்கி விடவும்.
அவற்றுடன் மாவுடன் சேர்க்க வேண்டிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கலக்கவும். உப்பு சரி பார்த்துக் கொள்ளவும்.
அடுப்பை  பற்ற வைத்து  கல்லை சூடாக்கவும்.
சூடானதும் எண்ணெய் சுற்றி விட்டு மாவை கரண்டியால் எடுத்து தோசை கல்லின் நடுவே வைத்து சமமாக பரப்பவும்.
அடை என்பதால் சிறிது கனமாக இருக்க வேண்டும்.
மேலேயும் சுற்றியும்  எண்ணெய் விட்டு ஒரு மூடியால் மூடி 2 அ 3 நிமிடங்கள் வேக விடவும்.
பின்னர் திறந்து பார்க்கவும்.
ஓரங்கள் சிவந்தவுடன் திருப்பிப் போட்டு வேக விடவும்.
இரு  பக்கமும் நன்கு  சிவந்த வுடன் எடுத்து தட்டில் வைக்கவும்.

இதே போல ஒவ்வொன்றாக சுட்டு எடுக்கவும்.
சுவையான சௌசௌ அடை தயார்.
அடையை தட்டில் வைத்து மேலே வெண்ணெய் அல்லது நெய் தடவி சூடாக  அவியல் வைத்து பரிமாறவும்.

Chowchow Adai Chowchow Adai





முயற்சி செய்து பார்க்க மேலும் சில சமையல் குறிப்புகள் 

வாழைப்பூ பருப்பு உருண்டை
வாழைப்பூபசலைஅடை
பெசரட்டு
பெசரட்டு
அடை
அடை
முடக்கத்தான் கீரை தோசை
முடக்கத்தான் தோசை
கொடி பசலை கீரை தோசை
பசலை கீரை தோசை






Tuesday, December 20, 2016

Curry-Leaf-Tomato-Chutney

#கருவேப்பிலைதக்காளிசட்னி : #கருவேப்பிலை [ #கறிவேப்பிலை ] நமது தமிழகத்து சமையலில் மிக முக்கிய இடம் வகிக்கிறது. நாம் அருந்தும் டீ மற்றும் காபி தவிர மற்ற அனைத்து உணவிலும் இந்த அற்புத இலை இல்லாமல் செய்யப்படுவது இல்லை. நாம் இதை வாசனைக்காக மட்டுமல்ல, முக்கிய சத்துக்களுக்காகவும் பயன் படுத்துகிறோம். கருவேப்பிலையை கிள்ளி போட்டு சமையலில் பயன் படுத்தும் போது நம்மில் பலர் அதை ஒதுக்கி வைத்துவிட்டு உண்கிறோம். ஆக பல மருத்துவ குணங்கள் அடங்கிய கருவேப்பிலையை சட்னி செய்ய உபயோகப்படுத்தப்படும் போது நன்கு அரை பட்டுவிடுவதால் நாம் முழு பலனை அடையலாம்.
இங்கு கருவேப்பிலையை மிகுதியாக உபயோகப்படுத்தி தக்காளியுடன் சேர்த்து செய்யக்கூடிய ஒரு சட்னி செய்முறையை காணலாம்.


தேவையானவை :
1/4 கப்கருவேப்பிலை
தக்காளி 
10 - 12சின்ன வெங்காயம்
6 - 8பச்சை மிளகாய்
1 Tspஎலுமிச்சை சாறு [ அட்ஜஸ்ட் ]
1 1/2 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]
1/2 Tspஎண்ணெய்
தாளிக்க :
1/2 Tspஎண்ணெய்
1/2 Tspகடுகு
1/2 Tspஉளுத்தம் பருப்பு
4 - 6கருவேப்பிலை
செய்முறை :
கருவேப்பிலையை தண்ணீரில் நன்கு கழுவி தனியே வைக்கவும்.
மைக்ரோவேவில் பயன்படுத்தக்கூடிய பீங்கான் பாத்திரத்தில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை எடுத்துக்கொள்ளவும்.
கால்  தேக்கரண்டி எண்ணெய் விட்டு கலந்து விடவும்.
மைக்ரோவேவின் உள்ளே வைத்து ஹையில் அரை நிமிடம் சூடு படுத்தவும்.
வெளியே எடுத்து அதே பீங்கான் பாத்திரத்தில் வெட்டி வைத்துள்ள தக்காளி சேர்த்து மேலும் கால் தேக்கரண்டி எண்ணெய் விட்டு கலந்து விடவும்.
மீண்டும் மைக்ரோவேவ் ஹையில் தக்காளி வேகும்வரை சூடாக்கவும்.
வெளியே எடுத்து வைத்து ஆற விடவும்.
ஆறிய பின்னர் வதங்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கழுவி வைத்துள்ள கருவேப்பிலை, உப்பு மற்றும் எலுமிச்சை சாறு அனைத்தையும் மிக்சி பாத்திரத்தில் போட்டு நன்கு அரைத்தெடுக்கவும்.
தேவையெனில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சரி பார்த்து பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகை வெடிக்க விட்ட பின் உளுத்தம் பருப்பை சேர்த்து சிவக்க வறுக்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு கருவேப்பிலையை கிள்ளி போட்டு தாளித்து சட்னியின் மேல் கொட்டவும்.

சுவையான கருவேப்பிலை நறுமணம் கூடிய சட்னி தயார்.
ஆப்பம், &  தோசை

நீர் தோசை,  &  கஞ்சி தோசை போன்றவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
காரம் அதிகமாக இருப்பதால் சட்னியின் மேல் நல்லெண்ணெய் ஊற்றி தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் மிக மிக அருமையாகவும் ருசியாகவும் இருக்கும்.

  • அவரவர் காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாயின் அளவை கூட்டி குறைத்துக்கொள்ளவும்.
  • மைக்ரோவேவ் இல்லையெனில் வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை தனித்தனியே வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
  • எலுமிச்சை சாற்றிற்கு பதிலாக புளியையும் உபயோகிக்கலாம்.
  • கருவேப்பிலையின் அளவையும் அவரவர் விரும்பம்போல் எடுத்துக்கொள்ளலாம்.


சில சட்னி வகைகளின் சமையல் குறிப்புகள் :

  • கீழே உள்ள படங்களின் மேல் அம்புக்குறியை காட்டினால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்து கொள்ளலாம்
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் சமையல் குறிப்பின் பக்கத்திற்கு செல்லலாம்

பூண்டு மிளகாய் சட்னி பூண்டு தக்காளி சட்னி வெங்காயம் தக்காளி சட்னி
கொத்தமல்லி தேங்காய் சட்னிநெல்லிக்காய் புதினா துவையல்





இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பெட்டியின் வழியாக முகநூல், ப்ளாகர், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.






Friday, October 28, 2016

Venthaya Pachadi

#வெந்தயபச்சடி : இந்த #பச்சடி நான்கு வகை சுவைகளான இனிப்பு, காரம், கசப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட ஒரு குழம்பு வகையாகும். ராஜஸ்தானில் பொதுவாக செய்யப்படும் ஒரு குழம்பு ஆகும். #வெந்தயம், உலர்ந்த திராட்சை மற்றும் பேரீச்சம் பழம் ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது.
வெந்தயம் கசப்புத்தன்மை உடையதால் அதிகமாக நாம் உணவில் சேர்த்துக்கொள்ள தயங்குவோம். ஆனால் வெந்தயம் தன்னகத்தே பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. தண்ணீரில் கரையக்கூடிய நார் சத்து கொண்டுள்ளது. இது செரிமானத்திற்கும் மல சிக்கலை தவிர்ப்பதற்கும் பேருதவியாக இருக்கிறது. வெந்தயத்தை ஊறவைத்து முளை கட்டி பயன் படுத்தினால் அதன் கசப்பு தன்மை வெகுவாக குறையும். மேலும் புரத சத்தும் நமக்கு அதிகமாக கிடைக்கும்.
இந்த குழம்பின் செயல் முறையை ஒரு தொலை காட்சி நிகழ்ச்சியில் பார்த்தேன். என்னிடம் இருந்த பொருட்களை கொண்டும் எனது ருசிக்கு தக்கவாறும் சிறிது மாற்றங்களை செய்து தயாரித்துப் பார்த்தேன். சுவை மிக மிக அருமை.

Venthaya pachadi


Venthaya pachadi

தேவையானவை :
1/4 cupவெந்தயம் முளைகட்டியது
2 Tbspஉலர்ந்த திராட்சை [ kishmish ]
1/2 Tspமிளகாய்த்தூள் [ adjust ]
1/2 Tspசீரகத்தூள்
2 Tspகொத்தமல்லி தூள்
1 Tspஆம்சூர் பொடி ( மாங்காய் பொடி ) [ adjust ]
1 Tspவெல்லம்
2 Tspஉப்பு [ adjust ]
1/2 Tspகடுகு
1/2 cupசீரகம்
8 - 10கருவேப்பிலை
3 Tspநல்லெண்ணெய் [ sesame / till oil ]

செய்முறை :
முதல் நாள் காலையிலேயே வெந்தயத்தை கழுவிய பிறகு ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.
மாலையில் தண்ணீரை முழுவதுமாக வடித்து விட்டு மூடி போட்டு அடுப்பங்கரையில் இரவு முழுவதும் வைத்திருக்கவும்.
மறுநாள்காலையில் வெந்தயம் முளை கட்டியிருப்பதை காணலாம்.

வெந்தய பச்சடி செய்யத் துவங்குவதற்கு முன் முதலில் உலர்ந்த திராட்சையை வெதுவெதுப்பான தண்ணீரில் ஊறவைக்கவும்.

முளை கட்டிய வெந்தயத்தை குக்கரில் போட்டு ஒரு கப் தண்ணீர் விட்டு இரண்டு விசில் வரும் வரை வேக விடவும்.
ஆவி அடங்கும் வரை காத்திருந்து குக்கரை திறக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் கடுகு மற்றும் சீரகம் போட்டு வெடிக்க விடவும்.
அடுத்து வேக வைத்த வெந்தயத்தை தண்ணீருடன் வாணலியில் சேர்க்கவும்.
இப்போது மிளகாய் தூள், மஞ்சத்தூள், சீரகத்தூள், மற்றும் கொத்தமல்லி தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கலக்கி விடவும்.
பிறகு ஊறவைத்துள்ள உலர்ந்த திராட்சையை போட்டு கலக்கவும்.
ஓரிரு நிமிடங்கள் கழித்து ஆம்சூர் பொடி மற்றும் உப்பு சேர்த்து கலக்கி சிறிய தீயின் மீது வைத்திருக்கவும்.
எண்ணெய் மேலே மிதக்க ஆரம்பித்ததும் வெல்லம் சேர்த்து ஒரு கொதி  வந்தவுடன் கருவேப்பிலையை கிள்ளி போட்டு அடுப்பை அணைத்து விடவும்.
துவர்ப்பு தவிர எல்லா வகையான சுவையும் நிறைந்த வெந்தய பச்சடி தயார்.

பரிமாறும் கிண்ணத்தில் எடுத்துவைக்கவும்.
பருப்பு சாதம், பொடி கலந்த சாதம் மற்றும் தயிர் சாதம் ஆகியவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.

குறிப்பு :
உலர்ந்த திராட்சையுடன் உலர்ந்த பேரீச்சம் பழமும் சேர்த்து செய்யலாம்.



மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க
ஆப்ப மாவு
ஆப்ப மாவு
வாழைப்பூ குழம்பு
வாழைப்பூ குழம்பு
வெந்தய குழம்பு
வெந்தய குழம்பு
வாழைப்பூ தயிர் பச்சடி
வாழைப்பூ தயிர் பச்சடி
மாங்காய் பச்சடி
மாங்காய் பச்சடி



Wednesday, October 19, 2016

Gulab Jamoon

#குலாப்ஜாமூன் : இனிப்புகளின் ராணி குலாப் ஜாமூன் எனலாம். இந்தியா முழுவதும் இனிப்பு என்றவுடன் முதலில் நினைவில் வருவது குலாப் ஜாமூன்!! தற்போது உடனே செய்யக்கூடிய குலாப் ஜாமூன் மாவு கலவைகள் பல கடைகளில் கிடைக்கின்றன. மாவு கலவையில் குறிப்பிட்டுள்ள தண்ணீரை ஊற்றி பிசைந்து எண்ணெய் சூடாக்கி பொரித்தெடுத்து சர்க்கரை பாகில் இட்டு ஊறவைத்து எடுத்தால் ஜாமூன் தயார்.
ஆனால் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு சுவையிலேயே தயாரிக்க முடிகிறது. மேலும் மாவு தயாரித்த குறுகிய நேரத்திற்குள் ஜாமூனை பொரித்தெடுக்க வில்லையெனில் மாவு புளித்து போய் எண்ணெயில் பிரிந்துவிடும் அபாயமும் உண்டு.
பாரம்பரியமாக நமது முன்னோர்கள் பாலை சுண்ட காய்ச்சி பால்கோவா செய்து இரண்டு மூன்று நாட்கள் வைத்திருந்து பின்னர் குலாப் ஜாமூன் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். எனது தாயார் கறவை மாடு வைத்திருந்த போது மீந்து போகும் பாலை பால்கோவாவாக செய்து டப்பாவில் அடைத்து வைத்திருப்பார்கள். மாலை நேர சிற்றுண்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு செய்த பால்கோவாவில் மைதா அல்லது கோதுமை மாவு சிறிது கலந்து நீள உருண்டைகளாக உருட்டி பொரித்து சர்க்கரை பாகில் ஊறவைத்து சுவைக்க கொடுப்பார்கள். சுவை மிக மிக அருமையாக இருக்கும். சாப்பிட சாப்பிட இன்னும் சாப்பிடத் தூண்டும்.
இங்கு இப்போது கடைகளில் கிடைக்கும் சர்க்கரை போடாத பால்கோவா கொண்டு குலாப் ஜாமூன் செய்யும் முறையை காண்போம்.


gulab jamoon


தேவையானவை :
200 கிராம்பால்கோவா சர்க்கரை போடாதது 
2 Tbspகோதுமை ( அ ) மைதா மாவு
2 கப்சர்க்கரை
1/2 Tspஏலக்காய் பொடி
3 Tbspதேன்
4 துளிகள்ரோஸ் எசென்ஸ்
2 கப்எண்ணெய் பொரிப்பதற்கு
பாதம் பருப்பு துகள்கள் அலங்கரிக்க.

செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு 1 1/2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
சர்க்கரை கரையும் வரை கரண்டியால் கலக்கி விடவும்.
சர்க்கரை கரைந்த பின்னர் ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.
ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு அடுப்பை அணைத்து விட்டு ஏலக்காய் பொடி, தேன் மற்றும் ரோஸ் எசென்ஸ் சேர்த்து கலக்கி வைக்கவும்.
ஜாமூனை ஊறவைக்க சர்க்கரைப்பாகு தயார்.
அடுத்து ஜாமூனை தயாரிப்பது எப்படி என பார்க்கலாம்.

கடையில் கிடைக்கும் சர்க்கரை போடாத பால்கோவாவை ஒரு தட்டில் எடுத்துக்கொள்ளவும்.
நான் கோதுமை மாவை உபயோகப்படுத்தி உள்ளேன்.
கொடுக்கப்பட்டுள்ள அளவு கோதுமை மாவை பால்கோவாவுடன் சேர்த்து கெட்டியான மாவாக பிசைந்துக் கொள்ளவும்.
சிறிது தளர இருப்பதாக தோன்றினால் மேலும் சிறிது மாவு சேர்த்துக்கொள்ளலாம்.
மாவு பிசைந்த பிறகு அவரவர் விருப்பப்படி நீள வடிவ உருளைகளாக அல்லது பந்து போல உருட்டிக் கொள்ளவும்.
மாவு உருட்டிக் கொண்டிருக்கும் போதே அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
ஒரு சிறு துண்டு மாவை கிள்ளி எண்ணெயில் போடவும். அது சிறிது நேரம் எண்ணெயின் உள்ளேயே இருந்து பொரிகிறது என்றால் சரியான சூடு என அர்த்தம்.
சாரணியால் எண்ணெய்யை கவனமாக ஒரு சுழற்சியை ஏற்படுத்திய பின்னர் ஐந்து அல்லது ஆறு உருட்டிய ஜாமூன்களை எண்ணெயில் மெதுவாக போடவும்.
இவ்வாறு எண்ணெயில் சுழற்சி ஏற்படுத்துவதால் வாணலியில் அடியில் ஒட்டிக்கொள்ளாமல் இருக்கும்.
சாரணியால் திருப்பி திருப்பி விட்டு பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
எண்ணெயை உறிஞ்சும் காகித தாளின் மீது பொரித்த ஜாமூனை எடுத்து வைக்கவும்.
சில வினாடிகளுக்குப் பிறகு சர்க்கரை பாகில் அவற்றை போடவும்.
இவ்வாறு ஐந்து அல்லது ஆறு ஜாமூன்களாக எண்ணெயில் பொரித்தெடுத்து பாகில் ஊற வைக்கவும்.
எண்ணெயை மிதமான சூட்டில் இருப்பது மிக மிக அவசியம்.
என்னை மிகுந்த சூடாக இருப்பின் அடுப்பை அணைத்து சூட்டை குறைத்த பின் பொரித்தெடுக்கவும்.
எண்ணையின் சூடு அதிகமாக இருந்தால் ஜாமூன்கள் வெளியில் பொன்னிறமாக பொரிந்து விடும். ஆனால் உள்ளே வெந்திருக்காது.

ஒரு மூடி போட்ட பாத்திரத்தில் ஜாமூன்களை பத்திரப்படுத்தவும்.
சர்க்கரை பாகில் அனைத்து ஜாமூன்களும் மூழ்கியிருக்கும் வரை மூன்று நான்கு நாட்களுக்கு வைத்திருந்து சுவைக்கலாம்.

மூன்று மணி நேரம் ஊறிய பின்னர் எடுத்து சுவைக்கலாம்.
கிண்ணத்தில் இரண்டு மூன்று ஜாமூன்களை போட்டு பாதாம் துகள்களை மேலே தூவி பரிமாறவும்.
gulab jamoon gulab jamoon
குறிப்பு :
பாகு அனைத்தையும் ஜாமூன்கள் உறிஞ்சி விட்டதென்றால் மேலும் 1/2 கப் பாகு தயாரித்து சேர்க்கவும்.





மேலும் சில இனிப்பு வகைகளின் சமையல் குறிப்புகள் :

தினை மாவு உருண்டை
தினை மாவு உருண்டை
ஸ்ரீ கண்ட்
ஸ்ரீ கண்ட்
ஆளிவிதை உருண்டை
ஆளிவிதை உருண்டை
இன்ஸ்டன்ட் தூத் பேடா
இன்ஸ்டன்ட் தூத் பேடா
பயத்தம் பருப்பு உருண்டை
பயத்தம் பருப்பு உருண்டை