Search This Blog

Monday, April 7, 2014

Poori

#பூரி : சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி உண்ணப்படும் ஒரு டிபன் என்றால், அது  இந்த பூரியாகதான் இருக்கும். இதனை மைதா மாவை கொண்டோ அல்லது கோதுமை  மாவை கொண்டோ செய்யலாம். நான் பொதுவாக இரண்டு மாவையும் சரி விகிதத்தில் கலந்து செய்வது வழக்கம்.

எந்த மாவை உபயோகப்படுத்தி செய்கிறோமோ அதற்கேற்றார் போல ருசியும் வேறுபடும். எண்ணையில் பொரித்தெடுக்கும் டிபன்களில் இதுவும் ஒன்றாகும். அதனால் மாவு தயாரிக்கும் முறையில் மிகுந்த கவனம் தேவை. இல்லையெனில் பொரிக்கும் போது எண்ணெயை அதிகமாக குடிக்கும் அபாயம் உண்டு.

இப்போது எப்படி செய்வது என காணலாம். சுமார் 15 பூரிகள் தயாரிக்கலாம்.

பூரி

தேவையான பொருட்கள் :
3/4 கப்                                     மைதா மாவு
3/4 கப்                                     கோதுமை மாவு
1 Tsp                                        நெய் [ விருப்பப்பட்டால் ]
1/2 Tsp                                      உப்பு
1 Tsp                                        எண்ணெய்

1 கப்                                       எண்ணெய் பொரிப்பதற்கு

செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து, பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு குறைந்த தீயில் சூடாக்கவும்.
எண்ணெய் சூடாவதற்குள் பூரி மாவை தயாரித்து விடலாம்.

  • ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மாவை எடுத்துக்கொள்ளவும்.
  • அதில் நெய்யையும் உப்பையும் சேர்க்கவும்.
  • கைகளால்  பிசறி விடவும்.
  • பின்னர் 1/2 கப் தண்ணீர் சேர்த்து பிசையவும்.



  • மாவு ஒன்றுசேர்ந்தாற்போல வந்தவுடன் 1 Tsp எண்ணெய் சேர்க்கவும்.
  • மறுபடியும் நன்கு பிசையவும்.
  • அழுத்தி பிசைய பிசைய மாவு நன்கு மிருதுவாக வரும்.
  • சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.


இப்போது பூரிகளை இட சப்பாத்தி அமுக்கும் கருவியை உபயோகிக்கலாம்.
இல்லையென்றால் வட்ட வட்டமாக பூரி கட்டை கொண்டு இடவும்.

இங்கு சப்பாத்தி ப்ரஸில் எப்படி இடுவது என பார்க்கலாம்.


ப்ரெசின் உள்ளே அடி தட்டிலும் மேல் தட்டிலும் எண்ணெய் தடவிக் கொள்ளவும்.

அடி தட்டின் மேல் உருட்டி வைத்துள்ள மாவை வைத்து மேல் தட்டால் மூடி கைப்பிடியால் அழுத்தம் கொடுத்து வட்ட வடிவ பூரியை உருவாக்கவும்.
இவ்வாறு தட்டிய பூரி மிகவும் மெல்லியதாகவும் இருக்ககூடாது.
தடிமனாகவும் இருக்கக் கூடாது.
ஒரே சீராக 1/2 mm தடிமன் உடையதாக இருக்கலாம்.


  • எண்ணெய் நன்கு புகை வரும் அளவுக்கு சூடாக இருக்க வேண்டும்.
  • திரட்டிய பூரி மாவை எண்ணெய்யில் மெதுவாக விடவும்.
  • போட்ட உடனேயே பந்து போல உப்பி மேலெழுந்து வரும்.
  • சாரணியால் அடுத்த பக்கத்திற்கு திருப்பி விடவும்.
  • இரண்டு பக்கமும் வெந்ததும் எண்ணையை வடித்து வேறு தட்டில் எடுத்து வைக்கவும்.
பூரி பூரி
பூரி பூரி


  • இதே போல ஒவ்வொன்றாக பொரித்தெடுக்கவும்.
  • எண்ணெயின் சூட்டை தேவைக்கேற்றவாறு அவ்வப்போது தீயை கூட்டி குறைத்து கொள்ளவும்.
  • உருளை கிழங்கு மசாலா செய்து இதனுடன் தொட்டு கொண்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

பூரி பூரி கிழங்கு

உருளை கிழங்கு குருமா, காய்கறிகள் குருமா, தக்காளி சட்னி ஆகியவற்றுடனும் அருமையாக இருக்கும்.

பூரியை ஒரு குழியான தட்டில் வைத்து பாலை ஊற்றி ஊறவைத்து சர்க்கரையை மேலே தூவி சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும்.

பூரி

பூரியுடன் ஜாம் மற்றும் வெல்லம்  ஆகியவற்றுடன் சாப்பிட்டால் இன்னும் சுவையோ சுவை!!
பள்ளிக்கு டிபன் பாக்ஸில் பூரியின் மேல் ஜாம் தடவி சுருட்டி வைத்து அனுப்பினால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

ஆனால் ஹோட்டல்களிலும் வீடுகளிலும் பூரி கிழங்குதான் மிக மிக மிக பிரபலம்!!!....

மற்ற பூரி வகைகள்

பீட்ரூட் பூரி பூரி கிழங்கு கொடி பசலை பூரி

1 comment:

  1. Half cooked பாக்கட் எப்படி செய்வது

    ReplyDelete