Search This Blog

Showing posts with label side dish. Show all posts
Showing posts with label side dish. Show all posts

Saturday, June 14, 2014

Cauliflower mushroom Milagu Curry

#காலிப்ளவர்காளான்மிளகுகறி : #காலிப்ளவர் குருமா போன்ற கறி செய்வதற்கு மிகவும் ஏற்ற காயாகும். காலிப்ளவர் மற்ற காய்கறிகளுடன் கலந்து கறி செய்யும் போது சுவை நன்றாக இருப்பது போல காளானுடன் சேர்த்து செய்து பார்த்தால் நன்றாகத்தானே இருக்கும் என முயற்சி செய்து பார்த்தேன். சுவை அபாரமாக அமைந்தது. அதனை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

காலிப்ளவர் காளான் மிளகு கறி

தேவையான பொருட்கள் :
1 கப்                                   காலிப்ளவர் நறுக்கியது
6 - 7                                     காளான், கழுவி தனியே வைக்கவும்.
1 சிறியது                         காரட், நறுக்கவும் [ இருந்தால் ]
1/4 Tsp                                 உப்பு
சிறிதளவு கொத்தமல்லி தழை

மசாலாவிற்கு தேவையான பொருட்கள் :
1/4 கப்                              தேங்காய் துருவல்
2                                        பச்சை மிளகாய்
1 Tsp                                 மிளகு
4 பற்கள்                        பூண்டு
1 Tsp                                 சீரகம்
1/2 Tsp                              சோம்பு
1/4 Tsp                              மல்லி விதை  [ optional ]
1/2 Tsp                              கசகசா  [ poppy seeds ]
3                                        முந்திரி பருப்பு
1/2 Tsp                              உப்பு
1 சிறியது                      வெங்காயம்

செய்முறை :
வெங்காயம் தவிர மற்றையனைத்தையும் மிக்ஸியில் எடுத்துக் கொள்ளவும்.
தண்ணீர் விடாமல் முதலில் அரைக்கவும்.


பின்னர் தண்ணீர் விட்டு மைய அரைத்துக்கொள்ளவும்.
கடைசியாக வெங்காயத்தை சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்தெடுக்கவும்.
ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.


தண்ணீர் சிறிது சேர்த்து மிக்ஸியில் ஒட்டியுள்ள மசாலாவை கழுவி மசாலாவை எடுத்து வைத்துள்ள கிண்ணத்தில் ஊற்றவும்.


குக்கரில் காலி ப்ளவர் மற்றும் காரட் எடுத்திருந்தால் அதையும் போட்டு 3/4 கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து மூடி வெயிட் வைத்து அதிக தீயில் சூடாக்கவும்.
ஒரு விசில் வரும் வரை அடுப்பில் வைத்திருக்க வேண்டும்.
விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து நீராவியை உடனே வெளியேற்றி மூடியை திறக்கவும்.
அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.


மிதமான தீயில் கொதிக்க விடவும்.
காளானையும் வெட்டி சேர்க்கவும்.

காலிப்ளவர் காளான் மிளகு கறி

ஒன்று சேர்ந்தாற்போல வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

விரும்பினால் சீரகம் தாளித்து சேர்க்கலாம்.
கொத்தமல்லி தழையினால் அலங்கரிக்கவும்.

காலிப்ளவர் காளான் மிளகு கறி

சுவையான மிளகு கறி தயார்.
பூரி, சப்பாத்தி மற்றும் இட்லி தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.

மற்ற கறி வகைகள் முயற்சி செய்து பார்க்க

காலிப்ளவர் தக்காளி குருமா குடைமிளகாய் குருமா பஜ்ஜி மிளகாய் கிரேவி

Sunday, June 8, 2014

Vendaikkai Thakkali Curry

#வெண்டைக்காய்தக்காளிகறி : வெண்டைக்காய் சிறுவர் முதல் முதியவர் வரை எல்லோராலும் விரும்பப்படும் ஒரு காய் ஆகும். இளசான காயை அப்படியே சாப்பிடலாம். இதன் கொழகொழப்பு தன்மை மற்றும் நார்சத்து மலசிக்கலை தவிர்க்க உதவியாக இருக்கிறது.
மேலும் இதில் வைட்டமின் A , C மற்று K நிறைந்துள்ளது. இதை தவிர இரும்பு, கால்சியம், மக்னீசியம் மற்றும் மாங்கனீஸ் போன்ற தாது உப்புகள் அதிகமாக உள்ளது.
பொதுவாக இந்த காயை உபயோகித்து பொரியல், சாம்பார் போன்றவற்றையே அதிகமாக செய்வது வழக்கம். வேறு ஏதாவது இதனை கொண்டு செய்ய முடியுமா என தேடிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் சமையல் வல்லுநர் ரேவதி சண்முகம் அவர்கள் வெண்டைக்காய் தக்காளி கொண்டு எளிமையான ஒரு கறியை தொலை காட்சியில் செய்து காட்டினார். அதை பின்  பற்றி இந்த கறியை செய்துள்ளேன். சில பொருட்களை என் ருசிக்கேற்றவாறு கூட்டி குறைத்துள்ளேன்.
இனி செய்முறை.

வெண்டைக்காய் தக்காளி கறி


தேவையான பொருட்கள் ;


3                                            தக்காளி
12 - 15                                   வெண்டைக்காய்
1                                             வெங்காயம், நறுக்கிக்கொள்ளவும்.
1                                             பச்சை மிளகாய், நீளவாக்கில் கீறிக்கொள்ளவும்
12 பற்கள்                            பூண்டு
15                                           கறுவேப்பிலை
1/2 Tsp                                    சீரகம்
1/2 Tsp                                    சிகப்பு மிளகாய் தூள்
1/4 Tsp                                    பெருங்காய தூள்
1 Tsp                                      எலுமிச்சை சாறு
4 Tsp                                       நல்லெண்ணெய்

1 கப் எண்ணெய் வெண்டைக்காயை பொரிப்பதற்கு

செய்முறை :
வெண்டைக்காயை ஒரு அங்குல நீள துண்டுகளாக நறுக்கி வெய்யிலில் 1/2 மணி நேரம் காய வைக்கவும்.

ஒரு தக்காளியை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
மற்ற இரண்டையும் மிக்ஸில் அரைத்து சாறு எடுத்து தனியே வைக்கவும்.

அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடேறியதும் சீரகத்தை தாளித்து மிளகாய் தூளை எண்ணெயில் சேர்த்தவுடன் பச்சை மிளகாய், பூண்டு  அடுத்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வாசனை வரும்வரை நன்கு வதக்கிய பின்னர் தக்காளி துண்டுகளை மிருதுவாகும் வரை வதக்கவும்.
பின்னர் தக்காளி சாறை சேர்த்து உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்திருக்கவும்.


அவ்வப்போது கிளறிக் கொண்டே இருக்கவும்.

மற்றொரு அடுப்பில் எண்ணையை சூடாக்கி வெண்டைக்காயை போடவும்.
முதலில் மிகுந்த சத்தத்துடன் பொறியும்.


பிறகு அடங்கி விடும்.


நன்கு பொரிவது அடங்கிய பின்னர் எடுத்து தயாராகிக் கொண்டிருக்கும் தக்காளி மசாலாவுடன்  சேர்க்கவும்.

வெண்டைக்காய் தக்காளி கறி

கருவேப்பிலையை கிள்ளி போட்டு, உப்பு சரி பார்த்து 3 நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும்.
நன்கு ஒன்று சேர்ந்தாற்போல வந்தவுடன், மேலும் ஊற்றிய எண்ணெய்  பளபளப்பாக தெரியும் போது அடுப்பை அணைத்து விடவும்.
எலுமிச்சை சாறை சேர்த்து கிளறி விடவும்.

வெண்டைக்காய் தக்காளி கறி

 பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

வெண்டைக்காய் தக்காளி கறி

பூரியுடன் சப்பாத்தியுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட அருமையான கறியாகும்.

மற்ற கறி வகைகள் செய்து பார்க்க

பஜ்ஜி மிளகாய் கிரேவி காலிப்ளவர் காளான் மிளகு கிரேவி பன்னீர் மசாலா கிரேவி








Monday, April 14, 2014

Capsicum Kuruma

#குடைமிளகாய்குருமா : பொதுவாக #குடைமிளகாய் ரவா உப்புமா, பொரியல், பிரியாணி போன்ற உணவு வகைகளை செய்யும் போது மற்ற காய்கறிகளுடன் சேர்த்து உபயோகப் படுத்துவேன். இந்த முறை குடை மிளகாயையும் காளானையும் சேர்த்து குருமா போல செய்து பார்த்தேன். மிக அருமையாக இருந்தது. அதனை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

குடைமிளகாய் குருமா


தேவையான பொருட்கள் :
 1                                               குடை மிளகாய், துண்டுகளாகவும்
1                                               வெங்காயம், துண்டுகளாக்கவும்.
1 Tbsp                                        காரட் துண்டுகள்
4 அ 5                                        காளான், கழுவி துண்டுகளாக்கவும்.
1/2 Tsp                                       சீரகம்
3/4 Tsp                                       உப்பு
1 Tsp                                          எண்ணெய்
சிறிது                                       கொத்தமல்லி தழை அலங்கரிக்க

மசாலா அரைப்பதற்கு :
2 Tbsp                                      தேங்காய் துருவல்
2                                              பச்சை மிளகாய் [ தேவைக்கேற்ப ]
1 Tsp                                        சீரகம்
1 1/2 Tsp                                  கசகசா
3                                              முந்திரி பருப்பு
3 பற்கள்                                 பூண்டு
1                                               வெங்காயம், துண்டுகளாக்கவும்
1 Tsp                                        மிளகு [ விருப்பப்பட்டால் ]

செய்முறை :
மசாலாவை மிக்சியில் மைய அரைத்து எடுத்து வைக்கவும்.


அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
சீரகம் வெடிக்க விட்டு வெங்காயத்தை வதக்கவும்.
பிறகு காரட் துண்டுகளை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

காளான் துண்டுகளை சேர்த்து சில மணி துளிகள் வதக்கிய பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும்.
1/2 கப் தண்ணீர் விட்டு மிக்ஸியை கழுவி அந்த தண்ணீரையும் கொதித்து கொண்டிருக்கும் குருமாவில் சேர்க்கவும்.
தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

குடைமிளகாய் குருமா

எல்லாம் ஒன்று சேர்ந்தார் போல வந்ததும் இறக்கி பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்.

குடைமிளகாய் குருமா

பூரி, சப்பாத்தி, தோசை, இட்லி ஆகியவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

மேலும் சில குருமா வகைகள் முயற்சி செய்து பார்க்க

அவியல் கடப்பா காலிப்ளவர் தக்காளி குருமா




Saturday, April 12, 2014

Beans Thuvatal Paruppudan

பீன்ஸ் துவட்டல் / பொரியல் பருப்புடன் : பீன்ஸ், அவரைக்காய், பயத்தங்காய் ( காராமணி ), கொத்தவரங்காய் போன்ற சில காய்கறிகளை பச்சை நிறம் மாறாமல் வேகவைத்து துவட்டல் செய்தால் சுவையும் மணமும் அருமையாக இருக்கும். இந்த காய்கறிகளை  கொண்டு பொரியல் செய்வது மிக மிக எளிதும் ஆகும். இங்கு பீன்சுடன் ஊறவைத்த பருப்பையும் சேர்த்து செய்யும் போது இன்னும் கூடுதல் சுவை கிட்டும். மேலும் பொரியலின் சத்தும் அதிகரிக்கப்படுகிறது. இனி எப்படி என காண்போம்.

பீன்ஸ் துவட்டல் பருப்புடன்


தேவையான பொருட்கள் :
1/4 கிலோ                                 பீன்ஸ்
1 Tbsp                                          தேங்காய் துருவல்
1/2 Tsp ( அட்ஜஸ்ட் )              சாம்பார் பொடி
1 சிட்டிகை                               மஞ்சத்தூள்
1/4 Tsp                                          உப்பு
2 Tbsp                                          பயத்தம் பருப்பு 10 நிமிடம் ஊறவைக்கவும்.

தாளிக்க :
1/2 Tsp                                        கடுகு
1 Tsp                                           உளுத்தம்பருப்பு
1                                                  சிகப்பு மிளகாய்
1/2 Tsp                                        எண்ணெய்

செய்முறை :
அடியும் நுனியும் வெட்டி எடுத்து விடவும்.


பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.



குக்கரை அடுப்பில் வைத்து 1/2 கப் தண்ணீர் விடவும்.

அதில் சாம்பார் தூள், மஞ்சத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
வெட்டி வைத்த காயை சேர்க்கவும்.
 மூடி வெயிட் வைத்து 1 விசில் வரை வேக விடவும்.

விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

குக்கரிலிருந்து நீராவியை உடனடியாக வெளியேற்றவும்.
காயை  எடுத்து தனியாக வைக்கவும்.

 வெந்த தண்ணீரை கீழே கொட்டி விடாதீர்கள்.
அதை சாம்பாருடன் சேர்க்கலாம்.

 அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகை வெடிக்க விடவும். பிறகு சிகப்பு மிளகாயை கிள்ளி போட்டு உளுத்தம் பருப்பை சிவக்கும் வரை வறுக்கவும்.
பருப்பு சிவந்ததும் தண்ணீரை வடித்து விட்டு ஊற வைத்துள்ள பயத்தம் பருப்பை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
இப்போது வேக வைத்த காயை சேர்க்கவும். உப்பு சரி பார்க்கவும்.
அதிக தீயில் வைத்து கிளறி விடவும்.
தேங்காய் துருவலை சேர்க்கவும்.


தண்ணீர் சுண்டும் வரை கலந்து விடவும்.
ஏற்கனவே காய் வெந்து விட்டதால் மிகுந்த நேரம் கிளறிக் கொண்டே இருக்கக் கூடாது.
பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றவும்.

பீன்ஸ் துவட்டல் பருப்புடன்
சாம்பார் மற்றும் ரசம் சாதத்திற்கு ஏற்ற துவட்டல் ஆகும்.






Thursday, March 6, 2014

Sigappu Keerai Masiyal

#சிகப்புகீரைமசியல் : நான் தற்போது வசிக்கும் ராய்ப்பூரில் #சிகப்புமுளைகீரை  மிகவும் பிரசித்தம். மிகுந்து சுவையானதும் கூட!! இந்த கீரையை கொண்டு செய்யப்படும் மசியல் மிக்க ருசியுடையது. பொதுவாக கீரையை வேகவைத்து பூண்டு உப்பு சேர்த்து மசிப்பதுதான் வழக்கம். இது சாதத்தில் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும். இம்முறை கீரை அதிகமாக இருந்ததால் காலை இட்லியுடன் தொட்டு கொண்டு சாப்பிட கீழ்கண்ட முறையை பின்ப்பற்றி செய்தேன். மிக அருமையாக இருந்தது.

சிகப்பு கீரை மசியல்

தேவையான பொருட்கள் :

1 கப்                                      சிகப்பு முளை கீரை, கழுவி பொடியாக அரிந்தது
12                                            சின்ன வெங்காயம், ஒன்றிரண்டாக அரியவும்
2 மத்திய அளவு                தக்காளி நாட்டு வகை, இரண்டாக வெட்டியது.
1 அ 2                                     சிகப்பு மிளகாய்
1/2 கப்                                   துவரம் பருப்பு வேக வைத்தது
1 Tsp                                      உப்பு [ அட்ஜஸ்ட் ]
3 Tsp                                      மணத்தக்காளி [ இருந்தால் ]

தாளிக்க :
1/2 Tsp                                   கடுகு
1 Tsp                                      உளுத்தம் பருப்பு
1 அ 2                                    சிகப்பு மிளகாய், உடைத்துக் கொள்ளவும்
2 சிட்டிகை                        பெருங்காய தூள்
1 tsp                                       எண்ணெய்

செய்முறை :
கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும் குக்கரில் எடுத்துக்கொள்ளவும்.
1/2 கப் தண்ணீர் சேர்த்து அதிக தீயில் வைத்து மூடி போட்டு வெயிட்டை பொருத்தவும்.
ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
உடனடியாக ஆவியை வெளியேற்றி விடவும்.
சிறிது சூடு ஆரிய பின் மத்து அல்லது உருளை கிழங்கு மசிக்கும் கரண்டி கொண்டு நன்கு மசித்து விடவும்.
பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகை வெடிக்க விட்டு சிகப்பு மிளகாயை கிள்ளி  போட்டு உளுத்தம் பருப்பை சேர்த்து வறுக்கவும்.
சிவந்ததும் பெருங்காய பொடி சேர்த்து மசியலின் மேல் ஊற்றவும்.

இதுதான் முதல் முறையாக கீரை மசியலை இட்லிக்கு தொட்டுக்கொள்ள செய்தேன். மிக மிக அருமையாக இருந்தது. நீங்களும் செய்து சுவைக்கவும்.


சிகப்பு கீரை கிடைக்கவில்லையெனில் பாலக் கீரை அல்லது முளை கீரையை பயன்படுத்தியும் செய்யலாம்.






சில சமையல் வகைகள் சமைத்து ருசிக்க


பாலக் மசியல்
பாலக் கீரை மசியல்
அரைக்கீரை மசியல்
அரைக்கீரை மசியல்
பால் சாறு ( அ ) கழனி சாறு
பால் சாறு
முள்ளங்கி கீரை பொரியல்
முள்ளங்கிகீரை ..
முடக்கத்தான் கீரை தோசை
முடக்கத்தான் தோசை

Monday, February 24, 2014

Paneer Masala Curry

#பன்னீர்மசாலாகறி : எல்லா வகையான இரவு விருந்துகளிலும் இங்கு நான் வசிக்கும் ராய்ப்பூரில் கட்டாயமாக இந்த கறி இடம் பெற்றிருக்கும். ஆனால் எனக்கு இங்கு செய்யப்படும் #பன்னீர் மசாலா கறியின் சுவை சாப்பிட்டு சாப்பிட்டு அலுத்து விட்டது. அதனால் என்னுடைய முறைப்படி செய்தேன்.
மிக மிக அருமையாக இருந்தது. அதனை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

பன்னீர் மசாலா கறி

தேவையான பொருட்கள் :
150 gm                                      பன்னீர், ஒரே மாதிரி சிறிய சதுரங்களாக வெட்டவும்
1 பெரிய அளவு                     வெங்காயம், பொடியாக அரியவும்
3 நடுத்தர அளவு                   தக்காளி, பொடியாக அரியவும்
10                                             கருவேப்பிலை
1/4 கப்                                      கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது.

அரைக்க :
3  Tsp                                       தேங்காய் துருவல்
1/2 TSp                                    கசகசா
3                                              முந்திரி பருப்பு
1 Tsp                                        சீரகம்
2 பற்கள்                                  பூண்டு [ பிடிக்குமானால் ]

 தாளிக்க :
1/2 Tsp                                     சீரகம்
3 Tsp                                        எண்ணெய்

சேர்க்க வேண்டிய பொடிகள் :
1 Tsp                                       மிளகாய் தூள்
1/2 Tsp                                    சீரகத்தூள்
2 சிட்டிகை                            மஞ்சத்தூள்

செய்முறை :
அரைக்க வேண்டிய பொருட்களை மிக்சியில் நன்கு மைய அரைத்து தனியே எடுத்து வைக்கவும்.
சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸி பாத்திரத்தில் ஒட்டிக் கொண்டிருப்பவற்றையும் கழுவி அரைத்து வைத்துள்ள மசாலாவுடன் சேர்க்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடான பின் சீரகத்தை வெடிக்கவிட்டு மிளகாய்த்தூள் சேர்த்தவுடனேயே கொத்தமல்லி தழை சிறிது மற்றும் கருவேப்பிலையை சேர்க்கவும்.
அரை நிமிடம் வதக்கியபின் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின்னேர் தக்காளியை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
இப்போது மஞ்சத்தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.


பச்சை வாசனை போனபின் பன்னீர் துண்டுகளை சேர்த்து உப்பு போட்டு 1 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.


2 நிமிடம் கொதித்த பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும்.
சிறிய தீயில் சேர்ந்து வரும் வரை கொதிக்க விடவும்.


கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும்.
பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

பன்னீர் மசாலா கறி

பூரியுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட ஏற்ற கறியாகும்.
சப்பாத்தியுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.



மற்ற குருமா வகைகள் செய்து பார்க்க
காலிப்ளவர் தக்காளி குருமா காலிப்ளவர் காளான் மிளகு கிரேவி பஜ்ஜி மிளகாய் கிரேவி