Search This Blog

Showing posts with label thuvatal. Show all posts
Showing posts with label thuvatal. Show all posts

Sunday, April 13, 2014

Knolkhol Poriyal

நூல்கோல் பொரியல் : காரட், பீட்ரூட் போலவே நூல்கோலை கொண்டும் பொரியல் செய்தால் மிக சுவையாக இருக்கும். செய்வதும் மிக எளிது. எப்படி என பார்க்கலாம்.

நூல்கோல் பொரியல்


தேவையான பொருட்கள் :

நூல்கோல் 
நூல்கோல் துருவியது                             : 1 கப்
காரட் துருவியது                                      : 1 Tsp [ இருந்தால் ]
வெங்காயம் அரிந்தது                             : 3 Tsp
கொத்தமல்லி பொடியாக நறுக்கியது   : 1/4 கப்
தேங்காய் துருவியது                               : 3 Tsp



தாளிக்க :
கடுகு                                                          : 1/2 Tsp
உளுத்தம் பருப்பு                                   : 1 Tsp
சிகப்பு மிளகாய் [ வற்றல் ]                  : 1 அ 2 துண்டுகளாக்கிக் கொள்ளவும்
எண்ணெய்                                               : 1/2 Tsp

செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும்.
எண்ணெய சூடானதும் கடுகு வெடிக்க விடவும்.
பின்னர் சிகப்பு மிளகாய் மற்றும் உளுத்தம் பருப்பை சிவக்க வறுக்கவும்.
இப்போது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிறிது நிறம் மாறியதுமே நூல்கோல் துருவல், காரட் துருவல் இரண்டையும் சேர்க்கவும்.
உப்பையும் சேர்த்து வேகும் வரை மூடி வைக்கவும்.
வெந்தவுடன் மூடியை எடுத்து விட்டு தேங்காய் துருவலை சேர்த்து சில மணி துளிகள் கிளறவும்.
ஒரு கிண்ணத்தில் எடுத்து கொத்தமல்லி தழையினால் அலங்கரிக்கவும்.

நூல்கோல் பொரியல்

இந்த பொரியலும் மற்றவற்றை போல சாம்பார் சாதம் மற்றும் ரசம் சாதத்துடன் சுவைக்க அருமையாக இருக்கும்.

Saturday, April 12, 2014

Beans Thuvatal Paruppudan

பீன்ஸ் துவட்டல் / பொரியல் பருப்புடன் : பீன்ஸ், அவரைக்காய், பயத்தங்காய் ( காராமணி ), கொத்தவரங்காய் போன்ற சில காய்கறிகளை பச்சை நிறம் மாறாமல் வேகவைத்து துவட்டல் செய்தால் சுவையும் மணமும் அருமையாக இருக்கும். இந்த காய்கறிகளை  கொண்டு பொரியல் செய்வது மிக மிக எளிதும் ஆகும். இங்கு பீன்சுடன் ஊறவைத்த பருப்பையும் சேர்த்து செய்யும் போது இன்னும் கூடுதல் சுவை கிட்டும். மேலும் பொரியலின் சத்தும் அதிகரிக்கப்படுகிறது. இனி எப்படி என காண்போம்.

பீன்ஸ் துவட்டல் பருப்புடன்


தேவையான பொருட்கள் :
1/4 கிலோ                                 பீன்ஸ்
1 Tbsp                                          தேங்காய் துருவல்
1/2 Tsp ( அட்ஜஸ்ட் )              சாம்பார் பொடி
1 சிட்டிகை                               மஞ்சத்தூள்
1/4 Tsp                                          உப்பு
2 Tbsp                                          பயத்தம் பருப்பு 10 நிமிடம் ஊறவைக்கவும்.

தாளிக்க :
1/2 Tsp                                        கடுகு
1 Tsp                                           உளுத்தம்பருப்பு
1                                                  சிகப்பு மிளகாய்
1/2 Tsp                                        எண்ணெய்

செய்முறை :
அடியும் நுனியும் வெட்டி எடுத்து விடவும்.


பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.



குக்கரை அடுப்பில் வைத்து 1/2 கப் தண்ணீர் விடவும்.

அதில் சாம்பார் தூள், மஞ்சத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
வெட்டி வைத்த காயை சேர்க்கவும்.
 மூடி வெயிட் வைத்து 1 விசில் வரை வேக விடவும்.

விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

குக்கரிலிருந்து நீராவியை உடனடியாக வெளியேற்றவும்.
காயை  எடுத்து தனியாக வைக்கவும்.

 வெந்த தண்ணீரை கீழே கொட்டி விடாதீர்கள்.
அதை சாம்பாருடன் சேர்க்கலாம்.

 அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகை வெடிக்க விடவும். பிறகு சிகப்பு மிளகாயை கிள்ளி போட்டு உளுத்தம் பருப்பை சிவக்கும் வரை வறுக்கவும்.
பருப்பு சிவந்ததும் தண்ணீரை வடித்து விட்டு ஊற வைத்துள்ள பயத்தம் பருப்பை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
இப்போது வேக வைத்த காயை சேர்க்கவும். உப்பு சரி பார்க்கவும்.
அதிக தீயில் வைத்து கிளறி விடவும்.
தேங்காய் துருவலை சேர்க்கவும்.


தண்ணீர் சுண்டும் வரை கலந்து விடவும்.
ஏற்கனவே காய் வெந்து விட்டதால் மிகுந்த நேரம் கிளறிக் கொண்டே இருக்கக் கூடாது.
பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றவும்.

பீன்ஸ் துவட்டல் பருப்புடன்
சாம்பார் மற்றும் ரசம் சாதத்திற்கு ஏற்ற துவட்டல் ஆகும்.






Friday, March 14, 2014

Vazhai Thandu Poriyal

வாழைத்தண்டு பொரியல் : வாழை மரத்தின் அனைத்து பொருட்களுமே உபயோகமானதாகும். தண்டு நார் சத்து மிகுந்தது. மேலும் அதிக நீர் சத்து உடையதாகவும் இருக்கிறது. சிறுநீரக கல்லை கரைக்கும் சக்தி கொண்டதாகும். அவ்வப்போது இதனை சமையலில் சேர்த்துக் கொள்வது நலமாகும்.
மிக மிக எளிதான பொரியல்! ஆனால் சுவையோ மிக மிக அருமை!!! இனி எப்படி என பார்க்கலாம்.

வாழைத்தண்டு பொரியல்

தேவையான பொருட்கள் :
20 cm நீளமான                         வாழை தண்டு
1 சிறிய அளவு                         வெங்காயம், பொடியாக நறுக்கவும்
1 அ 2                                            சிவப்பு மிளகாய், உடைத்து வைக்கவும்
2 சிட்டிகை                                மஞ்சத்தூள்
6                                                    கருவேப்பிலை
2 Tbsp                                            கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது
1/2 Tsp                                           கடுகு
1 Tsp                                              உளுத்தம் பருப்பு
1 Tsp                                             எண்ணெய்
1 Tbsp                                           தேங்காய் துருவல்

செய்முறை :
மேலே தண்டை மூடியிருக்கும் தோலை அகற்றவும்.

வாழைத்தண்டு

குறுக்காக வட்ட வட்டமாக நறுக்கி நாரை நீக்கவும்.


பிறகு ஒரே மாதிரி அளவுடன் கூடிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.


அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகை வெடிக்க விடவும். பின்னர் மிளகாய் துண்டுகளையும் உளுத்தம் பருப்பையும் சேர்க்கவும்.
அடுத்து மஞ்சத்தூள், கருவேப்பிலை, கொத்தமல்லி சிறிது மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.


உப்பு மற்றும் அரிந்து வைத்துள்ள காயை சேர்த்து கிளறி மூடியிட்டு வேகவைக்கவும்.


எளிதில் வேகக் கூடியதாகையால் மிகுந்த நேரம் எடுக்காது.
வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து பிரட்டி பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.


கொத்தமல்லி தழையால் அலங்கரிக்கவும்.

வாழைத்தண்டு பொரியல்

சாம்பார் மற்றும் ரசம் சாதத்துடன் தொட்டுக் கொண்டு சாப்பிட ஏற்ற பொரியலாகும்.









Thursday, March 6, 2014

Yellow Pumpkin Stir Fry

பரங்கிக்காய் பொரியல் : பரங்கிக்காயை மஞ்சை பூசணி என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த காய் நீர் சத்து அதிகம் உள்ள காயாகும். அதனால் பொரியல் செய்து முன்பே வைத்தால் நீர் விட்டு சொத சொதவென ஆகிவிடும்.
அதனால் சூடாக செய்த உடனேயே சாப்பிட்டால் நல்ல சுவையுடன் இருக்கும்.
இனி எவ்வாறு செய்யலாம் என காணலாம்.

பரங்கிக்காய் பொரியல்

தேவையான பொருட்கள் :
1 1/2 கப்                                 பரங்கிக்காய் துண்டுகள்
1                                            வெங்காயம், பொடியாக அரியவும்.
1 அ 2                                    சிகப்பு மிளகாய்
1 Tsp                                      பச்சை பட்டாணி
1/2 tsp                                    கடுகு
1 Tsp                                      உளுத்தம் பருப்பு
2 Tsp                                      தேங்காய் துருவல்
8                                             கறுவேப்பிலை
சிறிது                                   கொத்தமல்லி தழை
1 Tsp                                      எண்ணெய்


செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து 1 Tsp எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடேறியதும் கடுகை வெடிக்க விடவும்.
அதன் பிறகு உளுத்தம் பருப்பு மற்றும் சிகப்பு மிளகாயை உடைத்து சேர்க்கவும்.
பருப்பு சிவந்தவுடன் கருவேப்பிலை மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
இப்போது பச்சை பட்டாணி மற்றும் பரங்கிக்காய் துண்டுகளை சேர்த்து சில மணி துளிகள் வதக்கவும்.
பிறகு உப்பு சேர்த்து கிளறி மூடி போட்டு காயை வேக விடவும்.
காய் மிக எளிதில் சீக்கிரமே வெந்து விடும்.
நடுவில் மூடியை திறந்து ஒரு முறை கிளறி விடவும்.
வெந்தவுடன் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.



பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்.

பரங்கிக்காய் பொரியல்

மதிய உணவின் போது சாம்பார் மற்றும் ரசம் சாதத்திற்கு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும். 



மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க
முட்டைகோஸ் சட்னி
முட்டைகோஸ் சட்னி
பலாமுசு மசாலா கறி
பலாமுசு கறி
கோவைக்காய் கார கறி
கோவைக்காய் கறி
மிளகு குழம்பு
மிளகு குழம்பு
வெந்தய குழம்பு
வெந்தய குழம்பு


இந்த சமையல் குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருப்பின் மற்றவர்களும் பயனடையும் விதமாக கீழே உள்ள பெட்டியின் வாயிலாக முகநூல், கூகுள்  மற்றும் சில சமூக வலைதளங்களில் பகிரவும்.
இங்கு தங்கள் கருத்தையும் பதிவிடவும். நன்றி.

Friday, February 21, 2014

Cabbage Poriyal

#முட்டைகோஸ்பொரியல் : இந்த பொரியல் செய்வது மிக மிக எளிது. ஆனால் சுவையோ அபாரமாக இருக்கும்.
முட்டைகோஸை கீரை வகைகளிலேயே சேர்ப்பது நலம். ஏனெனில் நாம் உண்ணும் முட்டைகோஸ் கொழுந்து இலைகளின் கெட்டியான உருண்டையாகும்.
இதனை உபயோகித்து சாலட், பொரியல், கூட்டு போன்ற பதார்த்தங்கள் செய்யலாம்.
மேலும் முட்டைகோஸை பற்றி அறிய
http://en.wikipedia.org/wiki/Cabbage

இப்போது முட்டைகோஸை உபயோகித்து பொரியல் எப்படி செய்யலாம் என பார்ப்போம். மூன்று பேருக்கு மதிய உணவில் தொட்டுக்கொள்ள சரியாக இருக்கும்.



தேவையான பொருட்கள் :
1 1/2 கப்                                    முட்டைகோஸ் பொடியாக அரிந்தது
1 சிட்டிகை                               மஞ்சத்தூள்
1/4 Tsp                                        மிளகாய் தூள்
1/2 Tsp                                         உப்பு
1 அ 2                                         பச்சை மிளகாய், பொடியாக அரியவும்
1 சிறிய அளவு                        வெங்காயம், பொடியாக அரியவும்
8                                                கருவேப்பிலை
6                                                பசலை கீரை , பொடியாக நறுக்கவும்
சிறிது                                       கொத்தமல்லி தழை
1 Tbsp                                        தேங்காய் துருவல்

தாளிக்க :
1/2 Tsp                                       கடுகு
1 Tsp                                          உளுத்தம் பருப்பு
1/2 Tsp                                       எண்ணெய்

செய்முறை :
குக்கரில் 1/2 கப் தண்ணீர் எடுத்துகொள்ளவும்.
அதில் மஞ்சத்தூள், மிளகாத்தூள், உப்பு சேர்த்து கலக்கவும்.
அதில் அரிந்து வைத்துள்ள முட்டைகோஸை சேர்த்து மூடி வெயிட் பொருத்தி ஒரு விசில் வரும்வரை அதிக தீயில் வேக விடவும்.
உடனேயே ஆவியை வெளியேற்றி வேகவைத்த தண்ணீரை வடிகட்டி தனியே எடுத்து வைக்கவும்.


அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
சூடானதும் கடுகை வெடிக்க விட்டு உளுத்தம் பருப்பை சேர்க்கவும்.
பருப்பு சிவந்ததும் பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
பிறகு வெங்காயம் சேர்த்து 1 நிமிடம் வதக்கி வேகவைத்த முட்டைகோஸை சேர்க்கவும்.


அதிக தீயில் கைவிடாமல் கிளறவும்.
அதிகப்படியான நீர் வற்றியதும் பசலை கீரை மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து 1/2 நிமிடம் பிரட்டி பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.


கொத்தமல்லி தழையால் அலங்கரிக்கவும்.





Wednesday, January 29, 2014

Palamusu Masala Curry

#பலாமுசுமசாலாகறி : பிஞ்சு பலாக்காயை #பலாமுசு என்று கூறப்படுகிறது. இதை சமைத்தால் சுவை அருமையாக இருக்கும். ஆனால் மேல் தோலை நீக்குவதுதான் தொல்லை தரும் வேலை. ஆனால் இங்கு ராய்ப்பூரில் மார்க்கட்டில் தோல் நீக்கி துண்டுகளாக்கி கொடுத்து விடுகிறார்கள். அதனால் பலாமுசு மசாலா கறியை அடிக்கடி செய்ய முடிகிறது. இனி எப்படி செய்வது என பார்ப்போம்.

பலாமுசு மசாலாகறி




தேவையான பொருட்கள் :


பலாமுசு


1 கப்                                        பலா முசு அரிந்தது
1 Tbsp                                         பச்சை பட்டாணி

மசாலா அரைக்க :



2 Tbsp                                       தேங்காய் துருவல்
2                                               பச்சை மிளகாய்
1 Tsp                                         சீரகம்
1 Tsp                                         சோம்பு
1/4 Tsp                                    பச்சை மல்லி விதை [ இருந்தால் ]
[ அ ] 1/4 Tsp                           மல்லி விதை
3 பற்கள்                               பூண்டு
1 சிறிய அளவு                  வெங்காயம்
2 சிட்டிகை                          உப்பு
கொத்தமல்லி தழை மற்றும் கருவேப்பிலை விருப்பமான அளவு.

தாளிக்க :
1/2 Tsp                                    கடுகு
1 Tsp                                       உளுத்தம் பருப்பு
1 Tsp                                      எண்ணெய்

அலங்கரிக்க :
கொத்தமல்லி தழை சிறிதளவு.

செய்முறை :
குக்கரில் கழுவிய பலாமுசு துண்டுகளை 1/2 கப் தண்ணீரில் 1 சிட்டிகை மஞ்சத்தூள் மற்றும் 1/2 Tsp உப்புடன் 1 விசில் வரும் வரை வேக விடவும்.
உடனே ஆவியை அடக்கி வெந்த காயை வெளியே எடுத்து ஆற வைக்கவும்.


பிறகு மிக்சியில் ஓரிரண்டு சுற்றுகள் சுற்றி எடுத்து தனியே வைக்கவும்.


அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும். சூடானதும் கடுகை வெடிக்க விட்டு பின் உளுத்தம் பருப்பை சேர்த்து வறுக்கவும்.
இப்போது அரைத்து வைத்துள்ள காயையும் பட்டணியையும் சேர்த்து வதக்கவும்.


இப்போது மிக்சியில் வெங்காயம் நீங்கலாக மற்ற அனைத்தையும் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் முதலில் அரைக்கவும்.
பின் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

கடைசியாக வெங்காயம் சேர்த்து ஓரிரு சுற்று சுற்றி வெங்காயம் திப்பிதிப்பியாக இருக்குமாறு அரைத்துக் கொள்ளவும்.


அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும்.
நன்கு சாரணியால் கிளறி விடவும்.


பச்சை வாசனை போகும் வரையும், முழுவதுமாக  தண்ணீர் சுண்டும் வரையிலும் அவ்வப்போது கிளறி விட வேண்டும்.

எல்லாம் ஒன்று சேர்ந்து தயார் ஆவதற்கு கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் ஆகலாம்.

பின்பு ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து கொத்தமல்லி தழையால் அலங்கரிக்கவும்.


சுவையான பலா முசு மசாலா கறி தயார்.

  • மசாலா அரைக்கும் போது தண்ணீர் சிறிதளவே சேர்த்து அரைக்க வேண்டும். இல்லையெனில் தண்ணீர் சுண்டுவதற்காக மிகுந்த நேரம் அடுப்பில் வதக்க வேண்டி இருக்கும். மிகுந்த நேரம் கிளறினால் சுவையும் மாறுபடும். 








மேலும் சில அருமையான சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க
காலிப்ளவர் உருளை மசாலா கறி
காலிப்ளவர் உருளை மசாலா கறி
காலிப்ளவர் கொண்டைக்கடலை மசாலா கறி
காலிப்ளவர்கொண்டை .. மசாலா கறி
 சேப்பங்கிழங்கு மசாலா கறி
சேப்பங்கிழங்கு மசாலா கறி
பலாமுசு மசாலா கறி
பலாமுசு
மசாலா கறி
கொள்ளு சுண்டல்
கொள்ளு
சுண்டல்

Tuesday, December 24, 2013

Beetroot Thuvatal

பீட்ரூட் பொரியலை  சாதாரணமாக காரட் துருவியில் பீட்ரூட்டை துருவி பின் பொரியலில் உபயோகப் படுத்துவோம். ஆனால் இங்கு பீட்ரூட்டை முதலில் வேக வைத்து பின் துருவியொ அல்லது  சின்ன சின்ன துண்டுகளாக வெட்டியோ பொரியல் செய்ய உபயோகப்  படுத்தப் படுகிறது. இவ்வாறு செய்யும் போது சுவை சிறிது மாறுபடுகிறது. ஆனால் நன்றாக இருக்கும். இனி  எப்படி செய்வது என பார்க்கலாம்.

பீட்ரூட் பொரியல்

தேவையான பொருட்கள் :
1                                             பீட்ரூட் ( நடுத்தர அளவு )
1                                             பெரிய வெங்காயம் ( சிறியது )
1                                             பச்சை மிளகாய்
1/2 Tsp                                   சாம்பார் மிளகாய் தூள்
1/2 Tsp                                   கடுகு
1 Tsp                                      உளுத்தம் பருப்பு
1 Tsp                                      எண்ணெய்
2 Tsp                                      தேங்காய் துருவல்
கொத்தமல்லி தழை அலங்கரிக்க

செய்முறை :
 குக்கரை எடுத்து 1 கப் தண்ணீர் சேர்க்கவும்.
பீட்ரூட்டை நன்றாக மண் போக கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.

பீட்ரூட் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து மூன்று விசில் வரும்வரை வேக வைக்கவும்.


வெந்த பீட்ரூட்டை வெளியில் எடுத்து தோலை நீக்கவும்.


சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.


வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை சூடாக்கவும்.
சூடானதும் கடுகை வெடிக்க விட்டு பின் உளுத்தம் பருப்பை சேர்க்கவும்.

பருப்பு சிவந்தவுடன் பச்சை மிளகாயை நீள  வாக்கில் அரிந்து சேர்க்கவும்.
இலேசாக வதக்கிய பின் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பள பளப்பாக வதங்கியவுடன் சாம்பார் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி அறிந்து வைத்துள்ள பீட்ரூட்டை சேர்க்கவும்.

ஏற்கனவே பீட்ரூட்டை வேக வைத்துவிட்டதால் அதிக நேரம் அடுப்பில் கிளறிக்கொண்டிருக்க வேண்டாம்.
தேங்காய் துருவலை சேர்த்து சில வினாடிகள் கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
கொத்தமல்லி தழையினால் அலங்கரிக்கவும்.

சாம்பார் சாதம் மற்றும் ரசம் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.




மேலும் பீட்ரூட்டைக்  கொண்டு  தயாரிக்க :

காரட் பீட்ரூட் பொரியல் 
பீட்ரூட் பொரியல்