#தக்காளிஜாம் : #ஜாம் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது கடைகளில் கிடைக்கும் பாட்டிலில் அடைத்து விற்கப்படுபவையே! கடைகளில் பல பழங்கள் கொண்டு செய்யப்பட்ட #ஜாம், அன்னாசி ஜாம், மாம்பழ ஜாம் போன்ற சில வகைகளே கிடைக்கும். #தக்காளி மட்டும் உபயோகித்து செய்த ஜாம் வகை கிடைக்காது. தக்காளி ஜாம் வகையை நாம் வீட்டிலேயே மிகவும் எளிதாக செய்யலாம். சுவை மிகவும் அருமையாக இருக்கும்.
பெங்களூர் தக்காளியில் புளிப்பு சுவை குறைவாக இருக்கும். ஆனால் பழக்கூழ் அதிகமாக கிடைக்கும். நாட்டு தக்காளியில் புளிப்பு அதிகமாகவும், அரைத்தால் கிடைக்கும் பழக்கூழ் குறைவாகவும் இருக்கும். அதனால் உபயோகிக்கும் தக்காளியைப் பொறுத்து ஜாமின் சுவை மாறுபடும்.
இங்கு தக்காளியைக் கொண்டு சுவையான ஜாம் செய்யும் முறையை காணலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவு கொண்டு தோராயமாக 300 ml ஜாம் தயாரிக்கலாம்.
தேவையானவை : |
2 கப் | தக்காளி பழக்கூழ் |
1 1/4 கப் | சக்கரை |
2 சிட்டிகை | உப்பு |
செய்முறை :
ஜாமை எடுத்து வைக்க ஒரு கண்ணாடி பாட்டிலை கழுவி நீர் சிறிது கூட இல்லாமல் துடைத்து ஒரு மரப்பலகையில் மீது வைக்கவும்.
தக்காளி பழங்களை நன்கு கழுவிய பின்னர் நான்கு துண்டுகளாக்கவும்.
காம்பு பகுதியை நீக்கி விடவும்.
தேவையானால் விதைப் பகுதியை நீக்கிவிடவும்.
[ இங்கு விதையுடனே உபயோகப்படுத்தியுள்ளேன் ]
மிக்சியில் போட்டு அரைத்து பழக்கூழ் தயாரிக்கவும்.
அரைத்தெடுத்த பழக்கூழை அளந்து அடிகனமான பாத்திரத்தில் ஊற்றவும்.
சக்கரை மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயின் மீது வைத்து கலக்கவும்.
சக்கரை முழுவதும் கரைந்த பின்னர் தீயை குறைத்து அடுப்பில் காய்ச்சவும்.
அவ்வப்போது கரண்டியால் கலந்து விடவும்.
அடுப்பில் கொதிக்கும் கலவை சிறிது சிறிதாக கெட்டியாக ஆரம்பிக்கும்.
கரண்டியில் சிறிது எடுத்து பாத்திரத்தின் மேலே தூக்கிப் பிடிக்கும் பொது மளமளவென உடனே கரண்டியிலிருந்து கீழே வழிந்தால் இன்னும் அடுப்பில் இருக்க வேண்டும்.
சிறிது நேரம் கொதிக்க விட்டபின் மேலே சொன்னது போல மறுபடியும் கரண்டியில் எடுத்து பாத்திரத்தின் மேல் தூக்கி பிடிக்கவும்.
கரண்டியிலிருந்து ஜாம் கெட்டியாக சிறிது சிரமப்பட்டு ஒன்றாக கலவை கீழே விழுந்தால் ஜாம் தயார் என்று பொருள்.
அடுப்பை நிறுத்தி விட்டு மரப்பலகையின் மேல் வைத்துள்ள கண்ணாடி பாட்டிலில் நிரப்பவும்.
சூடு ஆறும் வரை காத்திருக்கவும்.
பின்பு மூடி பத்திரப்படுத்தவும்.
சாதாரணமாக ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை அறை வெப்பத்தில் கெட்டுப் போகாமல் இருக்கும்.
குளிர் சாதனப்பெட்டியில் ஒரு மாதம் வரை கூட வைத்து உபயோகிக்கலாம்.
எப்போதும் ஜாமை பாட்டிலிலிருந்து எடுத்து உபயோகிக்க ஈரமில்லாத தேக்கரண்டியையே உபயோகிக்க வேண்டும்.
தோசை மற்றும் சப்பாத்தி,
பூரி மற்றும் பிரட் ஆகியவற்றுடன் சுவைக்க அருமையாக இருக்கும்.
மேலும் சில சமையல் குறிப்புகள் :