Search This Blog

Showing posts with label சிற்றுண்டி. Show all posts
Showing posts with label சிற்றுண்டி. Show all posts

Wednesday, October 21, 2020

Other_Tiffins

 இங்கே மேலும் சில பலகாரங்களின்  செய்முறை இணைப்புகளை பகிர்ந்துள்ளேன்.



சோளம் குழி பணியாரம்
சோளம் குழி பணியாரம்
தினை குழி பணியாரம்
தினை குழி பணியாரம்
பசலைக்கீரை குழி பணியாரம்
பசலைக்கீரை குழி பணியாரம்
பசலைக்கீரை சோளம் வதக்கல்
பசலைக்கீரை சோளம் வதக்கல்
நூடுல்ஸ் தக்காளி சட்னியுடன்
நூடுல்ஸ் தக்காளி சட்னியுடன்
கேழ்வரகு இனிப்பு குழி பணியாரம்
கேழ்வரகு இனிப்பு குழி பணியாரம்



விதவிதமான சமையல் செய்முறைகள் 


Sunday, September 27, 2015

Beetroot Poori

#பீட்ரூட்பூரி : #பூரி மாவுடன் #பீட்ரூட் கலந்து கவர்ச்சியான சிகப்பு நிற பூரி இரு தினங்களுக்கு முன் செய்தேன். அதனை இங்கு பகிர்ந்து கொள்ள விருப்பம்.
சுமார் 12 முதல் 15 பூரிகள் தயாரிக்கலாம்.

பீட்ரூட் பூரி

மாவு செய்ய தேவையானவை  :
1 1/2 கப்கோதுமை மாவு
1/2 கப்மைதா
1/2 Tspநெய்
1/2 Tspஎண்ணெய்
1/4 cupபீட்ரூட் துண்டுகள்
1/2 Tspஉப்பு

பூரி பொரிக்க தேவையான எண்ணெய்
பூரி மாவு திரட்ட சப்பாத்தி பிரஸ்

செய்முறை :
குக்கரில் பீட்ரூட் துண்டுகளை போட்டு கால் கப் தண்ணீர் விட்டு மூடி ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.
விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு குக்கரை தண்ணீர் குழாயின் கீழே வைத்து தண்ணீரை திறந்து விடவும்.
ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து வெந்த பீட்ரூட்டை வேக வைத்த தண்ணீருடன் வேறொரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
ஆறிய பின்னர் மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுத்து வைக்கவும்.

இப்போது பூரி மாவு எவ்வாறு பிசைய வேண்டும் என காணலாம்.
  • ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மாவை எடுத்துக்கொள்ளவும்.
  • அதில் நெய்யையும் உப்பையும் சேர்க்கவும்.
  • கைகளால்  பிசறி விடவும்.
  • அடுத்து அரைத்த பீட்ரூட் விழுதை சேர்த்து பிசையவும்.
  • மாவு ஒன்றுசேர்ந்தாற்போல வந்தவுடன் 1 Tsp எண்ணெய் சேர்க்கவும்.
  • மறுபடியும் நன்கு பிசையவும்.
  • அழுத்தி பிசைய பிசைய மாவு நன்கு மிருதுவாக வரும்.
  • சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
இப்போது பூரிகளை இட சப்பாத்தி அமுக்கும் கருவியை உபயோகிக்கலாம்.
இல்லையென்றால் வட்ட வட்டமாக பூரி கட்டை கொண்டு இடவும்.

இங்கு சப்பாத்தி ப்ரஸில் எப்படி இடுவது என பார்க்கலாம்.


ப்ரெசின் உள்ளே அடி தட்டிலும் மேல் தட்டிலும் எண்ணெய் தடவிக் கொள்ளவும்.

அடி தட்டின் மேல் உருட்டி வைத்துள்ள மாவை வைத்து மேல் தட்டால் மூடி கைப்பிடியால் அழுத்தம் கொடுத்து வட்ட வடிவ பூரியை உருவாக்கவும்.
இவ்வாறு தட்டிய பூரி மிகவும் மெல்லியதாகவும் இருக்ககூடாது.
தடிமனாகவும் இருக்கக் கூடாது.
ஒரே சீராக 1/2 mm தடிமன் உடையதாக இருக்கலாம்.
  • எண்ணெய் நன்கு புகை வரும் அளவுக்கு சூடாக இருக்க வேண்டும்.
  • திரட்டிய பூரி மாவை எண்ணெய்யில் மெதுவாக விடவும்.
  • போட்ட உடனேயே பந்து போல உப்பி மேலெழுந்து வரும்.
  • சாரணியால் அடுத்த பக்கத்திற்கு திருப்பி விடவும்.
  • இரண்டு பக்கமும் பொரிந்ததும் எண்ணையை வடித்து வேறு தட்டில் எடுத்து வைக்கவும்.
  • இதே போல ஒவ்வொன்றாக பொரித்தெடுக்கவும்.
  • எண்ணெயின் சூட்டை தேவைக்கேற்றவாறு அவ்வப்போது தீயை கூட்டி குறைத்து கொள்ளவும்.
  • உருளை கிழங்கு மசாலா செய்து இதனுடன் தொட்டு கொண்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
உருளை கிழங்கு குருமா, காய்கறிகள் குருமா, தக்காளி சட்னி ஆகியவற்றுடனும் அருமையாக இருக்கும்.

பூரியை ஒரு குழியான தட்டில் வைத்து பாலை ஊற்றி ஊறவைத்து சர்க்கரையை மேலே தூவி சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும்.

இங்கு காராமணி கறியுடன் பூரி பரிமாறப்பட்டுள்ளது.
பீட்ரூட் பூரி பீட்ரூட் பூரி

பூரியுடன் ஜாம் மற்றும் வெல்லம்  ஆகியவற்றுடன் சாப்பிட்டால் இன்னும் சுவையோ சுவை!!
பள்ளிக்கு டிபன் பாக்ஸில் பூரியின் மேல் ஜாம் தடவி சுருட்டி வைத்து அனுப்பினால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

ஆனால் ஹோட்டல்களிலும் வீடுகளிலும் பூரி கிழங்குதான் மிகவும் பிரபலம்!!!....
ஆனால் பீட்ரூட் பூரி சிற்றுண்டி சாலையில் கிடைப்பது கடினம். நிறம் மட்டுமல்லாமல் சுவை மற்றும் இன்றியமையாத சத்துக்களும் நிரம்பியுள்ளது இந்த பீட்ரூட் பூரியில் ...  அதனால் வீட்டில் செய்துதான் பாருங்களேன்.




மற்ற பூரி வகைகள்
பூரி பூரி கிழங்கு கொடி பசலை பூரி



Thursday, April 2, 2015

Cholam-Idli

#சோளஇட்லி : #சோளம் #சிறுதானியம் வகைகளுள் ஒன்று. நான் சமீபத்தில் இட மாறுதல் ஆகி கர்நாடகத்தில் உள்ள ஹூப்ளி என்ற இடத்திற்கு குடி பெயர்ந்துள்ளேன். இங்கு வசிக்கும் மக்கள் #சோளமாவு கொண்டு தயாரிக்கப் படும் ரொட்டியை முக்கிய உணவாக கொண்டிருக்கிறார்கள். சோள ரொட்டியை இங்கு ஜோலத ரொட்டி என அழைக்கிறார்கள்.
சோளம் ஆங்கிலத்தில் Sorghum என்றும் ஹிந்தியில் Jowar என்றும் அழைக்கப்படுகிறது. கன்னட மொழியில் இதனை ஜோலா என அழைக்கிறார்கள்.
சோளமாவு கோதுமை போல பசைத் தன்மை இல்லாததால் ரொட்டி தட்டுவது மிகவும் சிரமம். மாவு பிசைந்த பின்னர் பலகையிலோ அல்லது சமையல் மேடையின் மீதோ உள்ளங்கைகளால் தட்ட வேண்டும். பலகையில் கோதுமை சப்பாத்தி திரட்டுவது போல திரட்ட முடியாது. கையின் அழுத்தத்தின் மூலமே வட்டவடிவமாக தட்ட வேண்டும். அதனால் தினமும் அருகில் வசிப்பவர்கள் வீட்டிலிருந்து டமடமவென்று சோளரொட்டி தட்டும் சத்தம் கேட்கும். என்னிடம் அவ்வாறு செய்ய தேவையான சக்தி இருப்பதாக தோன்றவில்லை. ஆகையால் வேறு வகையில் உபயோகிக்கலாம் என யோசித்தேன். சோளமாவை உபயோகித்து சோளதோசை அடிக்கடி செய்வது உண்டு. ஆனால் முழு சோளத்தை கொண்டு செய்தது இல்லை. அதனால் இட்லி செய்து பார்க்கலாம் என களத்தில் இறங்கினேன்.
இட்லி மாவு அரைப்பது போல ஊற வைத்து அரைத்து புளிக்க வைத்து இட்லி செய்த போது மிக அருமையாக இருந்தது. சுவையும் அபாரம்!! சொன்னால்தான் தெரியும் சோளம் கொண்டு செய்தது என்று!!....
இனி தேவையான பொருட்களையும் செய்முறையையும் காண்போம்.

கொடுக்கப்பட்டுள்ள அளவு கொண்டு சுமார் 30 இட்லிகள் தயாரிக்கலாம்.

சோள இட்லி

தேவையான பொருட்கள் :
1 cupஇட்லி அரிசி
1 cupசோளம்
1/2 cupஉளுத்தம் பருப்பு
1 Tspவெந்தயம்
2 Tspஉப்பு [ Adjust ]

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் அரிசியையும் சோளத்தையும் எடுத்துக்கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயம் எடுத்துக்கொள்ளவும்.
நன்கு இரண்டு மூன்று முறை கழுவிய பின்னர் தனித்தனியாக மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
மூன்று மணி நேரத்திற்குப் பிறகு மாவரைக்கும் இயந்திரத்தை சுத்தமாக தண்ணீர் விட்டு கழுவவும்.
முதலில் உளுந்தை அவ்வப்போது தண்ணீர் சிறுக சிறுகத் தெளித்து நன்கு உப்பி வரும்வரை அரைத்து எடுத்து ஒரு பெரிய பாத்திரத்தில் மாற்றி விடவும்.
உளுந்து மாவு சிறிதளவு எடுத்து தண்ணீரில் போட்டால் மேலே மிதக்கும்.
மேலும் மாவின் நிறமும் வெளுத்து வரும்.
அதுதான் சரியான பதம்.

பின்னர் அரிசி சோளம் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
அரைத்த அரிசி சோள மாவை எடுத்து பாத்திரத்திற்கு மாற்றும் முன்னர் உப்பு சேர்த்து ஓரிரண்டு சுற்றுக்கள் சுற்ற விடவும்.
மாவரைக்கும் இயந்திரத்தை அணைத்து விட்டு உளுந்து மாவு எடுத்து வைத்துள்ள பாத்திரத்தில் எடுக்கவும்.

மாவரைக்கும் இயந்திரத்தில் ஒரு Tbsp அளவு தண்ணீர் விட்டு ஒட்டியிருக்கும் மாவை கழுவி அரைத்து வைத்துள்ள மாவில் சேர்க்கவும்.
கையினால் நன்கு கலந்து எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்.
அதாவது முதல் நாள் மாலை மாவை அரைத்து வைத்தால் மறு நாள் இட்லி தயாரிக்கலாம்.


இட்லி பானையில் 3 கப் தண்ணீர் விட்டு சூடாக்கவும்.
இட்லி தட்டின் குழிகளில் ஒரு சொட்டு நல்லெண்ணெய் விடவும்.
எல்லா இடங்களிலும் பரவும் படி தடவவும்.
மாவை ஒரு குழி கரண்டி கொண்டு நன்கு கலக்கி விடவும்.
இப்போது குழிகளில் மாவை நிரப்பவும்.
இட்லி பானையில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் இட்லி தட்டை உள்ளே வைத்து மூடவும்.
ஆவியில் எட்டு நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

குழிகளிலிருந்து இட்லி ஒட்டிக்கொள்ளாமல் எடுக்க ஒவ்வொரு இட்லியின் ஓரத்தை சுற்றி நீர் விட்டு பிறகு தேக்கரண்டியால் எடுக்கவும். தேக்கரண்டியை அடிக்கடி தண்ணீரால் ஈரப்படுத்திக்கொள்ளவும்.

சோள இட்லி சோள இட்லி
சூடான சுவையான சோள இட்லி தயார்.
தக்காளி சட்னி அல்லது தேங்காய் சட்னி அல்லது சாம்பார் தொட்டுக்கொண்டு சாப்பிடவும்.
சோள இட்லி சோள இட்லி
குறிப்பு :
மாவு எடுத்து வைக்கும் பாத்திரம் பெரியதாக இருப்பது அவசியம்.
ஏனெனில் மாவு புளித்து எழும்பி இரண்டு மடங்காய உப்பி வரும்.

இட்லி பானையினுள் அல்லது குக்கரினுள்  இரண்டு அல்லது அதற்கு மேலும் ஒன்றன் மேல் ஒன்றாக தட்டுக்களில் மாவை ஊற்றி வேக வைத்து எடுக்கலாம்.
அவ்வாறு செய்யும் போது மேலே உள்ள தட்டிலிருந்து தண்ணீர் கீழே உள்ள தட்டின் இட்லியின் மேல் விழுந்து இட்லியை நச நசவென ஆகி விடும்.
அதை தடுக்க இட்லி தட்டில் மாவு நிரப்பிய பிறகு மாவின் மேலும் ஒரு ஈரமான துணியை விரித்து உள்ளே வைக்க வேண்டும். அப்போதுதான் மேல் தட்டிலிருந்து விழும் தண்ணீரை இந்த துணி உறிஞ்சிக்கொள்ளும்.





மற்ற உணவு வகைகள் :

குதிரைவாலி உப்புமா
குதிரைவாலி உப்புமா
குதிரைவாலி பொங்கல்
குதிரைவாலிபொங்கல்
குதிரைவாலி கொழுக்கட்டை
குதிரைவாலி கொழு..
காஞ்சீபுரம் இட்லி
காஞ்சீபுரம் இட்லி
கம்பு இட்லி
கம்பு இட்லி
கள்ளாப்பம்
கள்ளாப்பம்

தொட்டுக்கொண்டு சாப்பிட

தொட்டுக்க



இந்த சமையல் செய்முறை விளக்கம் மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.