Search This Blog

Friday, August 29, 2014

Modhakam - Dumpling

#மோதகம் - #கொழுக்கட்டை : இன்று விநாயகர் சதுர்த்தி தினம். அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துக்கள்.  மோதகம் செய்து விநாயகரை வழிபட்டு கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.
நான் மோதகம் செய்து கடவுளுக்கு படைத்து நாங்களும் சுவைத்து மகிழ்ந்தோம்.
இனி மோதகம் எவ்வாறு செய்யப்பட்டது என இங்கு காணலாம்.



தேவையான பொருட்கள் :
1/2 கப்                               அரிசி மாவு [ dry rice flour ]
3/4 கப்                               தண்ணீர்
1/4 Tsp                                உப்பு
1 Tsp                                  நெய்
1 Tsp                                  நல்லெண்ணெய்

மாவினுள் வைத்து மோதகம் - கொழுக்கட்டை செய்ய தேவையான பூரணம்.

செய்முறை :
மாவில் உப்பு, நெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கையினால் பிசறி விடவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கவும்.
பாத்திரத்தின் அடியில் சின்ன சின்ன குமிழ்கள் தோன்ற ஆரம்பித்து கொதி நிலைக்கு சற்று முன்னதாக அடுப்பை நிறுத்தி விடவும்.

இந்த சூடான தண்ணீரை மாவில் ஊற்றி கரண்டியால் கலக்கவும்.
தேவையான தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி கெட்டியான மாவாக பிசைந்து கொள்ளவும்.


கை பொறுக்கும் சூடு ஆறியபின் கையால் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

இரண்டு கைகளிலும் எண்ணெய் தடவிக்கொண்டு ஒரு உருண்டை மாவை இடது உள்ளங்கையில் வைத்து வலது கையினால் தட்டையாக தட்டவும்.
அதன் நடுவே ஒரு உருண்டை பூரணத்தை வைத்து சுற்றி மாவினால் மூடவும்.


மேலே கைகளால் அழுத்தி மேல் மாவில் ஓட்டைகளோ விரிசலோ இல்லாதவாறு மூடவும்.

தேவையான கொழுகட்டைகளை செய்து இட்லி தட்டின் மேல் எண்ணெய் தடவி அடுக்கவும்.


இட்லி பானையில் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் கொழுகட்டைகளை இட்லி பானையினுள் வைத்து ஆவியில் 3 முதல் 5 நிமிடங்கள் வேக விடவும்.


வெந்த பிறகு வெளியில் எடுத்து பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து அடுக்கவும்.

மேல் மாவு ஏற்கனவே சுடு தண்ணீர் விட்டு பிசைந்துள்ளதால் மிகக் குறைந்த நேரமே வேக வைத்தால் போதுமானது.


தேவையான நேரத்திற்கு மேல் வேக வைத்தால் உள்ளே வைக்கப்பட்டிருக்கும் வெல்ல பூரணம் தண்ணீர் விட ஆரம்பித்து விடும்.

இதே போல மாவினுள் கார பூரணத்தையும் வைத்து வேக விட்டு எடுக்கவும்.

பகவானுக்கு படைத்து இறை அருள் பெற்றபின் புசிக்கவும்!!

குறிப்பு :
கையில் தட்ட விருப்பப்படாதவர்கள் எண்ணெய் தடவிய இரு பிளாஸ்டிக் தாள்களின் நடுவே மாவை வைத்து தட்டையான கிண்ணத்தினால் அழுத்தி வட்ட வடிவமாக செய்த பின் மேலே கூறியுள்ள படி நடுவே பூரணம் வைத்து கொழுகட்டைகளாக்கவும்.








மேலும் சில சமையல் குறிப்புகள் 
முயற்சி செய்து பார்க்க

மோதகம்
மோதகம்
தேங்காய் பூரணம்
தேங்காய் பூரணம்
சோயா பூரணம்
சோயா பூரணம்
சோயா பூரண போளி
சோயா பூரண போளி
ஜவ்வரிசி சேமியா பாயசம்
ஜவ்வரிசி சேமியா பாயசம்
அமராந்தம் கொழுக்கட்டை
அமராந்தம் கொழுக்கட்டை




Thursday, August 28, 2014

Thaengai Pooranam - Coconut Sweet Stuffing

#தேங்காய்பூரணம் : விநாயகர் சதுர்த்தியின் போது சாமிக்கு படைக்க மோதகம் செய்யப்படுகிறது. மோதகம் என்பது மாவின் உள்ளே இனிப்பு பூரணம் அல்லது கார பூரணம் வைத்து கொழுக்கட்டையாக செய்து ஆவியில் வேகவைத்து எடுக்கப்படும் ஒரு பலகாரமாகும்.
இனிப்பு பூரணம் பொதுவாக தேங்காய், வெல்லம் மற்றும் ஏலக்காய் கொண்டு செய்யப்படும். சிலர் மேற்கூறிய பொருட்களுடன் கடலை பருப்பு கொண்டும் செய்வார்கள். நான் அதற்கு முற்றிலும் மாறாக மேலே கூறிய பொருட்களுடன் சோயா உருண்டைகளையும் சேர்த்து பூரணம் செய்துள்ளேன்.
இப்போது தேங்காய் பூரணம் எப்படி செய்வது என காண்போம்.


தேங்காய் பூரணம்

 தேவையான பொருட்கள் :
1/2 கப்                                       தேங்காய் துருவல்
1 Tbsp                                       வேக வைத்த கடலை பருப்பு [ முக்கால் பாகம் வெந்தது ]
1/2 கப்                                          வெல்லம்
3                                                  ஏலக்காய்
சிறிய துண்டு                        ஜாதிக்காய்
2 Tsp                                            சர்க்கரை
1 சிட்டிகை                                       உப்பு

செய்முறை :
ஏலக்காய் மற்றும் ஜாதிக்காயை சர்க்கரையுடன் சேர்த்து மைய பொடித்து வைத்துக்கொள்ளவும்.

நான் எடுத்துக்கொண்டுள்ள வெல்லம் மிகவும் சுத்தீகரிக்கப் பட்ட வெல்லமாகும். கற்களோ குப்பைகளோ அற்றது. அதனால் அப்படியே உபயோகித்துள்ளேன். அத்தகைய வெல்லம் கிடைக்காவிடின் மிகச் சிறிய அளவு தண்ணீரில் வெல்லத்தை கரைத்து வடிகட்டி கல் மற்றும் தூசிகளை அகற்றி விடவும்.

ஒரு அடிக்கனமான பாத்திரம் அல்லது non stick கடாயை அடுப்பின் மேல்  வைத்து சூடாக்கவும்.
முதலில் தேங்காய் துருவல் மற்றும் வெல்லம் சேர்த்து கிண்டவும்.


வெல்லம் தேங்காயிலிருந்து விடும் தண்ணீரால் இளகி வெல்லத்தை கரைக்கும்.


மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும்.


பின்னர் வேகவைத்த கடலை பருப்பை சேர்த்து கிளறவும்.


சூடாகி தள தளவென குமிழிகள் வர ஆரம்பித்ததும் தீயை முற்றிலுமாக குறைத்து விடவும்.

இதன் பின்னர் அவ்வப்போது கிளறி விடவும்.
தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டிய அவசியமில்லை.


சிறுது நேரம் ஆக ஆக தண்ணீர் சுண்டி கெட்டிபடும்.
நன்கு சுருள ஆரம்பிக்கும். ஒன்று சேர்ந்தாற்போல வந்தவுடன் ஏலக்காய் - ஜாதிக்காய் பொடியை சேர்த்து ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விடவும்.

ஒரு சுத்தமான ஈரமற்ற மூடியுடன் கூடிய பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.


சூடு ஆறிய பிறகு குளிர் சாதன பெட்டியில் 2 அ 3 நாட்களுக்கு பத்திர படுத்தலாம்.

இந்த பூரணத்தை அப்படியே உருண்டைகளாக உருட்டியும் சாப்பிடலாம்.
கொழுக்கட்டை செய்ய பயன் படுத்தலாம்.
போளி செய்தாலும் அருமையாக இருக்கும்.




மேலும் சில உணவு வகைகள் முயற்சி செய்து பார்க்க :

சோயா பூரணம்
சோயா
பூரணம்
போளி - சோயா பூரணம்
போளி - சோயா பூரணம்
போளி மாவு
போளி
மாவு
போளி - உருளை பூரணம்
போளி - உருளை பூரணம்
புளிக்கூழ்
புளிக்கூழ்





Sunday, August 24, 2014

Kovaikkai Curry

#கோவைக்காய் #கறி : சென்னையில்தான் முதன் முதலில் கோவைக்காயை சமைத்து சாப்பிடலாம் என அறிந்து கொண்டேன். தோட்டத்தின் வேலியில் இக்கொடிகளை காயுடன் பார்த்திருக்கிறேன். ஆனால் அவைகள் வாயில் வைக்க முடியாத அளவிற்கு மிகவும் கசப்பாக இருக்கும்.
இங்கு ராய்ப்பூரிலும் கோவைக்காய் கிடைக்கிறது. வெளி தோற்றத்தில் பர்வல் போன்றே இருந்தாலும் உள்ளே விதைகள் வித்தியாசமான முறையில் உள்ளது.
நான் இங்கு கோவைக்காயை கொண்டு கறி செய்வதெப்படி என விவரிக்க இருக்கிறேன்.

தேவையான பொருட்கள் :

கோவைக்காய்

200 கிராம்                     கோவைக்காய், வட்ட வடிவமாக நறுக்கவும்.
1 Tsp                                 சாம்பார் பொடி
2 சிட்டிகை                   மஞ்சள் தூள்
2 Tsp                                 எண்ணெய்
1/2 Tsp                              கடுகு
1 Tsp                                 உளுத்தம் பருப்பு

கோவைக்காய்

செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
கடுகு வெடித்த பின்னர் உளுத்தம் பருப்பை சேர்த்து வறுக்கவும்.
உளுத்தம் பருப்பு சிவந்தவுடன் மஞ்சத்தூள், வெட்டிவைத்த காய்கறிகள் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டிய பின்னர் சாம்பார் பொடி  மற்று உப்பு சேர்த்து கலந்து விடவும்.


மூடியினால் மூடி வேக விடவும்.
அவ்வப்போது திறந்து கிளறி விடவும்.
வெந்த பிறகு உப்பு சரி பார்த்து தண்ணீர் சுண்டும் வரை அடுப்பில் சிறிய தீயில்  வைத்து  பிரட்டி விடவும்.


தயாரான பின் ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
சுவையான ஒரு கார கறி தயார்.

கோவைக்காய் கறி

சாம்பார் மற்றும் ரசம் சாதத்துடன் சாப்பிட அருமையான கறி. கார கறியானதால் தயிர் சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.




மற்ற கறி வகைகள் முயற்சிக்க

பர்வல் கறி 





Wednesday, August 20, 2014

Tomato Chutney

#தக்காளிசாம்பார் : இந்த சாம்பாரை எங்கள் இல்லத்தில் தக்காளி சட்னி என்றுதான் குறிப்பிடுவது வழக்கம். பொதுவாக பருப்பு சேர்த்து செய்யப்படுவதை சாம்பார் என்றும் பருப்பு சேர்க்காமல் செய்யப்படுவதை சட்னி என்றும் நாங்கள் குறிப்பிடுவது வழக்கம்.
வெகு நாட்களுக்கு முன்பே தக்காளி சாம்பார் 1 செய்முறையை பதிவேற்றியுள்ளேன். பின் எதற்கு மற்றுமொரு முறை என முணுமுணுப்பது கேட்கிறது!!
இந்த முறை சிறிது நீர்க்க செய்யப்படும் முறையாகும். மேலும் கடைகளில் கிடைக்கும் டப்பிகளில் அடைத்துவைத்துள்ள  தக்காளி பழக்கூழ் [ tomato puree tetrapack ]  கொண்டு செய்யப்படும் முறையும் ஆகும்.
இனி எப்படி என பார்ப்போம்.

தக்காளி சாம்பார்


தேவையான பொருட்கள் :
1 பெரிய அளவு                              தக்காளி, துண்டுகளாக்கவும்.
1/2 கப்                                                 தக்காளி பழக்கூழ் [ tomato puree ]
1 மத்திய அளவு                              வெங்காயம், நறுக்கி வைக்கவும்.
3                                                           பச்சை மிளகாய், இரண்டாக கீறி வைக்கவும்
1/4 அங்குல துண்டு                      இஞ்சி, நசுக்கிகொள்ளவும்.
12                                                         கருவேப்பிலை
1/4 கப்                                                 கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது
1/4 கப்                                                 குடை மிளகாய் பொடியாக நறுக்கியது
1 Tbsp                                                   முளை கட்டிய பயறு [  இருந்தால் ]

தேவையான பொடிகள் :
2 சிட்டிகை                                       மஞ்சத்தூள்
1/4 Tsp                                                 சிகப்பு மிளகாய் தூள் [ விருப்பமானால் ]
1 Tsp குவித்து                                  சாம்பார் மிளகாய் தூள்
1/2 Tsp                                                 சோள மாவு
1 1/4 Tsp                                              உப்பு [அட்ஜஸ்ட்]

தாளிக்க :
1/2 Tsp                                                 கடுகு
2 Tsp                                                    கடலை பருப்பு
1/4 Tsp                                                 பெருங்காய தூள்
2 Tsp                                                    எண்ணெய்

செய்முறை :
அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
எண்ணெய் சூடேறியதும் கடுகை வெடிக்க விட்டு பருப்பை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
பின்னர் பெருங்காய தூள் சேர்த்தவுடன் மஞ்சத்தூள், பெருங்காய தூள் மற்றும் சிகப்பு மிளகாய் தூளை சேர்க்கவும்.

உடனேயே கருவேப்பிலை, பாதி கொத்தமல்லி தழை, மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கவும்.

அதன் பின் வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வரை வதக்கவும்.

இப்போது குடை மிளகாய் துண்டுகளை 1 நிமிடம் வதக்கவும்.
அதன் பின் பயறை சேர்த்து  பிரட்டு பிரட்டி விடவும்.

கடைசியாக சாம்பார் மிளகாய் தூளை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி விடவும்.
இப்போது தக்காளி பழக்கூழை சேர்க்கவும்.
2 முதல் 2 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.

தீயை அதிக படுத்தி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கொதிக்க ஆரம்பித்தவுடன் தீயை நன்கு குறைத்து விடவும்.
5 - 7 நிமிடங்கள் அடுப்பில் கொதித்து கொண்டே இருக்கட்டும்.

கடைசியாக சோள 1மாவை 1/8 கப் தண்ணீரில் கலந்து கொதிக்கும் சட்னியில் ஊற்றவும்.
கிண்டி விடவும். உப்பு சரி பார்க்கவும்.
சூப் போன்ற பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு கறுவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தூவவும்.

தக்காளி சாம்பார்

அருமையான தக்காளி சாம்பார் தயார். வாசனை மூக்கை துளைக்குமே!
இன்னும் ஏன் காத்து கொண்டிருக்கிறீர்கள்!
இட்லியை தட்டிலோ அல்லது கிண்ணத்திலோ வைத்து அதன் மேல் இரண்டு கரண்டி தக்காளி சாம்பார் விடவும். 1 Tsp நல்லெண்ணெய் விட்டு சுவைக்கவும்.
என்ன!! இட்லி தீர்ந்து போய் விட்டதா??!!?? 

நான் இன்னும் இரண்டு இட்லியை தக்காளி சட்னியுடன் சாப்பிடலாம் என்றிருந்தேனே!! ம்ம்.. ம்...க்கும்..!!




மற்றொரு முறை :
தக்காளி சாம்பார் 1


Tuesday, August 19, 2014

Cabbage Lentil

#முட்டைகோஸ்கூட்டு : முட்டைகோஸ் [#Cabbage ] தாவரத்தின் மேல் நுனியில் கெட்டியான பந்து போன்ற விரியாத இலைகளின் தொகுப்பே முட்டைகோஸ் காயாகும். இதனை காய் என்று சொல்வதை விட இலை என்றே குறிப்பிட வேண்டும்.
இதில் வைட்டமின்கள் மற்றும் உடலுக்கு இன்றியமையாத தாதுக்கள் அடங்கியுள்ளன. முக்கியமாக நார் சத்து மிகுந்து காணப்படுகிறது. இதன் கலோரி அளவு குறைவாக உள்ளதால் உணவு கட்டுப்பாடு அனுசரிப்பவர்களுக்கு ஏற்ற உணவாகும். கொலஸ்ட்ரால் அறவே இல்லாத உணவுபொருளும் ஆகும்.
இதனை பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ உணவில் சேர்த்துகொள்ளலாம்.
பச்சையாக இருக்கும் போது கூட்டு செய்தால் மிக மிக ருசியுடனும் வாசனையாகவும் இருக்கும்.
இனி செய்முறையை காணலாம்.

முட்டைகோஸ் கூட்டு

தேவையான பொருட்கள் :
1/2 கப்                                        முட்டைகோஸ், மெல்லியதாக நறுக்கியது
2                                                  பச்சை மிளகாய், நீளமாக கீறவும்
1/2 அங்குல துண்டு             இஞ்சி, துண்டுகளாக்கி நசுக்கவும்
1 Tbsp                                          வெங்காயம் பொடியாக நறுக்கியது
3 Tbsp                                          துவரம் பருப்பு வேக வைத்தது
1/2 Tsp                                          உப்பு

அரைக்க தேவையான பொருட்கள் :
3 Tsp                                             தேங்காய் துருவல்
1/4 Tsp                                          சீரகம்
1/4 Tsp                                          அரிசி மாவு
தாளிக்க :
1/2 Tsp                                        கடுகு
1 1/2 Tsp                                     கடலை பருப்பு
1/2 Tsp                                         எண்ணெய்

கொத்தமல்லி தழை மேலே தூவ தேவையான அளவு.

செய்முறை :
மிக்சியில் அரைப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.


குக்கரில் மேலே கொடுக்கப்பட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் போட்டு 1/2 கப் தண்ணீர் விடவும். மேலும் வேகவைத்த பருப்பு மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு வெயிட் வைத்து ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவும்.



உடனே ஆவியை வெளியேற்றி விட்டு திறக்கவும்.

அரைத்து வைத்துள்ள தேங்காயைசேர்த்து 
மீண்டும் அடுப்பின் மேல் மிதமான தீயில் மூன்று நிமிடங்கள் அல்லது எல்லாம் ஒன்று சேர்ந்து வரும் வரை கொதிக்க விடவும்.


பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகை வெடிக்க விட்டு கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து கூட்டின் மேல் கொட்டவும்.
கொத்தமல்லி தழை மேலே தூவவும்.

முட்டைகோஸ் கூட்டு

சாம்பார் மற்றும் ரசம் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

சூடான சாதத்தில் போட்டு ஒரு துளி நெய் விட்டு பிசைந்து வெங்காய வத்தல் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் .... ம்ம்ம்.... அதன் ருசியே தனிதான்!!.. ஊறுகாயுடனும் நன்றாக இருக்கும்.




மற்ற கூட்டு வகைகள் முயற்சி செய்து பார்க்க

முருங்கைக்காய் கூட்டு 


Idly Stir Fry

#இட்லிவதக்கல் : #இட்லிஉப்புமா வைதான் குறிப்பிடுகிறேன். உப்புமா என்றாலே சிலருக்கு அலர்ஜி என்பார்கள். அதனால்தான் பெயரை வித்தியாசமாக வைத்திருக்கிறேன்.
காலை #இட்லி மீந்து போயிருந்தால் இரவில் அதனை உப்புமா செய்து காலி செய்வதுதான் தமிழரின் பண்பாடு?!! சிலர் இட்லி உப்புமாவா என்று அலறி அடித்துக் கொண்டு ஓடுவார்கள்!! ஆனால் சூடாக செய்தவுடன் சாப்பிட்டால் மிக மிக அருமையான சிற்றுண்டியாகும்.
ஆறிய இட்லியை  நன்கு உதிர்த்தால் ப்ரெட் தூள் போல பொலபொலவென உதிரும். பின்னர் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், கறுவேப்பிலை சேர்த்து வதக்கி உதிர்த்த இட்லியை சேர்த்து பிரட்டி எடுத்தால் இட்லி உப்புமா தயார்.
இங்கு நான் வசிக்கும் ராய்ப்பூரில் இட்லி புழுங்கல் அரிசி கிடைப்பதில்லை. அதனால் கடைகளில் கிடைக்கும் புழுங்கல் அரிசியுடன் பச்சரிசி மற்றும் சாப்பாட்டிற்கு உபயோகிக்கும் அரிசி ஆகியவற்றை கலந்து நான் இட்லி செய்து கொண்டிருக்கிறேன். இட்லியாக சாப்பிட மிருதுவாக இருக்கும்.
ஆனால் இந்த இட்லியை உதிர்க்க முடிவதில்லை. உதிர்க்க முயற்சித்தால் கைகளில் பிசின் போல ஒட்டிக்கொள்ளும். மாவு போல ஆகிவிடும்  அதனால் வெகு நாட்களாகி விட்டது நான் இட்லி உப்புமா செய்து!!....
இன்று எப்படியாவது செய்து சாப்பிட வேண்டும் என்று உறுதியாக இருந்தேன்.
பச்சை காய்கறிகளும் காளானும் [ mushroom ] இருந்ததால் இரவு உணவிற்கு செய்ய முடிவு செய்து செயலில் இறங்கி வெற்றியும் பெற்று விட்டேன்!!
சும்மா என்னையே நானே பாராட்டிக்கொள்ள கூடாது. ஆனாலும் சொல்கிறேன், மிக மிக அருமையாக வந்திருந்தது.
இதற்கு மேலும் நீட்டி முழக்காமல் செய்முறையை காண்போம்.


தேவையான பொருட்கள் :
4                                                   இட்லி
1/2 கப்                                         முட்டைகோஸ் பொடியாக நறுக்கியது
1/4 கப்                                         குடைமிளகாய் பொடியாக நறுக்கியது
1/4 கப்                                         காரட் துருவியது
10                                                 கறுவேப்பிலை, பொடியாக நறுக்கவும்.
2                                                   பச்சை மிளகாய், நீளவாக்கில் கீறி வைக்கவும்.
1/4 கப்                                         கொத்தமல்லி பொடியாக நறுக்கியது
6                                                   கொடி பசலை, பொடியாக நறுக்கவும்.
3                                                   பட்டன் காளான், பொடியாக நறுக்கவும்
1 Tsp                                            உப்பு [ அட்ஜஸ்ட் ]

தாளிக்க :
1/2 Tsp                                         கடுகு
1/2 Tsp                                         கருஞ்சீரகம்
1 Tsp                                            உளுத்தம் பருப்பு
1/4 Tsp                                         பெருங்காய தூள்
1/4 Tsp                                          மஞ்சத்தூள்
2 Tsp                                            நல்லெண்ணெய்

செய்முறை :
இட்லியை ப்ரெட் வெட்டும் கத்தி கொண்டு ஒரே அளவுள்ள சதுர துண்டுகளாக நறுக்கி வைக்கவும். கத்தியை தண்ணீரில் அவ்வப்போது நனைத்தெடுத்து வெட்டினால் ஒட்டாமல் நறுக்க முடியும்.
இட்லி துண்டுகளை தனியே எடுத்து வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி மிதமான தீயில்  சூடாக்கவும்.
கடுகு, சீரகம் தாளித்து பின்னர் உளுத்தம் பருப்பை சேர்த்து சிவக்கும் வரை வறுக்கவும்.
எண்ணெயில் மஞ்சதூளை சேர்த்த பின்னர் கொத்தமல்லி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, முட்டைகோஸ் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு ஓரிரு நிமிடம் வதக்கவும். முட்டைகோசுக்கு தேவையான அளவு உப்பு மட்டும் சேர்த்து கலந்து விடவும்.


இலேசாக தண்ணீர் தெளித்து தீயை குறைத்து முக்கால் பாகம் வேகும் வரை மூடி வைக்கவும்.
முக்கால் பாகம் வெந்தவுடன் காரட் குடை மிளகாய் மற்றும் அதற்கு தேவையான உப்பு சேர்த்து குடை மிளகாய் வாசனை வரும் வரை வதக்கவும்.


கடைசியாக காளான் [ mushroom ], கொடி பசலை கீரை சேர்த்து ஓரிரு மணித்துளிகள் அதிக தீயில் வதக்கவும்.


காரம் அதிகமாக விரும்புபவர்கள் பச்சை மிளகாய் சாஸ் தேவையான அளவு சேர்த்துக்கொள்ளவும்.
இப்போது உப்பு மற்றும் இட்லி துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
உப்பு சரி பார்க்கவும்.
இட்லி துண்டுகளின் மேல் காய்கறி மசாலா நன்கு படிந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
சுவையான இட்லி ஸ்டிர் ப்ரை தயார்.


இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையே இல்லை.
அப்படியே சாப்பிடலாம்.


கட்டாயம் தொட்டுக்கொள்ள வேண்டுமெனில் தக்காளி சாஸ் உபயோகிக்கலாம்.





மற்ற உணவு வகைகள் :

குதிரைவாலி உப்புமா
குதிரைவாலி உப்புமா
குதிரைவாலி பொங்கல்
குதிரைவாலிபொங்கல்
குதிரைவாலி கொழுக்கட்டை
குதிரைவாலி கொழு..
சோள இட்லி
சோள இட்லி
கம்பு இட்லி
கம்பு இட்லி
காஞ்சிபுரம் இட்லிி
காஞ்சிபுரம் இட்லிி

தொட்டுக்கொண்டு சாப்பிட

தொட்டுக்க



இந்த சமையல் செய்முறை விளக்கம் மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.